Tuesday, June 17, 2008

தசாவதாரம் - ஒரு அறிவியல் ஆராய்ச்சி


இந்த படத்தை பற்றி எழுத இன்னும் கொஞ்சம் இருக்கு. கொஞ்சம் சைண்டிஃபிக் டியோரிக்குள்ளே போவோம். இந்த படம் முழுதும் Chaos Theory ~ Butterfly Effect பற்றிதான்னு சொல்லியிருக்கார். இதுக்காக ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்து போறது மாதிரி க்ராஃபிக்ஸ் பண்ணது எல்லாம் சின்ன பிள்ளை தனமால இருக்கு. ஆனால், கமலோட புத்திசாலித்தனம் இதுல எங்கே வருதுன்னா.. கதைக்கு திரைக்கதை எல்லாம் பண்ணின பிறகு.. இல்ல கதை போன போக்குல போன பிறகு.. கதையை Chaos Theory-ஐ கதை கருவோடு மேட்ச் ஃபிக்ஸிங் செய்திருக்கார். சுருக்கமா சொன்னால் இந்தியாவில் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு.. அமேரிக்காவில் சூறாவளியை உண்டாக்கலாம் (!!).

ஆனால் இந்த டியோரியை சரியா சொல்லிய படம் அந்நியன். யாரோ எங்கேயோ பண்ற தப்பு.. வேற யாரையோ சாக அடிக்கலாம். அப்படிங்கிறதை விக்ரமோட குட்டி தங்கச்சி சாகுற காட்சியில் நல்லாவே சொல்லியிருப்பாங்க (நன்றி சுஜாதா). ஒரு மாதிரியான சங்கிலி தொடர் (நிகழ்ச்சி)தான் இதுவும்.

[The flapping of a single butterfly's wing today produces a tiny change in the state of the atmosphere. Over a period of time, what the atmosphere actually does diverges from what it would have done. So, in a month's time, a tornado that would have devastated the Indonesian coast doesn't happen. Or maybe one that wasn't going to happen, does. (Ian Stewart, Does God Play Dice? The Mathematics of Chaos, pg. 141)]

ஒரு சின்ன எடுத்துக்காட்டு... எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா எனக்கு கவலையாய் இருக்கும். ஆபிஸ்ல வேலை ஓடாது. நான் வேலை செய்யலைன்னா என் டீம் மெம்பர்ஸும் வேலை செய்ய மாட்டாங்க.. (இல்லாட்டியும்... :-))).. அதனால ப்ராஜெக்ட் மேனேஜர் டென்ஷன் ஆவாரு. அவரு டென்ஷன் ஆனா அவரு பொண்டாட்டியை திட்டுவாரு. பொண்டாட்டி அவங்க ஆபிஸ்ல சரியா வேலை செய்யாமல் இருப்பாங்க/ இருக்கலாம். அவங்க ஆன்சைட் டேமேஜர் டென்ஷன் ஆகலாம். அதுனால யாரோ ஒரு அமேரிக்கன் கோபப்படலாம். எங்கேயோ இருக்கிற எங்க அம்மாவுடைய ஹெல்த் வேற எங்கேயோ பார்த்தால் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இல்லாதவங்கலா இருப்பாங்க. இந்த 10 கமல்களும் யாரும் ரத்த சம்பந்தம் கிடையாது. 10 பேரும் வேற வேற இடத்துல இருக்கிறவங்க. இங்கேதான் இருக்கு கமலுடைய புத்திசாலித்தனம். Of course Sujatha was with him to back him with Tech-knowledgy.

Chaos Theory-ஐ கொஞ்சம் ஆழமா பார்த்தால் என்ன சொல்லுது? any dynamic system.. நம்ம சமூதயத்தை இல்ல ஒரு ப்ராஜெக்ட் டீம் இல்ல ஒரு க்ரிக்கேட் டீம் இல்ல ஒரு உலகத்தையே எடுத்துக்குவோமே.. இது எல்லாமே டைம் மாற மாற அதோட 'state'.. ஹ்ம்ம்.. எப்படி சொல்லலாம்? இயல்பும் மாறிக்கிட்டே இருக்கும். ஆனால் இந்த இயல்பின் மாற்றங்கள் எல்லாமே அந்த சிஸ்டத்துக்கு இருக்கிற ஆரம்பக் கால கண்டிஷன்ஸை பொருத்துதான் இருக்கும். இந்த கண்டிஷன்ஸ் மாற மாற.. 'State'-உம் கண்ணா பிண்ணான்னு (random) மாற வாய்ப்புகள் இருக்கு. கடைசி ஓவர்ல ஹர்பஜன் வந்து நாலு சிக்ஸ் அடிக்கிறது போலத்தான். It's depends on latest pitch condition, top order batsmen's score and so on. ஆனால் அந்த முதல் கண்டிஷன் எப்படி செட் ஆகுதுன்னு எல்லாம் இப்ப கேட்க கூடாது. அதுதான் கடவுள் அல்லது இயற்கையின் விளையாட்டு. இதைத் தான் படத்தோட main theme-ஆ எடுத்திருக்காங்க.

இந்த படத்தின் மூலமா அவர் என்ன சொல்ல வர்றாருன்னு பார்த்தால், இதுதாங்க என்னோட சிற்றறிவுக்கு எட்டுனது. விஷயம் தெரிஞ்சவங்க என்னை திருத்தலாம்.

12-ஆம் நூற்றாண்டுக்கும் 21-ஆம் நூற்றாண்டுக்கும் உள்ள கணேக்ஷன்:

12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் தூக்கி கடலில் போட்ட சிலை கடலுக்கடியில் இருக்கும் ப்லேட்ஸ்களை (பூமியின் அடித்தட்டுகள்ன்னு சொல்லலாமா?) டிஸ்டர்ப் பண்ணதால கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்ப்பட்டு 21-ஆம் நூற்றாண்டில் ஒரு சுனாமியா உருவாகுது - Butterfly Effect! (21-ஐ புரட்டி போட்டால் 12.. அட அட அட என்ன கண்டுப்பிடிப்பு!). சோழன் தூக்கி போட்ட சிலை கடலுக்கடியில் இருக்கும் ப்ளேட்ஸ்களை டிஸ்டர்ப் பண்ணியிருக்கலாம் (Butterfly effect!Theory of Plate Tectonics). இதுவே 21-ஆம் நூற்றாண்டில் மாபெறும் சுனாமிக்கு காரணமாய் இருந்திருக்கலாம். இந்த சுட்டியை பார்த்தால் இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் கிடைக்கும். இதை பற்றியும் கமல் ஒரு இடத்துல சொல்லுவார்.

http://en.wikipedia.org/wiki/Plate_tectonics

Butterfly effect + Chaos Theory விரிவாக:

- 10 கேரக்டர்கர்களில் ராமனுஜத்தை தவிர்த்தால், 9 பேரும் 21-ஆம் நூற்றாண்டில் இருக்காங்க. 9 கமல்களும் வெவ்வேறு இடங்களில் இருக்காங்க. இந்த இரண்டு theories-உம் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்ட பிறகு படத்தோட திரைக்கதையை பார்த்தால்.. Yes, It's world class!

- 12-ஆம் நூற்றாண்டில் சோழன் சிலையை தூக்கி கடலில் போடுறாரு ( இது எல்லாம் உண்மையா பொய்யாங்கிறது வரலாறு தெரிஞ்ச புண்ணியவர்கள்தான் சொல்லணும்). மேலே சொன்னது போல ப்ளேட்ஸ் டிஸ்டர்ப் ஆகியிருக்கலாம். இந்த டைனமிக் மாற்றங்கள் நடைப்பெறுவதுக்கு பல பல வருஷங்கள் எடுத்திருக்கு. இப்போ வர்றாரு இந்த நூற்றாண்டு கமல் கோவிந்த் & கோ. எதையோ கண்டுபிடிக்க போய் ஒரு மிகப் பெரிய அபாய வைரஸை கண்டுபிடிச்சிருக்காரு. அவரோட டீம்லேயே இருக்கிறவங்க அதை கெட்டவங்களுக்கு விற்க முயற்சி பண்றாங்க. கோவிந்தை காப்பாத்த வந்த யூகாவுக்கும் ஃப்லேட்சருக்கும் நடுவில் நடக்கும் சண்டையில் யுகா கொல்லப்படுகிறார். யூகா சீனக் கமலின் மகளானதால் அவர் கோவிந்தை கொலை பண்றதுக்காக தேட ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் அந்த Vial (வைரஸ்) இந்தியாவுக்கு வந்து சேர துரத்தல் தொடர்கிறது. கமல் பால்ராம் இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்றாரு. அவரோட கேர்லெஸ்ஸினால் கமல் ப்லேட்சர் கோவிந்தை கடத்துறார். எப்படியோ தப்பிச்ச கோவிந்த் அந்த வைரஸ் கிருஷ்ணவேணி பாட்டிக்கு கிடைத்து தெரிஞ்சு அவரை தேடி போகிறார். பாட்டி அதை பெருமாள் சிலை உள்ளே போட்டுடுறாங்க. துரத்தல் சோழ மண்டபம் வரை தொடர்கிறது. சந்தான பாரதி & கோ அங்கே மணல் கொள்ளை பண்ணிட்டு இருக்காங்க. மணல் கொள்ளையை தடுக்க கமல் பூவராகன் அங்கே வர்றார். இவரால் (இவரை அறியாமல்) கோவிந்த் தப்பிக்கிறார். ஆனால் வழியிலே ஒரு முஸ்லிம் குடும்பத்து வேனுடன் விபத்துக்குள்ளாகிறார். கோவிந்த் கமல் கலிபுல்லா கான் குடும்பத்துக்கு உதவ, கலிபுல்லா கான் கோவிந்துக்கும் உதவுகிறார். இப்போ உள்ளே வர்றார் அவ்தார் சிங். இவரோட கேன்ஸர்ன்னு ஒரு ஐஸ் பெட்டி நிறய மருத்துவர் மருந்துகள் கொடுக்கிறார். பெட்டி கோவிந்துடைய பெட்டியோடு மாறுகிறது. புஷ் அவருடைய பவரை பயன்படுத்தி அனுப்பட்ட courier விமானத்தை திரும்ப அமேரிக்காவுக்கே வரவழைத்திருந்தால் ஃப்லேட்சர் அப்பவே கோவிந்தை கொன்றிருப்பான். கதை இந்தியா வரை பயனப்பட்டிருக்காது. கோவிந்துக்கு அந்த வைரஸை கொல்ல NaCl தேவைப்படுது & கடல் NaCl-ஆல் நிறைந்திருக்கிறது. இதே கடல்தான் 12-ஆம் நூற்றாண்டில் பெருமாள் சிலையினால் கடலுக்கடியில் உள்ள ஃப்ளேட்டுகள் மாற்றமடைந்து சுனாமியை உருவாக்குது.

இந்த கடவுள் / சக்தி இருக்கா இல்லையா? இது ஏன் இப்படி நடக்குது? கடவுள் எதாவது பண்ணலாமே? ஏன் சுனாமி வருது?

அசினுக்கு 'பெருமாள்தான் எல்லாத்தையும் காப்பாத்துறார்'..
கமலுக்கு இது 'Chaos Theory'
ஆதிக்கவாதிக்கு இது எல்லாம் பெருமாளோட வேலை
நாத்திகவாதிக்கு இது Pure Science.. Butterfly effect.

யப்பா சாமி, தலை சுத்துது. Hats off to கமல்.. பாஸ், நீங்க பண்ணின கதை, திரைக்கதையிலேயே இதுதான் பெஸ்ட்டூ. ஆனால் நீங்க பண்ணின screen presenceல இது அவ்வளோ நல்லா இல்ல. சுஜாதா உங்க கூட இருந்திருந்தால் இன்னும் விஷயத்தை சிம்பளா சொல்ல முயற்சித்திருக்க முடியும். B & C செண்டர் மக்களுக்கு இது எந்த அளவுக்கு போய் சேறும்ன்னு தெரியல. நிறைய விஷயங்களை உள்ளே கொண்டு வந்து ரொம்ப காம்ப்லேக்ஸா திரைக்கதை பண்ணியிருக்கீங்க. Einstein சொன்னது போல "An Intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius -- and a lot of courage -- to move in the opposite direction". உங்களை கலைஞானி, உலக நாயகன்னு சொல்றாங்க. அதுக்காக உங்களை இண்டலிஜெண்ட் ஃபூல்ன்னும் சொல்லல. இன்னும் பெட்டரா நீங்க பண்ணியிருக்க முடியும்ன்னு தோணுது. ஒரு பெரிய அட்வாண்டேஜ் என்னன்னன்னா நிறைய பேர் இப்போ Chaos Theory, Butterfly effect படிக்கிறாங்க. என்னையும் சேர்தது.

ரவிவர்மன் அவரோட வேலை சூப்பரா செஞ்சிருக்கார் ( ரோபோக்காக காத்திருக்கேன்). கலை இயக்குனர், எடிட்டர், BGM கம்போசர் தேவி ஸ்ரீபிரசாத் (பேசாமல் இவரே படம் முழுதும் இசையமைச்சிருக்கலாம்), க்ராஃபிக்ஸ் வேலைகள் (சென்னையில என் நண்பன் ஆபிஸ்லதான் பண்ணாங்க).

மை ஃபிரண்ட், இதையும் compile பண்ணி உங்க ப்ளாக்லேயே போடுறீங்களா? முடியுமா? ஏனென்றால், நீங்கதான் நல்லவங்க, வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க.

பி.கு: என்ன முழிக்கிறீங்க மக்களே? இந்த பதிவும் நான் எழுதலை. நண்பர் ஷோபன் எழுதிய பதிவுதான் இது. நாலும் தெரிஞ்சவங்கன்னு என்னை பார்த்து சொல்றார். ஆனால், இவரைப் போல் படத்தை இந்த அளவுக்கு என்னால் அலச தெரியலை. ஆனால், அவர் சொல்றது chaos theory, butterfly effect எல்லாம் இப்படியெல்லாம் வேலை செய்யுதான்னு இப்ப யோசிக்க தோணுது. பலர் ப்ளாக்ல 12-ஆம் நூற்றாண்டின் நம்பிக்கும் 21-ஆம் நூற்றாண்டின் கோவிந்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேள்வி மேலே கேள்வி கேட்குறாங்க. அதுக்கு பதிலும் கொடுத்துட்டார் தோழர்.

Monday, June 16, 2008

70 கோடியை வீணாக்கிட்டாரே கமல் - தசாவதாரம் இன்னொருவர் பார்வையில்


நானும் கடந்த சனிக்கிழமை அடிச்சு புடிச்சு டிக்கேட் வாங்கி பார்த்தேன தசாவதாரத்தை. படம் பெருசா ஒன்னும் இம்ப்ரஸ் பண்ணலை. ஒரே படத்தில் அளவுகக்திமான மேசேஜ்ஸ் (!?), 10 அவதாரம், பல இடங்கள், வீக்கான பாடல்கள், இர்ரிட்டேட்டிங் அசின் (கேரக்டர் மட்டும்தான். அசின் வழக்கம்போல அழகுதான்.. ஹீஹீ).. இது எல்லாமே நம் மூளையை 3 மணி நேரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு. 70 கோடியில் கமல் இதே தசாவதாரத்துக்கு பதிலாக வேற படங்கள் எடுத்திருக்கலாம். உதாரணத்துக்கு

1- 12-ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை மட்டும் படமாக எடுத்திருக்கலாம். சைவம், வைணவம், சோழ நாட்டு வரலாறுன்னு அந்த காலக் கட்டத்தில் நடந்ததை ஒரு அழகான தொகுப்பாய் கொடுத்திருக்கலாம்

2- இந்த வைரஸ் தீம் வச்சு ஒரு Sci-Fi படம் ஒன்று கொடுத்திருக்கலாம். (கோவிந்த், ஃப்லேட்சர், மல்லிகா, அசின்... புஷ் தேவை இல்லைனு நினைக்கிறேன்)

3- மணல் கொள்ள, பூவராகன், பால்ராம் நாயுடு, அசின் கேரக்டர்களை வைத்து ஒரு KS ரவிகுமார் ஸ்டைல்ல மசாலா படம் எடுத்திருக்கலாம்.

4- அந்த சீனாக் காரன், யுகா, ஃப்லேட்சரை வைத்து ஒரு "ஹிட்டன் ட்ராகன் அண்ட் க்ரோச்சிங் டைகர்" (Hidden Dragon and Crouching TIger" ரேஞ்சுக்கு ஒரு தற்காப்ப்ய் கலை (Martial Arts) படம் எடுத்திருக்கலாம். ஜேக்கி சானை கூட நடிக்க வச்சிருக்கலாம். :-)

5- கடவுள்ங்கிற தீமை மட்டும் வைத்து ஒரு சீரியஸ் படம் எடுத்திருக்கலாம்

6- அட.. அட்லீஸ்ட் கமல் & ஜெயப்ரதாவை மட்டும் வச்சு ஒரு சலங்கை ஒலி பார்ட் 2 எடுத்திருக்கலாம். ( அசின், மல்லிகாவை விட ஜெயப்ரதா சூப்பர்.. ஹீஹீஹீ)

மல்லிகா ரோல் நல்லா இருந்துச்சு. மல்லிகாவை சாக அடிச்சதுக்கு பதிலா அசினை சாக அடிச்சிருக்கலாம். அசின் கேரக்டர் அவ்வளோ இர்ரிட்டேட்டிங்கா இருந்துச்சு. கோவிந்த் உயரமான கட்டடங்களில் இருந்து குதிக்கிறது, BMW கார்ல துரத்தலும், ஓடுறதும், சண்டை போடுறதும் "டாக்டர்" விஜயோட குருவி பார்க்கிறாப்லயே இருக்கு. ஆனா அவருக்கு அந்த ஸோ கால்ட் முக்கியமான பெட்டியை கிருஷ்ணவேணி பாட்டிகிட்ட இருந்து பிடுங்கிட்டு போக தெரியல. அட் லீஸ்ட் அசின் கிட்ட இருந்து வாங்க கூட தெரியாமல் அவரையும் கூட்டிட்டு ஓடுறார்.. ஓடுறார்... என்ன கொடுமை மை ஃபிரண்ட் இது!

கொஞ்சம் கவனமா பார்த்தால் இன்னும் ஆளவந்தான் சாயல் இருக்கு. ஃப்லேட்சர் கேரக்டர் = ஆளவந்தான் நந்து கமல். ஒரே சின்ன வித்தியாசம் நந்து மனநலம் சரியில்லாதவன். ஃப்லேட்சரோட கோபம், செய்ய வேண்டிய வேலையில் முழு கவனம், அவரோட ஸ்டைல், மேன்னரிஸ்ம், அக்ரெஸ்ஸிவ்னஸ் எல்லாமே நந்துதான். ஆனாலும் எனக்கு இந்த கேரக்டர் ரொம்பவே பிடிச்சிருந்தது. ஆளவந்தான் க்ளைமேக்ஸில் நந்து விஜையை மெர்சடிஸ் காரில் துரத்துவான். ஒரு விபத்து ஏற்ப்பட்டதும் காரிலிருந்து வெளியில் குதிப்பான். அப்போது ஒருவன் புல்லட்ல வருவான். நந்து ஒரு உருட்டு கட்டையை எடுத்து அவன் கிட்ட நடந்து போய் அவனை அடித்துவிட்டு அந்த மோட்டார் சைக்கிளில் துரத்தலை தொடர்வான். இதுல ஃப்லேட்சர் அதையே செய்வார். இங்லீஸ்ல பேசுறது, வெளிநாட்டு லோக்கேஷன்ஸ்.. டெக்னாலகி முயற்சி மட்டுமே உலக தரமான படத்தை தந்திராது. அதையும் தாண்டி ஒரு க்ளாச்சிக்கல் தச் இருக்கணும்.

நம்பி, அவ்தார் & கோவிந்த் தவிர்த்து மற்ற எல்லா கேரக்டர்களும் முகத்துல டிக் மேக்கப் போட்டிருக்கறதுனால, கமல் தேவையான முகப்பாவனைகளை காட்ட இயலவில்லை. இது அவரோட பர்ஃபாமன்ஸை குறைத்துவிட்டது. சீனன், பூவராகன், கிருஷ்ணவேணி, புஷ், உயரமான மனிதன் - இவங்க எல்லா முகத்திலும் முகப்பாவனை ஒரே மாதிரியாக இருக்கு. பாவம் கமல் கஷ்டப்பட்டு கண்ணுல தான் வித்தியாசங்கள் காட்டணும். ஆனால் அதையும் ரொம்பவே ட்ரை பண்ணியிருக்காரு. எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான். "பிரமாண்டம்" அப்படிங்கிற டைரக்டர் ஷங்கர்க்கு அடுத்து தசாவதாரம் டீம் கேவலப்படுத்தி இருக்காங்க. பிரமாண்டம்ன்னா, பாட்ஷா படத்துல ரஜினி மெடிக்கல் காலேஜ் சீட்க்கு மூடுன ரூம்குள்ள பேசுற காட்சி இருக்கு பாருங்க. அது பிரமாண்டம். அப்படியே புல்லரிக்கணும். கமல் சார்.. நீங்க இன்னும் நிறைய பண்ணனும். 'Self Proclamation' -ஐ விட்டு வெளியே வாங்க. உங்களை மாதிரி சிறந்த நடிகர்கள் உங்க நேரத்தை இப்படி வேஸ்ட் பண்ண கூடாது. அதுக்கு நிறைய அஜித், சிம்பு எல்லாம் இருக்காங்க.

இசை: இப்பவும் இதே படத்தை அப்படியே கொண்டு போய் இளையராஜா கிட்ட கொடுங்க. அவர் முதல் 20 நிமிடத்துக்கும் கடைசி 20 நிமிடத்துக்கும் அப்படியே மாறுப்பட்ட கோணம் கொடுத்திருப்பார். மற்றதை ரஹ்மான், ஹரீஸ், யுவன் கிட்ட கொடுத்திருக்கலாம். கொஞ்சமாவது கேட்குற மாதிரி பாட்டு கொடுத்திருப்பாங்க. பிர்லா சிமேண்ட் விளம்பரம் மாதிரி படத்துல எல்லாம் இருக்கு ஆனால் உயிர் இல்லை.

எழுதியவர்,
ஷோபன்

பி.கு: ஷோபன் யாருன்னு கேட்குறீங்களா? இவர்தான் "நான்" என்கிற ப்ளாக்கர். ரொம்ப நாளா ஐயா பதிவெழுதாமலேயே இருந்தாரு. கேட்டால், மேட்டர் இல்ல எழுத்னு சொல்றார். ஆனால், இந்த பதிவை படித்தாலே தெரியும். இவர் எவ்வளவு டேலண்ட் நிறைஞ்சவர்ன்னு. மின்னஞ்சல்ல தசாவதாரம் படத்தை பற்றி பேசிட்டு இருந்தோம். அவர் உடனே அவரோட பார்வையில் தசாவதாரம் எப்படி இருக்குன்னு எழுதியிருந்தார். படித்து நானே பிரமித்து விட்டேன். இதை மற்றவர்களும் படிக்கட்டும் என அவருடைய சம்மதத்துடன் இங்கே பதிவிட்டுள்ளேன்.

Saturday, June 14, 2008

தசாவதாரம்

இப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு கங்கணம் கட்டி திரிந்திருந்தேன். சிவாஜியை கூட டியேட்டரில் பார்க்கவில்லை நான். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட படம் பார்க்கலாம்ன்னு நானும் என் தோழியும் டிக்கேட் கவுண்டர் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துட்டோம். எப்படி 1-2 மாதத்தில் தசாவதாரம் வந்துவிடும். அதுவரை வேறு படம் வேண்டாமென்று திரும்பிவிட்டோம். இன்று படம் வெளியாகியே முதல் நாளே இறங்கிட்டோம்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே கமல்ஹாசன் என்று படம் ஆரம்பிக்கிறது. அப்படியே 12-ஆம் நூற்றாண்டு கொண்டு போகிறார்கள். கே.ஆர்.எஸ் அண்ணா சைவர்-வைணவர்ன்னு ஒரு பதிவு போட்டிருந்ததால அவர் சொன்ன விவரங்களையும் கொஞ்சம் குறிப்பெடுத்துக்கிட்டேன். நெப்போலியன் நம்பியை பார்த்து "ஓம் நமச்சிவாய என நீ உச்சரித்தால் உனக்கு உயிர் பிச்சை தருகிறேன்" என் ஆணையிடும்போது நம்பி "ஓம் நமோ நாராயணாய" என்றுதான் சொல்லுவார் என நாமெல்லாம் அறிந்ததே! ஆனாலும், அந்த காட்சியில் அனைவரும் சீட் நுனிக்கு வந்து என்ன நடக்க போகிறது என நகத்தை கடிக்க ஆரம்பிப்பீர்கள்.

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது"

ரங்கராஜன் நம்பியை சைவர்கள் துன்புறுத்தி கடலுக்கு கொண்டு போவதைப் பார்த்தால் இன்னொரு The Passion of The Christ பார்ப்பது போல் இருக்கின்றது. ஆனால், அதில் இன்னும் மோசமாக துன்புறுத்தப்படுவார் யேசுநாதர். இந்த பிரமாண்ட காட்சிக்கு போடலாம் ஒரு வாவ்!

படம் என்னவோ சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடுவே நடக்கும் போராட்டங்கள்தான் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கதை அப்படியே 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் அமேரிக்காவில் கொண்டுவரப் படுகிறது. விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் நடத்தும் ஆராய்ச்சியும், அவரின் ஆராய்ச்சியின் வெற்றியில் உருவாக்கப்பட்ட உலகத்தையே அழிக்கும் வைரஸும். இனி கதை கடைசி வரை இந்த வைரஸும், இதை தொடர்பான துரத்தலும்தான்.

12-ஆம் நூற்றாண்டில் வரும் அசின் இன்னும் கொஞ்சம் மெனக்க்கெட்டிருக்கலாம். அவர் அழுகையிலும் போலித்தனம் தெரிகிறது. ஆனால் மாடர்ன் அசின் அழகோ அழகு. ரெட்டை ஜடையை ரெண்டு கையால் தூக்கிக் கொண்டு ஆடுவதும், படம் முழுக்க விஷ்ணுவை தன் இரு கரங்களாலும் கட்டிக்கொள்வதும், வில்லனிடமிருந்து அந்த விஷ்ணு சிலையை காப்பாற்ற போராடுவதும், தன்னையறிமாலேயே கமலை விரும்ப ஆரம்பிப்பதும் அழகு. போலிஸ் இவரை தீவிர்வாதியின் காதலி என்றபோதிலும், கலிபுல்லா கான் இவரை கமலின் மனைவி என்று நினைக்கும்போதிலும் அவர் புலம்பல் ரசிக்க வைக்கின்றது.

அசினை விட ஹெவி ரோல் மல்லிகா ஷெராவாத்துக்குதான். கா கறுப்பனுக்கும் வெ வெள்ளையனுக்கும் என்ற பாடலில் செக்ஸியாய் வந்து வில்லன் கமலை மணந்து இவர் செய்யும் அட்டூழியங்கள்; அனைத்துக்கும் சபாஷ் போடலாம். அவர் தன்னுடைய பங்கை 100% அருமையாக செய்திருக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரமாக பலியாக்கியிருக்காமல் இருந்திருந்தால் காட்சிகளின் விருவிருப்பு கூடியிருக்கும்.

ஜெயபிரதாவின் பகுதியை அவர் கச்சிதமாய் செய்திருக்கிறார். கவிஜர் கபிலனின் கவிதைகளும் அதை வாசிக்க அவரையே நடிக்க வைத்த கமலுக்கு நன்றி சொல்லலாம். நெப்போலியன், MS பாஸ்கர், ஆகாஷ், நாகேஷ், சந்தான பாரதி என்று பெரிய பட்டாளமே இருந்தாலும் அனைவரிடமும் மிகையில்லாத நடிப்பு. யூகா எனும் ஜப்பானிய பெண்ணின் நடிப்பை விட அவரின் சண்டை காட்சிகள் அற்புதம். ஒரு ஜெட் லி படம் பாத்தது போல இருந்தது. ரவிகுமார் படத்தில் அந்த கற்பழிப்பு காட்சி அவசியம்தானா?

படத்தின் இசை ஏற்கனவே பிரபலாமாகிவிட்டது. ஆனாலும், பிரமாண்டமான காட்சியமைப்பில் பார்க்கும்போது பாடல் இன்னும் அழகாக தெரிகிறது. ஒரு உண்மை தெரியுமா? படத்தில் கமலுக்கும் அசினுக்கும் ஒரு டூயட் பாடல் கூட இல்லைங்க. அதுவே ஒரு வித்தியாசம்தானே. BGM-க்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு கண்டிப்பாக வாழ்த்து சொல்ல வேண்டும். காட்சிகளின் விருவிருப்புக்கும் திகிலூட்டத்துக்கும் முக்கிய பங்கு வகிப்பது இவரின் BGM இசைதான். முக்கியமாக சண்டை காட்சிகளின் போது வரும் இசை ஒவ்வொரு தாக்குதல் போதும் நமக்கு 'டிக் டிக்' என இதய துடிப்பை கூட்டுகிறது.

படத்தின் சண்டைக்காட்சிகள் அட போட வைக்கின்றது. 12-ஆம் நூற்றாண்டில் நடக்கும் சண்டை காட்சி டிப்பிக்கல் கனல் கண்ணன் ஸ்டைல். யூகா மற்றும் அவர் தந்தையின் வூஷூ சண்டை திறனை பார்க்கும்போது சில வருடங்களுக்கு முன் நான் கற்றுக்கொண்ட தேக்குவாண்டோ ஞாபகம் வருகிறது. ஒரு ஜேக்கிசான் ரக சண்டை காட்சி க்ளைமேக்ஸில் பார்க்கலாம். படம் முழுக்க ஒரு 12-13 கொலையாவது இருக்கும். 15 நிமிடத்துக்கு ஒருவராவது இறப்பார்கள் என கணக்கு வைச்சிக்கலாம்.


ஒளிப்பதிவு.. இன்னும் என்ன சொல்ல வேண்டும் இதைப்பற்றி? அதான் கலக்கிட்டாரே ஒளிப்பதிவர். ஒவ்வொரு ஃப்ரேமிலேயும் காமேரா angle சுற்றி வரும் விதம் பிரமாதம். எடிட்டிங், ஸ்பெஷர் எஃப்பேக்ட் பெரிய வாவ்! படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கமல் ஒரே ஃப்ரேம்ல இருந்தாலும் அதை அசலாக இருக்கும்படி எடிட் செய்திருக்கார் எடிட்டர். வேகமான நகரும் காட்சிகளிலும் சேசிங் காட்சிகளிலும் அனல் பறக்கின்றன. ஸ்பெஷ எப்பேக்ட் பேஷ் பேஷ். க்ளைமேக்ஸில் வரும் க்ராஃபிக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சில காட்சிகள் போலி என்பது மிக எளிதில் தெரிகிறது.

டைரக்டருக்கு வேலை இருந்திருக்காது என நினைக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்புன்னு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக கமலே இருந்துவிட்டார். 10 கதாப்பாத்திரங்கள். சில கதாப்பாத்திரங்களில் இவரா அவர்ன்னு சந்தேகம் படும்படி மேக்கப் உதவி செய்துள்ளது. என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கடைசி வரை அந்த ஜப்பானியர் கமல்தான் என்று நம்பவே இல்லை. பாட்டி கதாப்பாத்திரத்துக்கு கமல் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஏதாவது செய்திருக்கலாம். 94 வயது பாட்டி நிஜவாழ்க்கையில எப்படி இருப்பாங்களோ அதேப்போல முயற்சி செய்திருக்கலாம். இந்த பாட்டி என்னன்னா சின்ன பொண்ணாட்டாம் அங்கே தாவுறது இங்கே குதிக்கிறதுன்னு இருக்காங்க. அவங்க வயதுக்கும் அவங்க எனெர்ஜி லெவெலுக்கும் சம்பந்தம் இல்லை. பூவராகன் கறுப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லலாம். ஆனால் சில இடங்களில் அவர் பேசுவது கேப்டன் விஜயகாந்தை போல இருக்கின்றது. சுனாமியில் மற்றவர்கள் உயிரை காப்பாற்றி அவர் இறக்கும் காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. சிபிஐ பல்ராம் நாயுடு காமெடியில் கலக்குகிறார். கோவிந்த் ஆங்கிலத்தில் பேசும்போது "நான் தெலுங்கு. தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். நீ தஞ்சாவூரான். தமிழில் பேசலைன்னா, இனி யார் தமிழை வளர்ப்பா?"ன்னு கேட்பதுக்கு "உங்களைப் போல இன்னொரு தெலுங்கத்தான்"ன்னு கமல் சொல்வது நகைச்சுவையாக இருந்தாலும் சிந்த்திக்க வைக்கும் வரிகள்.

ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு மற்ற சில சிறு சிறு கதைகளை இதனூடையே அழகாய் பின்னியிருக்கும் கமலுக்கு பாராட்டுகள். அவ்தார் சிங், கலிபுல்லா கான், பூவராகன், புஷ் என்று சிலரின் சின்ன சின்ன கதைகளையும் கதையில் பொருத்தி தேவையான இடத்தில் போட்டதால் படம் திகட்டவில்லை.

முக்கியமாக படத்தின் கருத்து (Moral of th story) என்ன என்பது கேட்க வேண்டிய ஒன்று. நடக்கும் ஒவ்வொன்றும் நல்லதுக்கே! 4 வருடங்களுக்கு முன்னே நடந்த சுனாமியால் லட்சம் உயிர்கள் இழப்பு என வருத்தப்பட்டும் கடவுளிடம் நம் ஆதங்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த படத்தை க்ளைமேக்ஸை பார்த்தீங்களென்றால் கோடி உயிர்கள் பேரிழப்பு நடக்க வேண்டிய இடத்தில் லட்சம் பேரென குறைக்க நடந்த சுனாமியே கடவுளின் திருவிளையாடல் என புரிந்துக்கொள்வோம். அதலால், இனி என்ன கெட்டது நடந்தாலோ அது பெருசா வர வேண்டிய ஒன்னு சிறுசா வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டு அந்த கஷ்டங்களை தாண்டி வர வேண்டும் என நினைவுக்கொள்வோம்.

மொத்தத்தில், பிரமாண்டம்... பிரமாண்டம்... பிரமாண்டம். திரும்ப பார்க்கலாம் இந்த பிரமாண்டத்தை. ஆனாலும் இந்த மாதிரி படங்களை தியேட்டரில் பார்ப்பதுதான் அழகு. நான் இந்த வாரம் அடுத்த ரவுண்டுக்கு தயார் ஆகலாம் என நினைக்கிறேன். நீங்கள் எப்படி?