Tuesday, December 30, 2008

12 வருடத்துக்கு பிறகு ஒரு வெற்றிகரமான சந்திப்பு : 28 மாணவர்கள் + 2 ஆசிரியர்கள்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பப்புள்ளியில் செய்யும் தவறு முதல் இடத்தில் வெற்றிப்பெற வேண்டிய வாய்ப்பை இழக்க வைத்துவிடும். இதுவே ஆரம்பப்புள்ளியில் சரியான நேரத்தில் புறப்பட்டு சீராக ஓடியிருந்தால் வெற்றி நிச்சயம்! அதனால்தான் இப்படிப்பட்ட விளையாட்டில் எப்படி முடிக்க வேண்டும் என்பதை விட எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர்கள் மிக கடுமையான பயிற்சிகளை விளையாட்டாளர்களுக்கு வளங்குவர்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னவெல்லாம் சாதித்திருந்தாலும், எங்கெல்லாம் போயிருந்தாலும் ஆரம்பப்புள்ளியை மறக்க முடியாது. ஆமாம்! நாம் வாயில் நுழையாத படிப்பெல்லாம் படித்து ஏ.சி. அறையிலும், விமானத்திலும், சொகுசு கார்களிலும் இப்போது பயணம் செய்தாலும், இதற்கெல்லாம் வித்தாக இருந்த நமது அ, ஆ சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும், ஆரம்பப் பள்ளியும், நண்பர்களும், அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளும், வாங்கிய அடிகளும், ஓடிய ஓட்டங்களும், சிரித்து மகிழ்ந்த தருணங்களும், கண்கள் கலங்கி நின்ற சம்பவங்களும், பரிட்சையில் பிட் அடித்த நேரங்களும் எப்போதுமே மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்து புதைந்து கிடைக்கின்றன.

வெகு சிலர் மட்டுமே அந்த பழைய நட்புகளை இன்னும் தன் தொடர்பில் வைத்திருக்கின்றனர். பலர் தன் வாழ்க்கை சக்கரம் ஓடும் வேகத்தில் இதற்கெல்லாம் நேரம் ஏது என்பதுபோல சுழன்று கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நீங்கள் நின்று திரும்பிப் பார்க்கும்போது “ச்சே.. வாய்ப்பு கிடைத்தபோது இந்த நட்பை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டதே! இப்போது இவர்களெல்லாம் எங்கே எப்படி இருக்காங்களோ!” என்று தோன்றவைக்கும் தருணம் மனதை மிகவும் புண்படுத்தும். பழைய நினைவுகளை நினைவில் கொண்டுவந்து கொஞ்சம் திருப்தி அடையவே முடியும்.

1996-ஆம் ஆண்டில் நாங்களும் எங்கள் ஆசிரியர்களும்

நான் சிறு வயதில் படிக்கும்போது ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பில் சொல்லும் ஒரு விசயம்: ”இன்னும் சில வருடம் கழித்து நீங்களெல்லாம் படித்து நல்ல வேலையில் இருக்கும்போது எங்கேயாவது எங்களை பார்த்தால் “வணக்கம் டீச்சர், நாந்தான் உங்கள் மாணவன்/மாணவி. 19XX வருடத்தில் உங்கள் வகுப்பில் படித்தேன். இப்போது ஒரு டாக்டராக/வக்கீலாக/ஆசிரியராக/பொறியியலாலராக வேலை பார்க்கிறேன்” என்று அன்று சொல்லப்போகும் ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக ஆக்கும். ஒரு பெண்ணுக்கு தாய்மை எப்படி அவளை முழுமையாக்குகிறதோ, அதேப்போல இந்த ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக்கும்”. அப்போதே என் மனதில் புதைந்த விசயம்! நானும் எப்போதாவது எனக்கு படித்து கொடுத்த ஆசிரியர் முன்னாள் நின்று “டீச்சர் என்னை நினைவிருக்கிறதா? 96-ஆம் ஆண்டு உங்கள் வகுப்பு மாணவியாக இருந்தேனே? வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்கினேனே! கணிதப்பாடம் நன்றாக செய்ததுக்கு நீங்க கூட தட்டிக்கொடுத்து முத்தம் கொடுத்தீங்களே!” என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த சந்தர்ப்பம் 12 வருடங்கள் கழித்து நேற்று அமைந்தது!
பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் ஆறாம்வகுப்பு வரை படித்து 1996-இல் நானும் நண்பர்களும் வெளியானோம். 12 வருடம் கழித்து ஒரு 2 மாதத்துக்கு முன்பு திரும்ப நண்பர்களெல்லாம் ஒன்றாக சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தேன். பல வகையிலும் கஷ்டப்பட்டு சிறுக சிறுக ஒவ்வொருவராக சேர்த்து 29/12/08-இல் சந்திக்கலாம் என ஏற்பாடானது.

காலை 11 மணிக்கு பத்துமலை கோவிலில் (முன்னாள் எங்கள் பள்ளி இந்த இடம்தான். பக்கத்திலேயே புதிதாக பள்ளி கட்டிக்கொண்டு அங்கே போனதும் எங்கள் பழைய பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டு கார் நிறுத்துமிடமாகவும், திருமண விருந்து நடக்கும் ஹாலாகவும் மாற்றப்பட்டுவிட்டது) எல்லாரையும் சந்தித்து சிறிது நேரம் அரட்டை அடித்தோம். பிறகு அனைவரும் கூட்டமாக பள்ளிக்கு சென்றோம். அப்போது எங்கள் மலாய் ஆசிரியை இப்போது அதே பள்ளியில் துணை தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். அவர் எங்களை பார்த்ததும் மகிழ்வுடன் வரவேற்றார். மற்ற ஆசிரியர்களை கூப்பிட்டு “இவர்கள்தான் என் பழைய மாணவர்கள்” என எங்கள் அனைவரையும் அந்த ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, எங்களில் நால்வர் (மற்ற அனைவரின் சார்பில்)அவருடன் பள்ளி அலுவலகத்துக்குள் சென்று இப்போதுள்ள பள்ளியின் நிலவரம், மாணவர்கள், ஆசிரியர்கள், பிரச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் என சில விசயங்களை கலந்தாலோசித்து விட்டு வந்தோம். அதன் பிறகு போட்டோஸ், போட்டோஸ், போட்டோஸ் என ஆங்காங்கே க்ளிக்கிக் கொண்டு பசி வந்ததும் அடுத்த இடம் பார்த்து கிளம்பினோம்.

மலாய் ஆசிரியர் ராஜேஸ்வரி டீச்சருடன் நாங்கள்

28 பேர் தாராளமாக உட்கார்ந்து சாப்பிட வசதியான இடம் எது என்று ஒரு பெரிய கேள்விக்கு விடை காணும் விதமாக அனைவரும் எஸ்.டி.சி ரெஸ்டாரண்டுக்கு பயணமானோம். அங்கே சுற்றி உட்கார்ந்த அனைவரும் எங்களையே பார்க்கும்படி பலவிதமான கூத்துகளை செய்து, உணவு அருந்தி, கலந்துரையாடினோம். இங்கேயும் போட்டோஸ் சில க்ளிக்கிவிட்டு அடுத்த இடத்துக்கு பயணத்தை தொடரலாமா என்று அனைவரின் கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் புறப்படலாம் என ஒரு மனதாய் முடிவெடுத்த பிறகு, நாங்கள் வாங்கிய நினைவுசின்னங்களை ஆளுக்கு ஒன்று என கொடுத்துவிட்டு 7 கார்களில் ரவாங்கை நோக்கி புறப்பட்டோம்.

உணவு விடுதியில் நாங்கள்

அங்கேதான் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கலாவதி வசிக்கிறார். அவரிடம் முன்னமே நாங்கள் வரும் தகவலை அவரிடம் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களை வர சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அவரும் அதே நேரம் அங்கே வந்திருந்தார். “வாங்க.. அனைவரும் என் வீட்டும் போகலாம்” என சொன்னதும் 7 கார்களும் அவருடைய வாஜா காரை தொடர்ந்தோம்.

அருமையான இரண்டு மாடி வீடு. பல வித வித்தியாசமான பொருட்களால் அலங்கர்க்கப்பட்டிருந்தது. வீட்டில் டீச்சரின் கணவரும், அவருடைய மூன்று அழகிய மகள்களும் எங்கள் அனைவரையும் சந்தோஷமாக வரவேற்றனர். அங்கிள் வீட்டில் இருந்த அனைத்து நாற்காலிகளையும் எடுத்து வந்து வைக்க வைக்க, நாங்கள் வீட்டின் உள்ளே வர வர.. ”என்னடா வந்துட்டே இருக்காங்க.. எத்தனை பேரப்பா!”ன்னு அவருக்கே பிரமிப்பாய் இருந்திருக்கும்.

ஒரு வழியாக எல்லாரும் வந்து அவர் வீட்டும் ஹால் நிறைத்துவிட்டோம். டீச்சர் எங்களின் வருகை அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொண்டுவந்துள்ளது என்று விளக்கினார். அவரின் குடும்ப உறுப்பினர்ர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரின் இப்போதைய பள்ளியை பற்றியும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் சொன்னார்.

வருடத்துக்கு முன் டீச்சர் எங்களுக்கு என்னென்னமோ பரிட்சையெல்லாம் வைத்திருக்கிறார். இப்போது டீச்சருக்கு நாங்கெல்லாம் சேர்ந்து பரிட்சை வைத்தோம். நான் 12 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட வகுப்பு போட்டோவை எடுத்து வந்திருந்தேன். அதை டீச்சர் கையில் கொடுத்ததும் அவர் அந்த போட்டோவை வைத்து எங்கள் ஒவ்வொருவரையும் கண்டுப்பிடிக்கும் வேலையில் இறங்கினார். அவர் ஒவ்வொருவராக கண்டுப்பிடிக்க, நாங்கள் எங்கள் இப்போதைய நிலை என்ன என்றும் அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அனைவரும் நல்ல நிலையில் இருப்பதை கேட்டு அவர் மிகவும் பூரித்து போனார்.

டீச்சரிடம் நாங்கள் அனைவருமே ஒரு தடவையாவது அடி வாங்கியுள்ளோம். அந்த தருணங்களை இப்போது ஒன்று கூடி அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அவர் எங்களை கிள்ளியது, அடித்தது, அறைந்தது, என அப்போது கசப்பான தருணங்கள் இப்போது பகிர்ந்துகொண்டபோது ஒவ்வொருவரும் சிரித்துக்கொண்டோம். ஒருவர் பாடம் செய்யாததால் இன்னொருவர் அடி வாங்கிய சம்பவங்களிலிருந்து, நாங்கள் செய்த குறும்பால் எங்கள் வகுப்பு தலைவன் ஓட ஓட துரத்தப்பட்டது வரை சம்பவங்கள் இப்போது நகைச்சுவையாக மட்டுமே தோன்றியது.

இதையும் தாண்டி டீச்சர் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த தருணங்கள், அவர் எங்களுக்கு சொன்ன அறிவுரைகள், பிரச்சனையான மாணவர்களை தனியே கூட்டிச்சென்று அவர்களின் பிரச்சனைகளை பகிர்ந்துக்கொண்டு அவர் வருத்தப்பட்ட நேரங்கள், நாங்கள் நன்றாக பரிட்சையெழுதி வெற்றிப்பெற வேண்டும் என்று அவர் கடவுளை பிரார்த்தித்த வேளைகள், நிறைமாத கர்ப்பிணியாய் உடல் நலம் சுகமில்லாமல் இருந்த சமயங்களிலும் எங்கள் நலனுக்காக பள்ளியில் எங்களுடன் எங்கள் கல்விக்காக அர்ப்பணித்த அந்த சமயங்கள், நாங்கள் வெற்றிப்பெற்ற அந்த சமயத்தில் அவர் எங்கள் பக்கத்தில் இல்லாத அந்த சமயங்கள்... இப்படி பல மனதை நெகிழ வைத்த பல சம்பவங்கள் எங்கள் முன் தோன்றி கலங்க வைத்தன. ஆனால், எல்லாமே இப்போது வெற்றிக்கணியை பறித்ததில் ஒரு மகிழ்ச்சியான தருணமாக மாறியது.

நாங்கள் இப்படி கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்த நேரத்தில் அங்கிள் எங்களுக்காக பலகாரங்கள் வாங்கி வந்து மேஜையை நிரப்பி விட்டார். பிறகு டீச்சர் கலக்கிய மைலோவும், டீயும், ஜூஸும் குடித்துக்கொண்டே பலகாரங்களை சுவைத்தோம். மீண்டும் பல இனிமையான தகவல்களை பறிமாறிக்கொண்டோம்.

அடுத்து அனைவரும் எப்போது சந்திக்கலாம்; எங்கு சந்திக்கலாம் போன்ற தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டது. அடுத்த மாதம் தோழி பிரேமாவின் திருமண வைபோகத்தில் எல்லாரும் அவசியம் கலந்துக்கொள்ளவேண்டும் என அன்பு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது. டீச்சரும் எங்களுடன் கலந்துக்கொள்வதாக தீர்மானமானது. அதற்கு முன் வரும் ஜனவரி ஒன்றில் திலகவதியின் வீட்டில் நடக்கும் வருடப்பிறப்பு விருந்தில் கலந்துக்கொள்ள அனைவரும் அழைக்கப்பட்டனர்.

இனி, யாரும் தொடர்பு அறுந்து போகக்கூடாது என்பதற்க்காக ஒரு ஸ்ட்ராங்கான இணைப்பு தேவை என்பத்இல் அனைவரும் ஆம்மோதித்தனர். ஒரு க்ரூப் ஆரம்பித்தால் எல்லா வித தகவல்களும் ஒரே இடத்தில் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருக்குமென எங்களில் ஒருவர் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டோம். இதையும் தவிர்த்து சில நல்ல காரியங்கள் ஒன்றாக சேர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளோம். எல்லாம் நலம்பெற, நல்லபடியாக நடக்க இறைவன் அருள்புரிவானாக..

கிளம்பும்போது திரும்ப இன்னொரு குழு போட்டோ டீச்சருடன் எடுத்துக்கொண்டோம். டீச்சர் எங்களை ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து தழுவி முத்தங்களுடன் வழியுனுப்பிவைத்தார். அங்கிள் மற்றும் டீச்சரின் புதல்விகளுக்கும் இவ்வேளையில் எங்கள் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு ஆசிரியர் கலாவதி டீச்சருடன் நாங்கள்

நேற்றிரவு அனேக நண்பர்களிடமிருந்தும் எனக்கு குறுந்தகவல்கள் வந்தன. அனைவரும் எந்த அளவு ரசித்தனர் என்ற திருப்தியை குறுந்தகவலாக எனக்கு அனுப்பியதை படிக்கும்போது எங்கள் சந்திப்பின் வெற்றியை அறியமுடிந்தது. இது இத்தோடு நிற்காமல் இன்னும் பல வருடங்கள் தொடர வேண்டும்; அதுவும் இது வெறும் ஒரு சந்திப்பாக மட்டும் இல்லாமல் பலருக்கு நன்மை பெயர்க்கும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். இதற்கு பலரும் சம்மதித்ததால் நம்மின் அடுத்த கட்ட வேலைகளில் நேற்றிலிருந்தே நான் ஈடுப்பட ஆரம்பித்துள்ளேன்.

ஒரு நாள்.. ஆனால், பல வருட ஆசைகள் நிறைவேறிய திருப்தி! இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்குமா என்று பலரும் ஏங்கும் சமயத்தில், நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதில் எல்லையில்லா மகிழ்ச்சி. இந்த ஒரு நாள் என் வாழ்வில் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். இதை மறக்ககூடாது என்ற ஒரு எண்ணத்தில் எனது டைரி குறிப்பாக இங்கே என் வலைப்பதிவில் செதுக்குகிறேன்.

Thursday, December 11, 2008

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!


எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) டிசம்பர் மாதம், முதன்முறையாக தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி / நாள் : 14 திசம்பர் 2008
(ஞாயிற்றுக் கிழமை)

சந்திப்பிடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல்
(Restoren Kari Kepala Ikan, Sentul)
( செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)

நேரம் : பிற்பகல் மணி 2.00

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் :
விக்னேஸ்வரன் - 012 5578 257
மூர்த்தி- 017 3581 555

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.. :-)

Saturday, December 06, 2008

உலு கிள்ளானில் மீண்டும் நிலச்சரிவு!!

இன்று அதிகாலை கோலாலம்பூர், உலு கிள்ளான், புக்கிட் அந்தாரா பங்சாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் 14 பங்களா வீடுகள் புதையுண்டது. இதுவரை நால்வர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 93 பேர் உயிர்சேதமின்றி தப்பினர். இடிபாடுகளின் நடுவில் இன்னும் பலர் சிக்கி தவிப்பதாக நம்பப்படுகிறது. மீட்புப்பணிக்குழு அவர்களை கண்டுப்பிடிப்பதில் காலையிலிருந்து மும்முரமாக இருக்கின்றனர்.





நிலச்சரிவினால் சம்பந்தப்பட்ட வீடமைப்புப் பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் புக்கிட் அந்தாராபங்சா தொலைதொடர்பு, மின்சாரம், தண்ணீரும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

சம்பவ இடத்துல் குடியிருக்கும் ஏறக்குறைய 3000 பேர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிலத்தடியில் ஏற்ப்பட்ட நீர் ஓட்டத்தினால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. காலையிலிருந்து இடைவிடாத மழையினால் மீட்புப்பணிகள் செயல்ப்படுவதற்கு சிரமமாக உள்ளது.





இதற்கு முன் 1999 டிசம்பர் 11-இல் புக்கிட் அந்தாரா பங்சா ஹைக்லண்ட்ஸ் டவர் இதேப்போல் நிலச்சரிவில் இடிந்துவிழுந்ததில் 48 பேர் இறந்த சம்பவம் இன்று நடந்த இடத்திலிருந்து வெறும் 1.5 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

இந்த வாரத்திலே இது மூன்றாவது நிலச்சரிவு. முதல் சம்பவம் கடந்த ஞாயிறு அன்று உலு யாம் கோம்பாக்கில் நடந்த நிலச்சரிவில் ஒரு பங்களா புதையுண்டதில் சகோதரிகள் இந்தான் (9) மற்றும் அதிரா (11) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு டாமான்சாரா ஹைக்ட்ஸ் ஜாலான் செமாந்தானில் மண் சரிவு ஏற்ப்பட்டதில் 11 கார்கள் புகையுண்டதில் அன்று முழுதும் பலத்த வாகன நெரிசலும் ஏற்ப்பட்டது.

இந்த மழை காலத்தில் மேலும் நிலச்சரிவு ஏற்ப்படலாம் என்று நம்பப்படும் வேளையில் கோலாலம்பூர் பொது மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை மற்றும் அம்பாங் மருத்துவமனையில் வேலை செய்யும் அனைத்து வேலையாட்களுக்கும் விழாக்கால விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு வேலையில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது.