ரொம்ப நாள் ஆச்சு நல்ல படம் பார்த்து! ஆனால், இன்று மூன்று படம்! நல்ல படங்களாய் பார்த்துவிட்ட திருப்தி. மூன்றும் மூன்று மொழி; வெவ்வேறு கருக்களை ஏந்தி நிற்க்கின்றன.
1- படம்: தாரே ஜமீன் பர்
இயக்கம்: அமீர்கான்
நடிகர்கள்: டர்ஷீல் சஃபாரி, அமீர்கான், தனய் சேடா, திஸ்கா சோப்ரா, விபின் ஷர்மா
இசை: ஷங்கர் - எஹ்சான் - லோய்
மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படித்து திணறுகிறான் சிறுவன் இஷான். Dyslexia என்ற நோயால் புத்தகத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும், எண்களும் அவன் முன் நடனமாடுகின்றன. ஆனாலும் சிறுவனுக்கு அபார கற்பனாசக்தி இருக்கிறது. அழகாய், அறிவாய் படம் வரைகிறான். ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. நேரம் எடுத்து மெதுவாய், பதறாமல் செய்ய வேண்டிய காரியம் நம்மில் எத்தனை பேரால் செய்ய முடியும்? ஆனால், இஷான் செய்கிறான். தன்னுடைய இயலாமையை மறைக்க இஷான் ஒவ்வொரு விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்கிறான். நடுத்தர குடும்பத்தின் பெற்றோர் (கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா, பாசமுள்ள அண்ணன்) தன் மகனின் நிலையை புரிந்துகொள்ள முடியாமல் பையனுக்கு டிசிப்ளின் முக்கியம் என்று நினைத்து போர்டிங் பள்ளியில் சேர்க்கின்றனர். இந்த நிலமையில்தான் தற்காலிக ஆசிரியராய் அப்பள்ளிக்கு வரும் அமீர்கான் இஷானை சந்திக்கிறார். இஷானின் நிலையை கண்டு அவன் பெற்றோரை சந்திக்கிறார். இஷானின் இன்னிலையின் நிஜ காரணத்தை கண்டறிந்து அவன் பெற்றோரிடமும் விளக்குகிறார். சிறுவன் மேல் அதிக கவனத்தை செலுத்தி ஒவ்வொன்றிலும் அதி சிரத்தை எடுத்து சொல்லிக்கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவனுள் உள்ளும் திறமை ஒரு பிரமிக்கவைக்கும் திறமை என்று வெளியுலகுக்கு (முக்கியமாக இஷானுக்கே) புரியவைக்கிறார். சிறுவனின் தாழ்வு மனப்பான்மையை போக்குகிறார்.
சிறுவன் இஷானின் நடிப்பில் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல இளம் கதாநாயகர்களிடம் கூட இல்லாத திறமை தெரிகிறது. படம் முழுக்க இவனையே சுற்றி வருவதால் இவனுடைய ஒவ்வொரு அசைவையும் நன்று கவனிக்க முடிகிறது. மற்ற கதாப்பாத்திரங்களும் பொருத்தமாய் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓவர் ஆக்டிங்கோ, அல்லது இது ஒரு நடிப்பு என்று தெரியாதவாறு படு இயல்பாக இருக்கின்றது. அமீரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். வாழ்த்துக்கள் அமீர்! ஹீரோ ஒரு படத்துக்கு இயக்குனரானால் பெரும்பாலுமே அந்த படம் முழுக்க அவரது ஹீரோயிஸம்தான் மேலோங்கும். ஆனால், இதில் அமீர் மற்றவர்களைப்போல் ஒரு துணை நடிகராய் மட்டுமே வந்து போகிறார். இந்த படம் தமிழில் வால் நட்சத்திரம் என்று டப் ஆகப்போகிறது. கண்டிப்பாக சிறுவர்களும், முக்கியமாக பெற்றோர்களும் பார்க்க வேண்டிய அருமையான படம்.
2- படம்: ஹேப்பி டேய்ஸ்
இயக்கம்: சேகர் கம்முல்லா
நடிகர்கள்: வருண் சந்தேஷ், ராஹுல், நிகில், வம்சி கிருஷ்ணா, தாமன்னா, காயத்ரி ராவ், சோனியா, மோனாலி சவ்திரி
இசை: கிஷோர் சௌக்ஸி
ரொம்ப நாளாய் பார்க்க வேண்டும் என நினைத்த படம். ரெண்டு நாள் முன்புதான் சப்டைட்டிலுடன் படம் கையில் சிக்கியது. நாம் நிறைய நட்பு சம்பத்தப்பட்ட படங்களும், கல்லூரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களும் பார்த்திருப்போம். ஆனால், இதுவும் கண்டிப்பாக நாம் பார்த்து ரசிக்கும் படங்களின் வரிசையில் சேறும். படம் கல்லூரி அட்மிஷன் நாளில் ஆரம்பித்து கல்லூரி கடைசி நாளில் நண்பர்களின் பிரிவுடன் முடிகிறது. படத்தில் ஒரு சின்ன குறை என்னவென்றால் நண்பர்கள் கூட்டணியில் கடைசியில் அனைவரும் ஆளுக்கு ஒரு ஜோடியாய் முடிவதுதான். ஹீரோ சந்து - ஹீரோயின் மது, ராஜேஷ் - அப்பு, அர்ஜூன் - ஷ்ராவணி, ஷங்கர் - சங்கீதான்னு நண்பர்களுக்குள்ளேயே காதல் ஜோடிகளாகிக்கொண்டனர். நடுவில் ஒரு ஜோடிக்கு ஊடலென்றால் அந்த கேப்பை ஃபில் அப் பண்ணுவதுக்கு எவனாவது வந்து விடுகிறான். ஹ்ம்.. இது மட்டும்தான் கொஞ்சம் இடிக்குது. மற்றப்படி படம் அருமை. கல்லூரி நண்பர்களுடன் இந்த படத்தை பாருங்கள். அதன் ஆழம் அனுபவிப்பீர்கள்.
படத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் அர்ஜூன் @ டைசன். இண்ட்ரோ காட்சியிலேயே பையன் என்னமோ பண்ண போறான்னு தோணுச்சு. படம் முழுக்க ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா செய்துக்கொண்டே இருக்கிறார். அவருடைய காதலும் அவர் ஷ்ராவணியை துரத்துவதும் நன்றாய் இருக்கின்றது. முக்கியமாய் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் அர்ஜூன். ஹீரோ சந்து @ வருண் சந்தேஷ் கூட அந்தளவுக்கு பிரகாசிக்கவில்லை (இவர் சித்தார்த் க்லோன் என்பதால்தான் நான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது. படம் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் ;-)). அப்புறம் தாமன்னா. கல்லூரி படத்திலே பிரகாசித்த அளவு இதில் இல்லை என்றே சொல்லணும். பாடல்கள் அருமையாக இருக்கின்றது. அரேரே அரேரே, ஹேப்பி டேய்ஸ்,ஜில் ஜில் ஜிங்கா, ஓ மை ஃபிரண்ட் (அட என் பேருல ஒரு பாட்டு) எல்லாம் ரசிக்கும்படி இருக்கு (நாந்தான் பாடல் வரியையும் சப்டைட்டிலில் படித்தேன்ல).
3- படம்: சுப்ரமணியப்புரம்
இயக்கம்: சசிகுமார்
நடிகர்கள்: ஜெய், ஸ்வாதி, சசிகுமார், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி
இசை: ஜேம்ஸ் வஸந்த்
இந்த படத்துடைய விமர்சனம் தமிழ்மணத்துல ஏற்கனவே கிழி கிழின்னு கிழிச்சுட்டாங்க. அதனால் கதை பற்றி நான் ஒன்னும் சொல்ல விரும்பல. அதே கொலவெறி ஆயுதங்களுடன் ரத்த வெள்ளம். ஆனால், நடுநடுவில் காதல் படகு அழகாய் நீந்துகிறது. நடிகர்கள் தேர்வு மிகச்சரியாய் இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. திரைக்கதையை அழகாய் தொகுத்திருக்கிறார் இயக்குனர் @ தயாரிப்பாளர் @ நடிகர் சசிகுமார். இயக்குனர் பாலா, அமீர் பேட்டர்ன் தெரிகிறது. பாடல்கள் அருமை. 80களில் நடக்கும் கதை என்பதால் படம் முழுக்க 80களில் பிரபலாமான பாடல்கள் படம் முழுக்க பிண்ணனியில் வருவது நல்ல முயற்சி.
இப்படிப்பட்ட ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டுமென நண்பனிடம் டிக்கெட் வாங்க சொன்னால், சத்யம் என்ற மொக்கை படத்துக்கு டிக்கேட் வாங்கி வந்து, பிறகு அந்த மொக்கை படத்தை தியேட்டரில் பார்த்த கொடுமை இருக்கே! அப்பப்பா! இந்த மொக்கை படத்துக்கு நம்ம கவிதாயினி கூடிய சீக்கிரமே விமர்சனம் எழுதுவாராக.. ;-)
Thursday, August 28, 2008
நல்ல படங்களை நாலு பேரு பார்க்கணும்ல. அதுக்குதான்!
Posted by MyFriend at 9:56 PM 23 comments
Labels: சித்தார்த், சினிமா, விமர்சனம்
Tuesday, April 22, 2008
காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்
போன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.
இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க.
இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங்! கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே காப்பி கலக்கி தரும் அளவுக்கு இந்த மேட்டர்ல பி.எச்.டி எடுத்தவர். எல்லார் கண்ணும் தேவாவின் மேலே இருக்கும்போது மற்ற இசையமைப்பாளர்களின் காப்பியின் மேல் அவ்வளவு பிரியம் இருக்காது. அதனால், அவங்க அடிக்கிற காப்பியும் நம்ம கண்ணுக்கு தெரியாது. எங்கேயோ கேட்ட பாடல்ன்னு பாடிட்டு அடுத்த வேலை பார்க்க போயிடுவோம்.
ஹர்ரிஸ் - இசைப்புயலின் உருவாக்கத்தில் வந்தவர். அவரிடம் கீபோர்ட் வாசிப்பவராக இருந்து பின்னால்
இசையமைப்பாளராக மாறியவர். இவருடைய ஆரம்ப கால இசை வாழ்க்கையிலிருந்தே ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டேதான் இருக்கு. "ரஹ்மான்'ஸ் காப்பி"!!!! இவருடைய பல பாடல்களில் ரஹ்மானின் பாணியும் அவரிடமிருந்து திருடப்பட்ட இசைகளையும் புதையல் போல கண்டுபிடிக்கலாம். நெட்ல கொஞ்சம் அலசினால் ரஹ்மான்'ஸ் ரசிகர்களின் ஆதங்கம் வெள்ளம் போல புரண்டோடுவதை காணலாம்.
அவருடைய முதல் ப்ராஜெக்ட் மின்னலே மின்னல் வேகத்தில் வெளியாகததால் முதலில் மக்களை எட்டி பிடித்தது 12B பஸ்தான். "ச்சும்மா அருமையா பிண்ணியிருக்காரு மனுஷன்"ன்னு பலரும் பாராட்டும் விதத்தில் போட்டிருந்தார் டியூன். ஆடியோ சிடி/ கேசட்டுகள் அதுவரை எந்த படமும் சாதிக்காத வசூலையெல்லாம் தாண்டி சாதனை படைத்தது. நானே மிகவும் ரசித்து கேட்ட, இப்போதும் ரசிக்கும் பாடல்களில் 12Bயும் அடங்கும்.
ஆனால், ஒரு சில படங்கள் வெளியாகிய பிறகு அவருடைய இசை பேட்டர்ன் திரும்ப திரும்ப அதே இடத்துலேயே சுத்த ஆரம்பித்துவிட்டது. குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுறது போல அவருடைய இசையில் வெற்றிபெற்ற அதே பாடல் தோரணையில் புது படத்திலும் ஒரு பாடல் அமைந்துவிடும். எந்த பாடல்ன்னு பல பேருக்கு தெரியும். ஆனாலும் இங்கே நாங்க சொல்லுவோம்ல.
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?
-என்ற தத்துவ(!?!?) பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்த்தனால்
கொக்கு மீனை திங்குமா?
இல்ல மீனு கொக்கை முழுங்குமா?
-என்று மேக்கப் போடப்பட்டு திரும்ப நமக்கே வந்து சேர்ந்திருக்கு. மக்களே, இங்கத்தான் நீங்க நல்லா கவனிக்கனும். ஒரு பாடல் வெற்றி பெருவதுக்கு காரணமே நாம்தான். நமக்கு அந்த பாடல் பிடித்ததானால் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்ன்னு பல முறை கேட்டு வெற்றியடைய செய்தால் அதையே திரும்ப ஆடை மாற்றி மேக்கப் போட்டு நமக்கே அனுப்புறாங்க.. என்ன கொடுமை சரவணா இது!!!
இப்படி கேட்கும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கும் தெரியுமா?
மத்தவங்க இசையை காப்பி அடித்து வெற்றி அடைந்தாயிற்று..
சொந்த இசையையே திருப்பி போட்டு அதுலேயும் ஓரளவு வெற்றி அடைந்தாயிற்று...
அடுத்து என்ன?
இங்கேயும் ஒரு மேட்டர் இருக்கு.. அதுக்கு முன்னே இதோ இந்த இரண்டு காட்சிகளை பாருங்க:
அடப்பாவிகளா! அடப்பாவிகளா! (விவேக் ஸ்டைலில்..)
எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!
காப்பியடிக்க கூட ஐடியா கிடைக்காமல் அப்படியே போட்டுட்டாரே!!!!
சிலர் தன் வழி தனி வழின்னு போகும்போது சிலர் என் வழி திருட்டு வழின்னு போகிறார்களே! அவர்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள்! இவர்கள் இருக்கும்வரை திருட்டு இசைகளும் சாகா வரம் பெற்று வாழும் என்பதில் ஐயமில்லை. :-P
Posted by MyFriend at 5:17 PM 23 comments
Wednesday, March 26, 2008
சந்தோஷ் சுப்ரமணியம் டவுன் டவுன்!
அழகான ஒரு குடும்பம்; பாசமான சகோதரர்கள்; அக்கறை காட்டும் பெற்றோர்கள்; கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள்; உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள அருமையான நண்பர்கள். எல்லாம் இருந்தும் ஒருவனுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஒரு பென்சில் கேட்டால் பார்கர் பேனாவை வாங்கிக் கொடுப்பார் தந்தை. மிதிவண்டி கேட்டால் மாருதி வண்டி வாங்கி தருவார். மிட்டாய் கேட்டால் உயர்ரக சாக்லேட் வாங்கி தருகிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட தந்தை கிடைக்க மாட்டாரா என்று ஏங்கும் நிலையில் இவன் ஒருவன் எப்படி இந்த சூழ்நிலையிலுந்து தப்பிப்பது என்று யோசிக்கிறான். வாழ்க்கையில் தன் தொழில் மற்றும் வாழ்க்கை துணை; இவை இரண்டும் தானாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறான். தந்தை சொல் தட்டாத மகன் இவன். தன் லட்சியத்தை அடைகிறானா அல்லது அலட்சியப் படுத்தப்படுகிறானா? இதுதான் பொம்மை வீடாக (பொம்மரில்லு) தெலுங்கு சினிமாவில் அலங்கரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.
மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்கு படங்களை விஜய் ரீமேக் செய்து நல்ல பெயரை திருடிக்கொண்டிருப்பது போல் சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படங்களை அப்படியே காப்பியடித்து "ரீமேக்" ரவி பாஸ் மார்க் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஜெயம், M குமரன் S/O மகாலெட்சுமி மற்றும் சம்திங் சம்திங் மட்டுமே ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளையும் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது (மழை படம் விதிவிலக்கு). தமிழில் ஒரிஜினலாக தயாரிக்கப்பட்ட தாஸ், தீபாவளி மற்றும் இதயத்திருடன் எல்லாமே தோல்வியை தழுவிய காரணங்கள் என்னவென்று இப்போது புரிந்திருக்கும்.அசல் படத்துக்கும் அண்ணன் ராஜாவின் படத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னவோ?
ராஜாவின் இயக்கத்தில் வெளியாகும் எல்லா படங்களும் ஒரிஜினல் தெலுங்கு படத்தை அப்படியே 100% காப்பியடிக்கப்பட்டிருக்கும். படத்தின் ஹீரோவை தவிர்த்து (அதுக்குதான் தம்பி ரவி இருக்காரே) மற்ற அனைத்து நடிகர்களும் முடிந்த வரை அந்த அசல் படத்தில் நடித்த நடிகர்களையே நடிக்க வைக்க முயற்ச்சிப்பார்.. ஹீரோயின் உட்பட.
அப்படியே அந்த துணை நடிகர்கள் நடிக்க இயலவில்லையென்றால் அவர் என்ன செய்வார் தெரியுமா? அதே போல முகச்சாயல் கொண்ட நடிகர் நடிகைகளை தேடி கண்டுப்பிடிப்பார். சம்திங் சம்திங்கில் மல்லிகா, ரீச்சா பல்லோட், பிரபு எல்லாம் தெலுங்கில் நடித்த நடிகர்களின் முகச் சாயல் அல்லது உடலைமைப்புக்கு ஏற்ற வாரே அமைந்திருக்கும்.
அசல் படத்தை விட ரீமேக் படம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுக்கு அவருடைய அடுத்த ட்ரிக் ஒரு காலத்தில் மிக பிரபலாமாக இருந்த ஸ்டார் இப்போ வெள்ளித்திரையில் இல்லாதவரை நடிக்க வைக்க முயற்ச்சிப்பது. M குமரனில் நதியா; சந்தோஷ் சுப்ரமணியத்தில் கௌசல்யா.நடிகர் நடிகை தேர்வு முடிந்துவிட்டது. அடுத்து டெக்னிகள் க்ரூஸ் (technical crew) தேர்வு. இது ரொம்பவும் சுலபம். புதுசாக ஒருவரை தேட தேவையில்லை. தெலுங்கு படத்தில் வேலை செய்த அத்தனை பேரையும் அல்லேக்கா தூக்கி மெட்ராஸ்க்கு கொண்டு வந்திடுவார். கேமராமேன்ல இருந்து, இசையமைப்பாளர் வரை அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்திடுவார்.
இசை என்றதும் இந்த துறையை பற்றியும் பேச வேண்டும். தெலுங்கில் இசையமைத்த இசையமைப்பாளரையே தூக்கிட்டு வந்துவிட்டதால் பாடல்களின் இசையில் ஒரு மாற்றமும் இருக்காது. படத்தில் ஒரு பாடலை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் அதே இசையில் இருக்கும். சம்திங் சம்திங்கில் கோழி வெடைக்கோழி பாடல் மட்டுமே அசல். அதே போல் சந்தோஷ் சுப்ரமணியத்தில் எப்படி இருந்த என் மனசு என்ற பாடல் மட்டுமே அசல். பாடல்களே மாறாமல் இருக்கும்போது பாடகர்கள் மட்டும் மாறிடுவாங்களா என்ன?
இவ்வளவு நேரம் சொன்ன மேட்டர்களாவது பரவாயில்லைங்க. இதெல்லாவற்றையும் விட இன்னொரு பெரிய ஒற்றுமை என்னன்னா படத்தில் வர்ற காஸ்டியூம்ஸ், அவர்களது ஆடைகள் கூட மாறாமல் இருப்பதுதான். அசலில் ஹீரோ என்ன உடை போட்டிருந்தாரோ, அதேப்போல உடை டிசைக்ன் செய்து தமிழில் ரவி அணிந்திருப்பார். படத்தின் கதாநாயகியும் கூட. ஒரே மாதிரி உடை படத்தின் கதைக்கு தேவையான ஒன்று என்று நீங்கள் நினைத்தால், இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகணும். அந்த உடையின் வர்ணம் கூடவா ஒன்றாக இருக்க வேண்டும்? இது என்ன சீருடையா? சம்திங் சம்திங் பாடலை பாருங்கள். கதாநாயகன்/நாயகியின் உடைகளை!ரீமேக் பண்ணுவது தப்பில்லைங்க. நம்மில் சிலர் இன்னமும் பழைய படங்களை பார்ப்பதில்லை. கேட்டால் "நாங்க இந்த காலத்து தலைமுறை. கருப்பு வெள்ளை படங்கள் எல்லாம் ஒரு படமா?"ன்னு கேட்குறாங்க. நம்மில் பலருக்கு வேற்று மொழி புரியாததால் சப்டைட்டல் இல்லாத படங்களை பார்க்க இயலாது. என்னைப்போல் சிலர் சப்டைட்டல் இல்லாமலும் பார்த்து அவங்க அசைவை வைத்து இந்த டயலோக் பேசியிருக்கலாம் என யூகித்து படத்தை பார்ப்பவர்களும் இருக்காங்க. ஆனால், பழைய படங்களையும், வேற்று மொழி படங்களையும் ரீமேக் செய்வதால், நல்ல நல்ல கதைகள் மக்களிடம் போய் சேர்கிறது. ஆனால், 100% காப்பி & பேஸ்ட் பண்ணுவதால் என்ன புண்ணியம்? அதுக்கு அசல் படத்தை டப் பண்ணியிருக்கலாமே!
ரீமேக் செய்வதன் முக்கிய நோக்கம் மக்களிடம் ரீச் ஆகாத கதையை (நல்ல கதை கரு கொண்ட படங்கள்) மக்களிடம் அதுவும் இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என எடுத்து கொடுத்தல்தான். ஆங்கில படம் தமிழில் ரீமேக் பண்ணும்போது, இந்தியாவில் இதே மாதிரி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என இயக்குனர் யோசித்து இயக்குவதுதான்.அங்கே இருக்கும் ஆனால் இங்கே இல்லாத ஒன்னை இருக்குன்னு சொன்னால் அது மக்களிடம் முழுமையா போய் சேராது. என்னடா இவன் ரீல் விடுறான் எனத்தான் மக்கள் எண்ணுவார்கள்! பழைய படங்களை ரீமேக் பண்ணும்போது அது இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என எண்ணி அதுக்கேற்ற மாதிரி திரைக்கதையை அமைப்பதில்தான் ஒரு இயக்குனரின் சாமர்த்தியம் அறிய முடியும். உதாரணத்துக்கு, பில்லா 2007 பழைய பில்லா கதைதான். ஆனால், டெக்னாலஜி மற்றும் பல அம்சங்கள் இப்போதுள்ள காலக்கட்டத்தில் மாறியுள்ளது. அதனையும் மாற்றினால்தான், படம் சிறப்பாக இருக்கும்.
ஒரே காலக்கட்டத்தில் வெளியாகிய வேற்று மொழி படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் பண்ணும்போது என்ன மாற்ற முடியும்? எல்லாமே ஒன்றுதானே? என்று கேட்கலாம். ஆனால், இதுதான் ஒரு இயக்குனரின் நிஜமான சேலேஞ் (challenge). எத்தனையோ விஷயங்கள் மாற்றலாம். கதை ஒன்றாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு வெரைட்டி கிடைக்கும். அசலை விட இது பெட்டர் என்ற பெயர் எடுப்பதே ஒரு ரீமேக் படத்தின் நிஜமான வெற்றி.
ஒரு இயக்குனர் அவர் சொந்த படத்தையே இன்னொரு மொழியில் ரீமேக் பண்ணும்போது பல மாறுதல்கள் செய்வார். அவர் செய்வது பெரும்பாலும் அசல் படத்தில் அவர் செய்த பிழைகளை திருத்தி மென்மேலும் மெருகேற்றுவார். இதுவே மற்றவரின் கதையை வாங்கி இன்னொரு இயக்குனர் ரீமேக் செய்யும்போது அவர் அதை சரியாக, ஆழமாக ஆய்வு செய்யவில்லையென்றால் அவருக்கு அந்த பிழைகள் தெரியாது. திருத்தவும் முடியாது. அப்படி திருத்தாமல் காப்பியடிக்கும் ஒரு படம் ஹிட்டாகி பெயர், புகழ் கிடைத்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி நிழைக்குமா? அதில் சந்தோஷம்தான் இருக்குமா? இது இன்னொருவரின் உழைப்பும், வேர்வையும் ஆச்சே!
100% ரீமேக்கை விட டப்பிங் படங்களுக்கு ஆதரவு போய் சேர்வது நல்லது என்பது என் கருத்து. உங்களுக்கு?
Posted by MyFriend at 2:22 PM 39 comments
Saturday, November 10, 2007
அழகிய(??) தமிழ்(!!) மகன்???
குடும்பத்தோட கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படம் பிதாமகன். இந்த வருட தீபாவளிக்கு எப்படியும் எல்லாரும் ஒன்னா ஒரு படம் பார்த்திடணும்ன்னு எங்கண்ணா கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்சாரு. அவர் ஒரு தடவை முடிவு பண்ணிட்டார்ன்னா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம்! என்ன கொடுமை சரவணா இது!!
சரி, என்ன படத்துக்கு போகலாம்ன்னு நாங்க லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்டோம். ஆப்ஷன்ல மூனு படம் செலக்ட் ஆச்சு: வேல், அழகிய தமிழ் மகன், கண்ணாமூச்சி ஏனடா. அப்பா உடனே, சூர்யா நல்லா நடிப்பான்ல. அந்த பொண்ணு அசின் கூட நல்லா கியூட்டா நடிக்குதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அம்மா ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க. அப்பா அடங்கி போயிட்டாரு. அப்போ டீவில அழகு குட்டி செல்லம்ன்னு பிருத்திவிராஜ் ஆடிக்கொண்டிருந்தார். அப்பா, இவரோட படம் கூட ஒன்னு ரிலீஸ் ஆகுதுப்பா. சத்தியராஜ், ராதிகா கூட நடிக்கிறாங்கன்னு நான் சொன்னதும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச 2 ஓல்ட் ஜெனெரேஷன் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறதை கேள்விப்பட்டதும் ஓக்கேன்னு சொல்லிட்டாங்க. அண்ணன் வந்தாரு. அழகிய தமிழ் மகனுக்குதான் போகணும்ன்னு ஒரே அடம்.
சரி, சிங்கம் சிங்கிளா கொண்டாடுற கடைசி தீபாவளி. இன்னும் கொஞ்ச நாள்ல மஞ்ச தண்ணி தெளிச்சு பலி கெடா கொடுக்கப்போறதுக்கு முன்னே ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்ன்னு ஓகே சொல்லிட்டாங்க. விஜய் படமா? அதே மசாலா கதைதானே! என்ன பண்றதுன்னு நான் யோசிக்க, சரி, ஒரு பதிவெழுத ஐடியா கிடைச்சாச்சுன்னு நானே என்னை சமாதான படுத்திக்கிட்டேங்க. அப்பா செலவுல (டிக்கேட் பணம் அப்பாதேனே போடபோறார்) சூனியம்ன்னு தெரிஞ்சும் படவிமர்சனம் எழுதி பல மாதங்கள் ஆச்சேன்னு ஓகே சொல்லிட்டேன்.
படம் ஆரம்பிக்கும்போதே டாக்டர் விஜய்ன்னு வரும்போது பின்னால விசில் பறக்குது! நான் தலையில அடிச்சுக்கிட்டேன். (டாக்டர் பட்டம் இப்படி ச்சீப்பா போச்சே!) படம் ஆரம்பிச்சதும், ஒரு சண்டை, அதை தொடர்ந்து ஒரு பாட்டு, ஹீரோயின் இண்ட்ரோ, ஹீரோயினோட சின்ன சண்டை, அதுக்கப்புறம் காதல் டூயட், அப்புறம் ஹீரோவோட தனி ட்ராக் = கதை(??), சண்டை, சுபம்ன்னு எல்லா விஜய் படம் போலவே இதுவும் அமைஞ்சிருக்கு. நடுநடுவில் குத்துப்பாட்டு. வித்தியாசம் என்னன்னா மற்ற படத்துல ஹீரோ விஜய், வில்லை இன்னொருத்தர். ஆனால் இதில், ஹீரோ = விஜய், வில்லன் = விஜய்.

"நீயும் நானும் ஒன்னு
காந்தி பிறந்த மண்ணு
டீக்கடையில நின்னு
தின்னு பாரு பன்னு.. "
இதுக்கு க(கா)விதை போட்டியில முதல் பரிசு. என்ன கொடுமை கவிதாயினி இது!!
படம் முழுதும் பஞ்ச் டயலோக் பறக்குது. “எவ்வ்வ்வ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்ய மாட்டோமா என்ன”, “அடடடடடே”, “நான் போக்கிரிடா”ன்னு மார் தட்டி பெருமை பட்டுகொள்கிறார் கதாநாயகன். படம் முழுதும் ஆங்காங்கே இவர் மாலையுடந்தான் திரிகிறார். மாலை மற்றும் புகழ் மேல் என்ன ஈர்ப்போ தெரியவில்லை..
ரஹ்மான் பாடல்களை அருமையாக கம்போஸ் பண்ணியிருக்கிறார். ஆனால், படத்தில் ஒவ்வொரு பாடல்களும் கஷ்டப்பட்டு திணிக்கப்பட்டதுபோல கதைக்கும் பாடல்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் வருகிறது. ஒட்டவே இல்லை! என்ன கொடுமை ரஹ்மான் இது!!
பல காட்சிகளில் விஜயின் நடிப்பு மற்ற நடிகர்களை ஞாபகப்படுத்துகிறது. இரட்டை வேடத்தில் விஜய் என்று அறிவிக்கும்போது, ஏதாவது வித்தியாசம் இருக்குமோ (இல்லைன்னு தெரிஞ்சும்) என்று எதிர்ப்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்! அதே கிறுக்குத்தன நடிப்புதான் இதிலேயும்!
ஷ்ரேயா.. என்னத்த சொல்றது!!! திருவிளையாடல் ஆரம்பம் ஷ்ரேயா, சிவாஜி ஷ்ரேயா, அழகிய தமிழ் மகன் ஷ்ரேயா.. இதில் குறைந்த பட்சம் அஞ்சு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியுமா என்னாலன்னு எனக்கே தெரியலை. அதே கதாப்பாத்திரம், அதே ஸ்டைல், அதே மாதிரி உடைகள்!
தேவையே இல்லாத ஒரு கதாப்பாத்திரம்.. நமிதாவுடையது.. எதுக்கு வந்தார்ன்னே தெரியவில்லை! அந்த அளவு அவருடைய கேரக்டர் படத்துல ஸ்ட்ரோங்கா(!!) இருக்கு! சின்ன வயசுல போடாமல் விட்ட உடையெல்லாம் இப்போ அணிந்தே தீருவேன்னு சபதம் எடுத்துட்டார் போல.. அவர் ஆசையெல்லாம் நிறைவேற்றிகொண்டார்..
ஆங்.. நமிதா கேரக்டரை பத்தி சொல்லும்போது இன்னொரு கேரக்டர் ஞாபகம் வருது. ஷாகிலா! எதுக்கு இவர் வரணும்? அவசியம் என்ன? கடைசி வரைக்கும் எனக்கு விடை கிடைக்கலைங்க. உங்கள் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா..

2 விஜய்க்கும் வித்தியசம் கூட தெரியவில்லை விஜயின் நெருங்கிய நண்பர்களுக்கு. கருமம் இவங்களுக்குதான் தெரியவில்லை.. காதலி ஷ்ரேயாவுக்குமா தெரியவில்லை? சரி, ஓட்டப்பந்தயம் வச்சி யார் ரியல்.. யாரு போலின்னு கண்டுபிடிக்கிறேன்னு ஒரு அறிவுப்பூர்மா முடிவெடுத்தீங்க. அவங்க ஓடும்போதுக்கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை?
க்ளைமேக்ஸ் முன்னே நடக்கும் ச்சேஸிங் காட்சியில் ஒன்றைக்கூட நம்புற கரமா இல்லை. மோட்டர்லேயே 360 டிக்ரீ சுற்றுவதும் பாய்ந்து லாரியில் ஏறுவதும்.. என்ன கொடுமை சார் இது!
இப்படி பட பார்க்கும்போது நானே நிறைய கேள்விகளை அடுக்கி வச்சேன். வந்து எழுதுறதுக்குள்ள எல்லா பாய்ண்டைஉம் மறந்துட்டேன். வேணும்ன்னா திரும்ப பார்த்துட்டு அந்த விட்டுப்போனா ஓட்டைகளை எழுதுவோம்.
ஓட்டையிலேயே பெரிய ஓட்டை க்ளைமேக்ஸ் சீன். அது என்னன்னு நீங்களே பர்த்து தெரிஞ்சிக்கோங்க. யாம் பெற்ற துன்பம் இவ்வகையும் பெருக. :-P
படத்தில் எல்லாமே சொதப்பலாக இருந்தாலும் 2 ப்ளஸ் இருக்கு. ஒன்னு ரஹ்மான். இரண்டாவது எடிட்டிங் ஆண்டனி. அவருடைய எடிட்டிங் சூப்பரா வந்திருக்கு. கேளாயோ பாடலில் வரும் க்ராஃபிக்ஸ் அருமையா வந்திருக்கு.
அழகிய தமிழ் மகன் = அழகிய(??) தமிழ்(!!) மகன்???
Posted by MyFriend at 6:36 PM 63 comments
Wednesday, February 28, 2007
167. எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது!
எது சிறந்தது?
இப்படி என் தோழி கேள்வி கேட்டு, மொழி தான் வென்றது..
ஏன்னா இங்கே மலேசியாவில் மொழி மட்டும்தான் வெளியாகியிருக்கு! பருத்திவீரன் இன்னும் இல்லை..
என்ன இருந்தாலும் மொழி நாங்கள் எதிர்ப்பார்த்த படங்களில் ஒன்றுதான். திடீர் ப்ளான் போட்டோம். கிளம்பினோம்.. அப்போதும் படத்துக்கும் 10 நிமிடம் லேட்டு!!
உள்ளே போகும் போது ஒரு காட்சி.. ஒரு பண்ணையார் வீட்டுப் பெண் கோயிலில் நடந்து போக, அவளிடமிருந்து ஏதோ கீழே விழ, பக்கத்தில் உள்ள பிச்சைக்காரன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருவருக்குமிடையே காதல் பூப்பூக்கிறது! உடனே நாம் திரும்பி, நாம் தப்பான தியேட்டரில் புகுந்துவிட்டோம் போல.. எனக்கு தெரிஞ்சு படத்துல இந்த ரெண்டு பேரும் நடிக்கலைன்னு சொல்லி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.. திடீர்ன்னு பிரகாஷ்ராஜின் சிரிப்பு அலைகள். திரும்பி பார்த்தால் பிரகாஷ் ராஜ் - பிரித்திவிராஜ். அந்த படத்துக்கு ரீரெக்கார்டிங் செய்கிறார்கலாம். திரும்பவும் போய் இருக்கையில் அமர்ந்தோம்.
படத்தின் காமெடி அப்போது வெடிக்க தொடங்கியது (எனக்கு தெரிந்து!).. கிளைமேக்ஸின் முதல் காட்சி வரையிலும் வெடித்துக் கொண்டேதான் இருந்தது.
இவர்கள் குடிப்போகும் அபார்ட்மெண்டில் குடும்பஸ்தனுக்கு மட்டும்தான் வீடு என்று சொல்ல, பிரகாஷ் பிருத்திவியை திருமணம் செய்துக்க சொல்றார். அதற்கு நான் ஒரு பெண்ணை பார்க்கும் போது காமிக் புத்தகத்தில் வருமே அதுபோல என் தலைக்கு மேல் பல்ப் எரியணும், மணி அடிக்கணும்ன்னு சொல்றார். அதே போல், அந்த பல்ப்பும் மணி எப்படி அடிக்கிறது என்பதை அழகாக காட்டியிருக்காங்க.. இதை கிண்டல் பண்ணும் பிரகாஷ்க்கு எப்படி அதே பல்பும் மணியும் அடிக்கின்றது என்பதும் ஸ்வாரஸ்யம். :-))
பிருத்திவி சமீபத்தில் மலயாள படத்துக்குகாக சிறந்த நடிகர் பட்டம் வாங்கியதாக கேள்விப் பட்டேன். இவர் தமிழிலும் வாங்குவார் என்ற நம்பிக்கை இருக்கு. இவர் ஜோ மீது காட்டும் அன்பு, பாசம், காதல்.. பிரகாஷ் மீது வைத்திருக்கும் நட்பு.. மற்றவர்களின் மீது வைத்திருக்கும் மரியாதை, அவர்கள் கஷ்டப்படும்போது பரிதாபப்படும் இவர் மனது... சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத இவரது கோபம்.. என்று இவருடைய ஒவ்வொரு பரிணாமத்தை பற்றியும் சொல்லிட்டே போகலாம்.
ஜோதிகாவின் intro சூப்பர். சூர்யா, இனி நீங்க ஜோதிகாவிடம் பழகும்போது கொஞ்சம் தள்ளியே பழகுங்க.. ஹிஹி.. படத்தை பார்ப்பதற்கு முன்னே இவர் deaf & dumbன்னு எனக்கு தெரிஞ்சதாலே எந்த கட்டத்தில் இவர் திரையில் சொல்வார் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன். ஆனாலும், இவர் deaf & dumb என்பதை ஒரு கெத்தா தான் சொன்னார். அவருக்குள் உள்ள தன்னம்பிக்கையை அந்த ஒரு விநாடியிலேயே நமக்கெல்லாம் புரிய வைத்துட்டார். ஒரு கட்டத்தில், பிருத்திவி இவருக்கு ஒரு பிண்ணணி குரல் கொடுக்க முயற்சி செய்ய இவர் கடுப்பாக, அதன் காரணமும் சரியென்றே எனக்கு தோணுது. தன் கண்களை இவர் உருட்டி உருட்டி.. முகத்தை ஆட்டி ஆட்டி பேசும் விதம் உண்மையிலேயே இவர் எவ்வளவு ஹோம்வர்க் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.. எல்லாரும் புகழ்ந்து பேசும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கூட இவர் நன்றாக செய்திருக்கிறார் என்று நான் ஒப்புக் கொள்ளவே இல்லை. மற்றவர்களும் இதை விட நன்றாக செய்திருப்பார்கள் என்று வாதாடினேன். ஆனால், இப்போது சொல்கிறேன்.. இவர் நடிக்காதது, தமிழ் திரையுலகிற்கு ஒரு இழப்புதான். ஒரு அருமையான நடிகையை இழக்கிறோம். :-(
செல்லம் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருக்கார். ஸ்வர்ணமால்யாவிடம் தான் ஒரு CBI எனச் சொல்ல, அவர் நான் எப்படி நம்புறதுன்னு கேட்க.. அதுக்கு இவர் "கூட் குவச்சன்.. நான் இப்படியே நடந்து பொறேன். CBIன்னு கூப்பிடுங்க. நான் திரும்பி பார்ப்பேன்"கிறார். ஒரு கட்டதில் அவர் சீரியஸாக ஒன்னு சொல்ல அது எடுப்படாமல், "எனக்கு காமெடி மட்டும்தான் வருது. சீரியஸா ஒன்னு முயற்சி செய்தா அது வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது" என்கிறார்.
ஸ்வர்ணமால்யா ஜோதிகாவின் தோழியாக வருகிறார். இவர் பிருத்திவிக்கு sign language கற்றுக் கொடுத்தாரோ இல்லையோ. படம் முடிந்து வெளிவரும்போது ஆடியன்ஸ் கண்டிப்பாக இந்த மொழியை கற்றுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு சுலப்மாக கற்றுக் கொடுத்தார். நானே படம் முடிந்து வெளிவரும்போது, அந்த மொழி பெனக்கும் புரிந்தது.

படத்தில் மிக குறைவான கதாபாத்திரங்களை வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். குறிப்பாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் 'பட்டாபி' பாஸ்கர். படம் ஆரம்பத்தில் ஒரு காமெடியனாக தெரிந்தாலும், போக போக அவரின் சோகங்கள் நம்மையும் வாடுகின்றது. அவரது நடிப்பும்.. சாரி.. அவர் அந்த professor-ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவரை தவிர்த்து ஜோவின் பாட்டி மற்றும் ஜோவின் கார்டியன் குடும்பம் மட்டுமே இதர கதாபாத்திரங்கள்.
என்னடா எல்லாமே காமெடி காமெடின்னு சொல்றேனே. செண்டிமெண்ட் இல்லையான்னு கேட்கறீங்களா? இருக்குங்க.. எப்படி இல்லாமல் போகும். படத்தின் இன்னொரு ப்லஸ் இதுதானே! ஆனால் பரணி இவைகளை அழகாய் லிஸ்ட் போட்டு காட்டிட்டாரு பரணி. இவர் சொன்ன அந்தந்த காட்சிகள் என்னையும் மிகவும் பாதித்த காட்சிகள். அதை அவர் அழகாய் இங்கே சொன்ன் பிறகு நான் அதை திரும்பவும் எழுத வேண்டாம்ன்னு நினைக்கிறேன். அதுவும், பிருத்திவி ஜோதிகாவும் இசையை உணர வேண்டும் என்று அவருடைய கைகளை ஸ்பீக்கர்களில் வைக்கும் காட்சி இருக்கே!! அப்பப்பா!! அருமை அருமை!
இசையை பற்றி சொல்லியே ஆகணும் இங்கே! தேவையே இல்லாத இடத்தில், அர்த்தமே இல்லாத பாடல்களை போடும் படங்களுக்கு நடுவே, அர்த்தமுள்ள பாடல்களை தேவை படும் இடத்தில் சரியாக தொகுக்கப்பட்டதுக்கு ஒரு சபாஷ்.. பாடசில இடங்களில் இசையே இல்லாமல் மௌனம் காப்பதும் ஒரு மொழி. அதுக்கு இன்னொரு சபாஷ்!
சம்பாதித்த பணங்களை திரும்பவும் அதிலேயே போட்டு ரிஸ்க் எடுப்பவர் ஒருவர் கமல் என்றால் இன்னொருவர் பிரகாஷ்தான். இவரின் நாம், கண்ட நாள் முதல், அழகிய தீயே மற்றும் மற்றவைகள்.. தமிழ் திரையுலகின் அடுத்த பரிணாமத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எடுக்கப் பட்டு நன்றாக ஓடாமல் இவர் கையை சுட்டுக் கொண்டதே மிச்சம். ஆனாலும், இவர் தைரியமாக மொழியை எடுத்திருக்கிறார். இவர் மென்மேலும் நல்ல படங்களை எடுக்க வேண்டுமானால், நாம்தான் மொழியை போன்ற படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். சண்டை, ரத்தம் போன்ற படங்களுக்கு நடுவில் ஒரு இதமான ஆனால் கனமான படம் பார்த்த திருப்தி.
ஒரு புது மொழியையும் கற்றுக் கொண்ட திருப்தி!
Posted by MyFriend at 12:47 PM 44 comments
Labels: விமர்சனம்
Saturday, January 27, 2007
158. பொங்கல் முடிந்தாலும் ஆசை குறையவில்லை..
ஒரு வாரத்துக்கு ஊரும் சுத்தியாச்சு.. பொங்கலும் சாப்பிட்டாச்சு.. பொங்கல் படங்களையும் பார்த்தாச்சு..
படத்தை தனி தனியாக மேயப் போவதில்லை. நம் நண்பர்கள் ஒவ்வொன்றையும் நன்றாக அலசி காயப்போட்டுட்டாங்க.. எல்லா படங்களுக்கும் சேர்த்து ஒரே பதிவுதான்!
ஆழ்வார்
'வரலாறு' படைத்த 'தல'யின் அடுத்த பரிமாணம். புது இயக்குனரின் கீழ் ஆழ்வாராக வந்து சமுதாயத்தில் களை புடுங்குகிறார். ஐயராக இருந்தவர் பிண அறையில் ஏன் வேலை செய்கிறார் என்ற காரணம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு அவதாரமாக வேஷம் போட்டுக்கொண்டு போவதிலும் லாஜிக் இடிக்கிறது. போலிஸ் கொலைகாரனை கண்டுப்பிடிப்பதில் பெரிய பரப்பரப்பு இல்லை.
அதிகம் பேசாமல், முகத்தை இறுக்கி வைத்துக் கொண்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சியில் சிரித்து மனதை அள்ளுகிறார். பாலாவின் 'நான் கடவுள்' படத்திலிருந்து தான் நீக்கப்பட்டதை ரொம்பவும் நினைத்து வருந்தியிருக்கார் நம்ம தல. அதான், "கடவுள்.. நான் கடவுள்" என்ற வசனங்களும், கடவுளாக அவதாரம் எடுத்து கெட்டவர்களை அழிக்கிறார் போலும்.
அசின் - கீர்த்தி சவ்லா - படத்தில் அஜித்துக்கு 2 நாயகிகள். ஆனாலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை. விவேக்கின் அதே பழைய பானி காமெடி - சிரிக்க முடியவில்லை. பாடல்களும், பாடல் காட்சிகளும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.
செல்லா இயக்குனராக ஒரு பலமான கதையை இறக்கியிருக்கலாம். அஜித் தைரியமாக ஒரு புது இயக்குனரை நம்பி செல்லாவுக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார். அசின் இனி கதையை கேட்டு, தீர விசாரித்து ஒப்புக்கொள்வது நன்று.
போக்கிரி
தெலுங்கு ரீமேக் என்பதால் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலாத படம்தான். ஏற்க்கனவே நான் மகேஷ் பாபு - இல்லியனா நடித்த போக்கிரியை பார்த்தவள்.
ஆனாலும், தமிழில் கொஞ்சம் அதிகப்படியாக மசாலாக்களை சேர்த்து ருசியான ஒரு சமயலை செய்து கொடுத்திருக்கிறார் பிரபு தேவா. விஜயின் நடை - உடை - பாவனை.. அனைத்தும் மகேஷுக்கு சொந்தமானவை. அசின் - இல்லியானா கேரக்டர் அச்சு அசல் அதேதான்.
விஜய் க்ளைமேக்ஸ் பகுதியில் போலிஸ் ட்ரஸ்ஸில் பார்க்க சகிக்கலை. காக்கி சட்டை இவருக்கு பொருத்தமில்லை. மகேஷுக்கும் இது பொருத்தமில்லைதான். அதான் அவர் பிரகாஷ் ராஜை (தெலுங்கிலும் இவரேதான்) கொல்ல போகும்போது காக்கி சட்டையில் போகவில்லையே!!! இவர் மட்டும் ஏன்? ரெண்டு படத்துக்கும் வித்தியாசம் காட்ட இவர் எடுத்த முயற்சியோ???
அசின் - விஜய் காதல் ரசிக்கும் ரகம் (தெலுங்கு ஜெராக்ஸ்தான்).. அதைவிட, வைகைபுயல் வடிவேலு குங்ஃபு மாஸ்டராய், பிச்சைகாரனாய், பல்லனாய், சுட்டும் விழி சுடரே பாட்டுக்கு அசினுடன் ஆடும் சன்ஜய் ராமசாமியாய் கலக்கிட்டாரு.
பிரகாஷ் ஜெயிலில் பண்ணும் கூத்து ரசிக்கலாம். ஆனாலும் இதுவும் தெலுங்கிலிருந்து சுட்டதுதான். அசின் அழகு. கொடுத்த ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார்.
படத்தில் இன்னொரு ப்லஸ் பாடல் காட்சிகள். பிரபு தேவா அல்லவா!!! நீ முத்தம் ஒன்று, வசந்த முல்லை பாடலும், காட்சிகளும் அருமை.
மொத்தமாக சொன்னால், தெலுங்கு போக்கிரியை தமிழ் போக்கிரி சாப்பிட்டு முழுங்கிவிட்டார் என்று சொல்லலாம். ஆனாலும், விஜய் இப்படி ரீமேக்களை செய்து மற்றவர்களின் வியர்வையை தன் வெற்றியாகிக்க கூடாது.

கெட்டவன் என்ற பட்ட பெயரை ரொம்பவும் பெருமையாக நினைப்பவன்.. தன் மாமாவை யார் மரியாதை குறைவாக பேசினாலும், அவர்களை உண்டு இல்லைன்னு பண்ணும் இளஞனாக பரணி @ விஷால். குடும்ப பாசத்தையும் நெசத்தையும் வலியுறுத்தும் இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கும் குறைவில்லை.
விஷால் முதன் முறையாக இந்த படத்தில் காமெடி ட்ராக்கையும் செய்திருக்கிறார். பானுவை பழி வாங்குவதற்க்காக சென்னைக்கு கூட்டிட்டு வந்து, ஆனால், பானு நீ ஐ லவ் யூ சொன்னால்தான் திரும்புவேன் என அடம்பிடிக்க, விஷால் மாயி ஸ்டைலில் பேசுவதும், கல்யாண வீட்டுக்கு வழி கேட்கும் நதியாவை விஷால் இறந்துபோன கல்யாணம் வீட்டுக்கு வழி காட்டி அங்கே நடக்கும் கூத்துக்களும் அருமை.
பிரபு - ரோஹினி (அண்ணன் தங்கையாகவும்), நாசர் - நதியா - நிழல்கள் ரவி - ஆகாஷ் (சகோதரர்களாகவும்), விஜயகுமார் இவர்களது தந்தையாகவும், பிரபு - நதியா (பிரிந்து வாழும் தம்பதியர்களாகவும்), விஷால் (ரோஹினியின் மகனாகவும்), பானு (நதியா - பிரபுவின் மகளாகவும்), மனோரமா (பிரபு - ரோஹினியின் தாயாகவும்) --> ஒரு பெரிய பட்டியலே நடித்திருகின்றனர்.
"ஒரு வார்த்தை கேட்க ஒரு வருடம் காத்திருந்தேன்" என்ற இந்த பாடலை வைத்து கஞ்சா கருப்பு செய்யும் கமெடியும் ரசிக்க வைக்கிறது.
படத்தின் கிளைமெக்ஸில் எப்படி நதியா திருந்துகிறார்? விஷால் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தாலும், அந்த கொலை செய்தது அவரில்லை.. பிறகு யார்தான் செய்தது?? ஜெயிலில் இருந்து விடுதலையாகும் விஷாலை கொலை செய்ய நாசரும், விஜயகுமாரும் திட்ட போடுகின்றனர்.. அது நிறைவேறியதா? விஷால் - பானு திருமணம் நடந்ததா??
நான் பார்த்த இம்மூன்று படங்களில் தாமிரபரணிக்குதான் முதலிடம்.

குரு
இன்னும் பார்க்கவில்லை.. அதனால், இந்த லிஸ்டில் சேர்க்கப்படவில்லை.

ஒலிச்சித்திரம்
இது பொங்கல் ரிலீஸ் இல்லை. 2005-ஆம் ஆண்டு மலயாளத்தில் வெளியான பை தே பீப்பல்(By The People) என்ற படத்தின் டப்பிங். பெயர் எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதா? 4 தே பீப்பல் [4 The People] (மலயாளம்) / 4 ஸ்டூடண்ஸ் [4 Students] (தமிழ்)-இன் இரண்டாம் பகுதிதான்.
படத்தின் முதல் சில காட்சிகள் 4 ஸ்டூடண்ஸின் க்ளைமேக்ஸ் காட்சிகள். அவர்கள் போலிசாரால் அடிப்பட்டு ஜீப்பில் ஏர்ரப்படும் நேரத்தில் இன்னொரு 4 பேர் அந்த கெட்டவனை சுட்டு விட்டு ஓடுவார்கள். நினைவிருக்கிறதா? அந்த 4 பேர்தான் இந்த படத்தின் நாயகர்கள்.
சித்திரம் பேசுதடி நரேன் இந்த 2 படத்திலும் இவர்களை பிடிக்கும் கமிஷ்னராக வருகிறார். ஆனால் ஒரு சின்ன திருப்பம்.. இந்த படத்தில், இவர்தான் அந்த பை தே பீப்பல் குழுக்கு உதவுகிறார்.
இந்த படத்திலும் பை தே பீப்பல் இறந்துவிடுகின்றனர்.. இவர்களை ஈடுகட்ட இன்னொரு 5 பேர் வருகின்றனர்.. 3 கல்லூரி மாணவர்கள் (2 ஆண் & 1 பெண்), 1 ஆட்டோ ட்ரைவர், 1 கூலி வேலை செய்பவன். இவர்களும் அவர்களது கடைசி கொலையை செய்ய திணற, எப்படி 4 தே பீப்பல் வந்து அதை முடிகின்றனர் என்பதுதான் க்ளைமேக்ஸ்..
Posted by MyFriend at 9:34 AM 30 comments
Labels: விமர்சனம்
Sunday, January 14, 2007
154. இந்த பொங்கலுக்கு உங்கள் சாய்ஸ் எது?
இந்த ரெண்டு படத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?

விஜய் பாடல் காட்சில வித்தியாசமா வந்துட்டா படத்துல வித்தியாசமா ஒரு கெட்-அப் போட்ட திருப்தி கிடைத்திருமா?
அஜித் வாலி பத்துல இருந்ததைபோல இளமையாயிட்டார். படமும் அவருடைய முந்தைய படங்களைப்போல் வசூலை அள்ளி குவிக்கவேண்டும்.
ரெண்டு படத்திலேயும் கலக்கலா இருப்பவர் நம்ம அசின்தான். 2005 தீபாவளியில் சிவகாசி - மஜான்னு இரட்டிப்பு மகிழ்சியில் இருந்தார். இப்போது இவருக்கு இரட்டிப்பு பொங்கல் கொண்டாட்டம்தான்..
இப்போது இந்த ரெண்டு படத்துக்கும் உள்ல வித்தியாசம் உங்களுக்கு தெரியுதா?
ரெண்டுமே சண்டைப்படம்தான். ரத்த ஆறு ஓடப்போகிறது இந்த படங்களில்.
நம்ம கார்த்திக்கு இதுதான்முதல் படம். அமீரின் இயக்கம் என்பதால், பையன் ஏதோ சாதிதிடிருபான் என்று எதிர்பார்க்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அமீர் தன்னோட படத்துல ஹீரோ ஆகபோறேன்னு சொன்னரே! இந்த படம்தான். கார்த்தியை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பாருங்க. முடி ஸ்டைலும், தாடியும், அவர் கத்தும்போது ஃபேசியல் எக்ஸ்பிரஷன் எலாம் அமீரை போலவே இருக்குல்ல?
விஷாலுக்கு இன்னொரு சண்டைகோழி இது. அதே செம்மணிலொரு கிளைமெக்ஸ் சண்டைக்காட்சி. நம்ம மகாலட்சுமி (அதாங்க குமரனின் அம்மா நதியா) & பிரபு, ஹரியோட இயக்கத்துல நடிச்சிருக்காங்க.
இப்ப நீங்க முடிவு பண்ணுங்க.. சண்டைகோழியா? அமீரின் சுயசரிதையா? போக்கிரி மகேஷை ஜெராக்ஸ் எடுத்து காப்பி அடித்திருக்கும் விஜயா? இல்ல என்ன கதைன்னு இன்னும் சஸ்பென்ஸா இருக்கும் ஆழ்வாரா? எது பார்கபோறீங்க?
என் சாய்ஸ்:
1- ஆழ்வார் & பருத்திவீரன் (எது ஃப்ர்ஸ்ட்ன்னு முடிவு பண்ண முடியவில்லை)
2- தாமிரபரணி
3- போக்கிரி (அசினுக்காக. தெலுங்கு போக்கிரியை பார்த்துவிட்டேன். ஜெராக்ஸ் எடுத்து திரும்பவும் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும்ன்னா நாமக்கு வேலை வெட்டி இல்லாதபோதுதான் படிப்போம். அப்போதுதான் நான் இதை பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.)
Posted by MyFriend at 1:22 AM 12 comments
Labels: விமர்சனம்
Monday, December 25, 2006
146. என்னம்மா கண்ணு.. ஆரம்பமாயாச்சு..
படத்தை பற்றி விமர்சனம் எழுதப்போவதில்லை இம்முறை.. மாறாக ஒரு குட்டி பதிவுதான்.
விஜய், சத்யராஜ் மற்றும் சிம்பு பிரபல நடிகர்களின் சிறந்த படங்களின் ரீமேக் படங்களில் நடிக்க ஆசைன்னு வெளிப்படுத்திய இன்னேரத்தில்... அஜித் ஒரு படி மேலே போய் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார். ஆனால், இங்கு தனுஷ் சத்தம் இல்லாமலேயே மிஸ்டர் பாரத்தின் ரீமேக்கில் நடித்தே விட்டாருன்னுதான் சொல்லவேண்டும்.
இதை உருதிப்படுத்துவதைப்போல் என்னம்மா கண்ணு ரீமேக் பாடலும் அமைந்திருக்கிறது.
வில்லனிடமிருந்தே பணம் வாங்கி.. அவர் செய்யும் வியாபாரத்தையே துவக்கி.. குறுகிய காலத்தில் அவருக்கே போட்டியாக வந்து.. அவரை நிம்மதியாகவே விடாமல்.. டென்ஷனாக்கி.. கடைசியில் போட்டியின் காரணத்தை அறிந்து திருந்துவதுதான்.. இந்தக் கால மிஸ்டர் பாரத்தாக திரு என்கிற தனுஷ்.
திருவின் விளையாட்டின் ஆரம்பத்தைதான் திருவிளையாடல் ஆரம்பம்ன்னு வைத்திருக்கிறார்கள். இதில் குரு என்கிற பிரகாஷ்ராஜ் சத்யராஜைபோல் கெட்டவர் இல்லை. தன் தங்கையின் மேல் அதிகப்படியான பாசத்தை வைத்திருக்கும் அண்ணன் இவர். இவரின் மேல் தப்பே இல்லை.
ஷ்ரியாவுக்கு பாடல்களில் ஆடுவதும் படத்தின் முதல் பாதியின் காதல் காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பாடல்களை வித்தியாசமாக படம் பிடித்துள்ளனர்.
இக்காலக் கட்டத்தில் வெளியான ஈ மற்றும் வெயில் போன்ற கனமான படங்களின் தாக்கத்திலிருந்து மீள இப்படிப் பட்ட காமெடி படம் நமக்கு நல்ல என்டெர்டைனாக அமையும். நீங்களும் படத்தை பார்த்து ரசியுங்கள்.
Posted by MyFriend at 7:45 PM 20 comments
Labels: விமர்சனம்
Tuesday, December 05, 2006
119. ரெண்டு @ இரண்டு @ 2
அட.. ரெண்டுக்கு விமர்சனம் போட ப்ளாக் திறந்தா, இது 119-ஆவது போஸ்ட்..
1+1+9 = 11
1+1=2
இதுலகூட ரெண்டுன்னுதான் வருது.. ;-) குஷ்பு தயாரிப்பில், கண்வர் சுந்தர். சி இயக்கிய படம் ரெண்டு. வெள்ளித்திரைக்கு வந்து இரண்டு நாளில் வரி விலக்குக்காக "இரண்டு"ன்னு பெயர் மாற்றம் காணப்பட்டது..
சுந்தர். சி படம்ன்னாலே காமெடி கலந்த மசாலா படம்ன்னு எல்லாருக்குமே தெரியும். இந்த படமும் அதே! அதே!மாதவன் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருவருக்கு ரீமா சென்.. இன்னொருவருக்கு புதுமுகம் அனுஷ்கா..
படத்தில் சீரியலாக கொலை விழுகிறது. ஒவ்வொருவரையும் கொல்வதுக்கு முன்பே கொலை நடக்க இருக்கும் தேதியும் நேரத்தையும் போலிஸுக்கு கொடுக்கப்படுகிறது. கொலையாளனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது.இந்த சமயத்தில் "வரட்டா வரட்டா"ன்னு கேட்டுக்கிட்டே திரையில் வராரு மாதவன் @ சீனு. சீனு கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு தன் தாய்மாமனிடம் வேலை சேர வருகிறார். மாமாவாக வடிவேலு. மாயாஜால வித்தை காட்டும் கரிகாலனாக கலக்கிட்டார் போங்க! ஒவ்வொரு தடவையும் மேஜிக் செய்யுறேன்ன்னு அடி வாங்குகிறார்.
மாமாவின் பிஸினெஸ் சூடுப்பிடிக்காததற்க்கு இன்னொரு காரணம், ரீமா சென்னின் கடல் கன்னிங்கிர பேர்ல போட்டிருக்கும் கூடாரம்தான். சீனு வந்ததும் வராததுமாக, தன் மாமாவின் பிஸினெஸை டெவெலப் பன்றதாக சொல்லி அவர் ஏறி வந்த ஆட்டோவையே கடன் வைக்கிறார். அட்டோகாரரும் அங்கேயே டேரா போடுறார்.
மாதவன் கொடுக்கும் ஒவ்வொரு ஐடியாவும் சொதப்பல ஆக..மாதவனோ ரீமா சென் மீது காதல் வயப்படுகிறார். ரீமா-மீது காதலாய் இருக்கும் மணிவண்ணனை அடித்து துவைக்கும் போது ரீமக்கும் காதல் பத்திக்குது. இந்த சமயத்தில் மாதவன் ரீமாவின் முறைமாமனை கொலை செய்வதை ரீமாவும், பாக்யராஜும் பார்க்க.. அடுத்த சீன்லேயே அவர் ஜெயிலுக்கு போகிறார். அடித்து விசாரித்தும் மாதவன் தான் கொலை செய்யவில்லை என்று சொல்ல.. அங்கே வடிவேலு வந்து ஒரு மேஜிக் செய்ய மாதவன் தப்பிக்கிறார்.
அதே நேரத்தில் பாக்யராஜ் கொலை செய்பவன் குருடனாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கிறார். கண்ணன் என்ற இன்னொரு மாதவன் தன் ஃப்ளாஷ்பெக்கை சீனுக்கு சொல்கிறார். கத கேட்டதும், சீனு, வடிவேலு, ரீமாவும் அந்த கடசி கொலையை செய்ய உதவுகிறார்கள்.

சந்தானம்: (தேவதர்ஷினி கணவரை பார்த்து) பப்பு, அதான் சொல்லிட்டாங்கல்ல.. போய் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாரு!(தேவதர்ஷினியை பார்த்து) அண்ணி, உங்களுக்கு கல்யாணம் ஆகி 6 வயசுல ஒரு குழந்தையே இருக்கு!
தே.த: எனக்கா?????
ச: பின்னே? கிழவனுக்க்கா?
-----
தே.த: எங்கடா போன? ஆளையே காணோம்?
----

ஒவ்வொருவரும் இறக்கும் அந்த காட்சியில் நம்மை அறியாமலேயே நம் கண்களின் ஓரத்தில் சின்ன ஈரம். அந்த சம்வத்தில் தன் கண்ணை இழந்து குருடனாகும் கண்ணன் அ.க்.அ மாதவன் ஒவ்வொருவரையும் பழி வாங்கி அந்த உண்மையை வெளிகொண்டு வருகிறார்.

பாக்யராஜ் ரோல் பெரிசா செய்யப் போறார்ன்னு எதிர்பார்க்க வச்சு ஏதும் செய்யாதது வருத்தத்தை தருது.
இந்த வார இறுதியில் நீங்கள் படம் பார்க்கனும்ன்னு நினைச்சீங்கன்னா இந்த படத்தை பார்க்கலாம்.

Posted by MyFriend at 9:24 AM 7 comments
Labels: விமர்சனம்
Tuesday, November 21, 2006
101. கிழக்கு கடற்கரை சாலை--> யாரும் போகாத சாலை!!!!
ஸ்ரி காந்த், S.S. ஸ்டான்லி மூன்றாவது முறையாக இணையும் கிழக்கு கடற்கரை சாலை.. என்ன ஒரு அழகான தலைப்பு. இதுதான் இந்த வார இறுதியில் நான் பார்க்கும் தமிழ் படம்ன்னு முடிவு பன்னி பார்த்தேன். ஆனால், படம் !!!!!!!!!
நான் இங்கே சொல்ல போவதை மூன்றாக பிரிக்கிறேன்..
1- விமர்சனம்
தான் என்ன வேலை பார்த்தாலும் பரவாயில்லை, ஆனால், அந்த வேலை கிழக்கு கடற்கரை சாலையில்தான் இருக்க வேண்டுமென்று அங்கே புதிதாக வரும் ஹீரோ, சந்தோஷ் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை சேர்கிறார். பெட்ரோல் போட வரும் பணக்கார ஹீரோயினை (பிரியா), நாம் காதலிக்க முடியாது என கூறும் நண்பர்களிடம் (முத்துக்காளை, கஞ்சா கருப்பு) தான் காதலித்து காட்டுவதாக சவால் விடுகிறார் சந்தோஷ்.
சவாலில் வெற்றி பெற சந்தோஷ் எடுக்கும் முயற்ச்சிகளை பார்க்கவே வெறுப்பாகவே இருக்கிறது. பிரியாவுக்கும் சந்தோஷின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் தன் அண்ணன்/லீடிங் லாயர்/ வில்லன் (GTR)-இடம் புகார் செய்கிறார். அண்ண்ன் மிறட்ட, சந்தோஷ் பிரியாவிடம் வந்து நிற்க்க "நான் உன்னை காதலிக்கதானே சொன்னேன். தப்பு பன்ன சொல்லலியே?"ன்னு கேட்க்க, பிரியா அவனின் நிலமையை பார்க்க.... "சரி, தினமும் நான் உன்னை வந்து பார்க்கிறேன். நீ என்னை தேடி வராதே!"ன்னு சொல்ல.. இவர்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக வளர்கிறது..
அண்ணனுக்கு காதல் தெரியவர, தங்கையை அவரே கடத்த, பழியை சந்தோஷ் மேலே போடுகிறார். ஹீரோ ஹீரோயினை கண்டுபிடிக்க.. ஹீரோயின் தன் அண்ணனை பற்றி அறிய.. அண்ணன் இரண்டு பேரயும் கொல்ல துணிகிறார். அதுவும் எப்படி? இரண்டு பேரையும் கட்டி கடலில் வீசுகிறார்.
இடை இடையே ஹீரோ தனக்கு நடக்கும் அனுபவங்களை கடல் நீருடன் பேசுகிறார். ஃப்லாஷ்பேக் காட்சிகளாக வராமல் ஒரு சில வரிகளாகவே முடிந்தது. சுனாமின்னு சொன்னா மக்கள் (பரிதாபப்பட்டு) படத்தை பார்க்க வருவார்கள் என்று இயக்குனர் தப்பு கணக்கு போட்டுவிட்டார் போல.
2- படத்தின் சொதப்பல் காட்சிகள்
1- யாருன்னே தெரியத ஹீரோ பெட்ரோல் பங்கில் படுக்க இடம் கேட்டு வருகிறார். (கி.க. சாலையில் படுக்க வேற இடமே இல்லையா?)
2- இடம் கொடுக்காத வேலையாள்கள் ஹீரோவுக்கு 2 பழம் கொடுத்து பஸ் ஸ்டாப்-ல படுக்க சொல்கின்றனர். (எதுக்கு இந்த 2 பழம்? டின்னரா?)
3- பங்க்கில் கலாட்டா செய்யும் சிலரை அடித்து நொறுக்குகிறார் ஹீரோ. அதுக்க்கு பெட்ரோல் பங்கின் மேனேஜர் "இங்கே நிறைய பேர் வந்து கலாட்டா செய்கிறார்கள். நீ இங்கேயே தங்கி இதை பார்த்துக்கொள்"ன்னு சொல்லுறாரு. (அப்ப, கி.க.சாலயிலே நிறைய ரௌடிகள் தானா?)
4- பெட்ரோல் போட வரும் பிரியாவின் பேக்கை களவாடும் முத்துக்காளை (இனிமேல், பெட்ரோல் போடும் போது உங்கள் பேக்கை காணும்ன்னா பங்கில் வேலை செய்கிறவர்களின் மீது புகார் கொடுங்கள். உங்கள் பை கிடைத்துவிடும்.)
5- பணக்கார பெண். பெட்ரோல் போடும் நாம் காதலிக்க முடியாதுன்னு நண்பர்கள் சொல்ல நான் காதலிக்கிறேன் அன்று சவால் விடும் ஹீரோ. (அப்ப, காலேஜ் படிக்கும்/ பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்கள் யாரவது பார்த்தால், நீங்கள் சவால் விட்டதால்தான் காதலிப்பீர்களா? இதுதான் உண்மையான காதலா?)
6- ஹீரோவின் வற்புறுத்தல் தாங்காமல், தானே அவரை தினம் தேடி வந்து பார்ப்பேன் என சொல்லும் ஹீரோயின். (பிடிக்கவில்லை என்றால், பார்க்கவே அறுவருப்பாக இருக்கும் பட்சத்தில், ஏன் நீங்கள் அவரை தினம் தேடி செல்ல வேண்டும்? ஹீரோவின் தொல்லைகளை குறைக்க வேற வழிகளே இல்லையா?)
7- சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட தன் சொந்தகாரர்களிடம் பேசுவதாக நினைத்து தினம் கடல் நீரிடம் பேசும் ஹீரோ (ஆனால், அந்த கவலயும் பாசமும் உங்கள் முகத்தில் பார்க்க முடியவில்லையே ஹீரோ?)
8- ஹீரோயின் காதலிப்பதாக சொனதும், ஹீரோ தான் காதலிக்கவில்லைன்னு சொல்கிறார். கேட்டால் "நீ என்னை காதலிப்பதாக சொல். நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்னுதானே சொன்னேன். உன்னை காதலிப்பதாக சொல்லவில்லையே?"ன்னு பதில் கூறுகிறார். (என்ன இது?)
9- ஹீரோயின் அண்ணன் ஒரு பிரபலமான வக்கீல்ன்னு சொல்லுராங்க. (ஆனால், ஒரு தடவை கூட கோர்ட்டுக்கோ இல்லை வக்கீல் உடை அணிந்தோ பார்க்க முடியவில்லை)
10- இரண்டு பேரையும் கடலில் வீசப்பட்டதும், ஒரு சுறா மீன் வருகிறது. ஆனால், இவர்கள் தாக்கப்படவில்லை (இவர்கள் invisible-ஆ இல்லை சுறா மீன் குருடா?)
11- இருக்கி கட்டப்பட்ட கயிற்றை கடலில் மூழ்கியிருக்கும் ஹீரோ அவிழ்த்து, ஹீரோயினையும் (கடலில் ரொம்ப ஆழமான் இடத்துக்கு தள்ளப்பட்ட இடத்திலிருந்து) காப்பாற்றுகிறார் (என்ன கொடுமை இது சரவணா?)
3- வேறு படத்தின் தழுவல்கள்
1- படத்தின் நாயகன் அறிமுகம் ஆகும் காட்சி
2- படத்தின் நாயகிக்கு பிடிக்காத வகையில் அவரை காதலிக்க முயல்வது
3- ஏதாவது ஒரு பொருளை, அம்மா அப்பான்னு நினைக்கிறது
உங்களுக்கு (இந்த படம் பார்த்தவர்/ பார்க்காதவர்) ஏதாவது சொல்வதுக்கு இருந்தால், பின்னூட்டம் இடுங்கள்.
Posted by MyFriend at 1:49 PM 6 comments
Labels: விமர்சனம்