ஒரு வாரத்துக்கு ஊரும் சுத்தியாச்சு.. பொங்கலும் சாப்பிட்டாச்சு.. பொங்கல் படங்களையும் பார்த்தாச்சு..
படத்தை தனி தனியாக மேயப் போவதில்லை. நம் நண்பர்கள் ஒவ்வொன்றையும் நன்றாக அலசி காயப்போட்டுட்டாங்க.. எல்லா படங்களுக்கும் சேர்த்து ஒரே பதிவுதான்!
ஆழ்வார்
'வரலாறு' படைத்த 'தல'யின் அடுத்த பரிமாணம். புது இயக்குனரின் கீழ் ஆழ்வாராக வந்து சமுதாயத்தில் களை புடுங்குகிறார். ஐயராக இருந்தவர் பிண அறையில் ஏன் வேலை செய்கிறார் என்ற காரணம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு அவதாரமாக வேஷம் போட்டுக்கொண்டு போவதிலும் லாஜிக் இடிக்கிறது. போலிஸ் கொலைகாரனை கண்டுப்பிடிப்பதில் பெரிய பரப்பரப்பு இல்லை.
அதிகம் பேசாமல், முகத்தை இறுக்கி வைத்துக் கொண்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சியில் சிரித்து மனதை அள்ளுகிறார். பாலாவின் 'நான் கடவுள்' படத்திலிருந்து தான் நீக்கப்பட்டதை ரொம்பவும் நினைத்து வருந்தியிருக்கார் நம்ம தல. அதான், "கடவுள்.. நான் கடவுள்" என்ற வசனங்களும், கடவுளாக அவதாரம் எடுத்து கெட்டவர்களை அழிக்கிறார் போலும்.
அசின் - கீர்த்தி சவ்லா - படத்தில் அஜித்துக்கு 2 நாயகிகள். ஆனாலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை. விவேக்கின் அதே பழைய பானி காமெடி - சிரிக்க முடியவில்லை. பாடல்களும், பாடல் காட்சிகளும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.
செல்லா இயக்குனராக ஒரு பலமான கதையை இறக்கியிருக்கலாம். அஜித் தைரியமாக ஒரு புது இயக்குனரை நம்பி செல்லாவுக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார். அசின் இனி கதையை கேட்டு, தீர விசாரித்து ஒப்புக்கொள்வது நன்று.
போக்கிரி
தெலுங்கு ரீமேக் என்பதால் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலாத படம்தான். ஏற்க்கனவே நான் மகேஷ் பாபு - இல்லியனா நடித்த போக்கிரியை பார்த்தவள்.
ஆனாலும், தமிழில் கொஞ்சம் அதிகப்படியாக மசாலாக்களை சேர்த்து ருசியான ஒரு சமயலை செய்து கொடுத்திருக்கிறார் பிரபு தேவா. விஜயின் நடை - உடை - பாவனை.. அனைத்தும் மகேஷுக்கு சொந்தமானவை. அசின் - இல்லியானா கேரக்டர் அச்சு அசல் அதேதான்.
விஜய் க்ளைமேக்ஸ் பகுதியில் போலிஸ் ட்ரஸ்ஸில் பார்க்க சகிக்கலை. காக்கி சட்டை இவருக்கு பொருத்தமில்லை. மகேஷுக்கும் இது பொருத்தமில்லைதான். அதான் அவர் பிரகாஷ் ராஜை (தெலுங்கிலும் இவரேதான்) கொல்ல போகும்போது காக்கி சட்டையில் போகவில்லையே!!! இவர் மட்டும் ஏன்? ரெண்டு படத்துக்கும் வித்தியாசம் காட்ட இவர் எடுத்த முயற்சியோ???
அசின் - விஜய் காதல் ரசிக்கும் ரகம் (தெலுங்கு ஜெராக்ஸ்தான்).. அதைவிட, வைகைபுயல் வடிவேலு குங்ஃபு மாஸ்டராய், பிச்சைகாரனாய், பல்லனாய், சுட்டும் விழி சுடரே பாட்டுக்கு அசினுடன் ஆடும் சன்ஜய் ராமசாமியாய் கலக்கிட்டாரு.
பிரகாஷ் ஜெயிலில் பண்ணும் கூத்து ரசிக்கலாம். ஆனாலும் இதுவும் தெலுங்கிலிருந்து சுட்டதுதான். அசின் அழகு. கொடுத்த ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார்.
படத்தில் இன்னொரு ப்லஸ் பாடல் காட்சிகள். பிரபு தேவா அல்லவா!!! நீ முத்தம் ஒன்று, வசந்த முல்லை பாடலும், காட்சிகளும் அருமை.
மொத்தமாக சொன்னால், தெலுங்கு போக்கிரியை தமிழ் போக்கிரி சாப்பிட்டு முழுங்கிவிட்டார் என்று சொல்லலாம். ஆனாலும், விஜய் இப்படி ரீமேக்களை செய்து மற்றவர்களின் வியர்வையை தன் வெற்றியாகிக்க கூடாது.
கெட்டவன் என்ற பட்ட பெயரை ரொம்பவும் பெருமையாக நினைப்பவன்.. தன் மாமாவை யார் மரியாதை குறைவாக பேசினாலும், அவர்களை உண்டு இல்லைன்னு பண்ணும் இளஞனாக பரணி @ விஷால். குடும்ப பாசத்தையும் நெசத்தையும் வலியுறுத்தும் இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கும் குறைவில்லை.
விஷால் முதன் முறையாக இந்த படத்தில் காமெடி ட்ராக்கையும் செய்திருக்கிறார். பானுவை பழி வாங்குவதற்க்காக சென்னைக்கு கூட்டிட்டு வந்து, ஆனால், பானு நீ ஐ லவ் யூ சொன்னால்தான் திரும்புவேன் என அடம்பிடிக்க, விஷால் மாயி ஸ்டைலில் பேசுவதும், கல்யாண வீட்டுக்கு வழி கேட்கும் நதியாவை விஷால் இறந்துபோன கல்யாணம் வீட்டுக்கு வழி காட்டி அங்கே நடக்கும் கூத்துக்களும் அருமை.
பிரபு - ரோஹினி (அண்ணன் தங்கையாகவும்), நாசர் - நதியா - நிழல்கள் ரவி - ஆகாஷ் (சகோதரர்களாகவும்), விஜயகுமார் இவர்களது தந்தையாகவும், பிரபு - நதியா (பிரிந்து வாழும் தம்பதியர்களாகவும்), விஷால் (ரோஹினியின் மகனாகவும்), பானு (நதியா - பிரபுவின் மகளாகவும்), மனோரமா (பிரபு - ரோஹினியின் தாயாகவும்) --> ஒரு பெரிய பட்டியலே நடித்திருகின்றனர்.
"ஒரு வார்த்தை கேட்க ஒரு வருடம் காத்திருந்தேன்" என்ற இந்த பாடலை வைத்து கஞ்சா கருப்பு செய்யும் கமெடியும் ரசிக்க வைக்கிறது.
படத்தின் கிளைமெக்ஸில் எப்படி நதியா திருந்துகிறார்? விஷால் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தாலும், அந்த கொலை செய்தது அவரில்லை.. பிறகு யார்தான் செய்தது?? ஜெயிலில் இருந்து விடுதலையாகும் விஷாலை கொலை செய்ய நாசரும், விஜயகுமாரும் திட்ட போடுகின்றனர்.. அது நிறைவேறியதா? விஷால் - பானு திருமணம் நடந்ததா??
நான் பார்த்த இம்மூன்று படங்களில் தாமிரபரணிக்குதான் முதலிடம்.
குரு
இன்னும் பார்க்கவில்லை.. அதனால், இந்த லிஸ்டில் சேர்க்கப்படவில்லை.
ஒலிச்சித்திரம்
இது பொங்கல் ரிலீஸ் இல்லை. 2005-ஆம் ஆண்டு மலயாளத்தில் வெளியான பை தே பீப்பல்(By The People) என்ற படத்தின் டப்பிங். பெயர் எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதா? 4 தே பீப்பல் [4 The People] (மலயாளம்) / 4 ஸ்டூடண்ஸ் [4 Students] (தமிழ்)-இன் இரண்டாம் பகுதிதான்.
படத்தின் முதல் சில காட்சிகள் 4 ஸ்டூடண்ஸின் க்ளைமேக்ஸ் காட்சிகள். அவர்கள் போலிசாரால் அடிப்பட்டு ஜீப்பில் ஏர்ரப்படும் நேரத்தில் இன்னொரு 4 பேர் அந்த கெட்டவனை சுட்டு விட்டு ஓடுவார்கள். நினைவிருக்கிறதா? அந்த 4 பேர்தான் இந்த படத்தின் நாயகர்கள்.
சித்திரம் பேசுதடி நரேன் இந்த 2 படத்திலும் இவர்களை பிடிக்கும் கமிஷ்னராக வருகிறார். ஆனால் ஒரு சின்ன திருப்பம்.. இந்த படத்தில், இவர்தான் அந்த பை தே பீப்பல் குழுக்கு உதவுகிறார்.
இந்த படத்திலும் பை தே பீப்பல் இறந்துவிடுகின்றனர்.. இவர்களை ஈடுகட்ட இன்னொரு 5 பேர் வருகின்றனர்.. 3 கல்லூரி மாணவர்கள் (2 ஆண் & 1 பெண்), 1 ஆட்டோ ட்ரைவர், 1 கூலி வேலை செய்பவன். இவர்களும் அவர்களது கடைசி கொலையை செய்ய திணற, எப்படி 4 தே பீப்பல் வந்து அதை முடிகின்றனர் என்பதுதான் க்ளைமேக்ஸ்..