Thursday, December 20, 2007

அப்பா

உடம்பெல்லாம் புழு ஊர்வதுப்போல் இருந்தது குமாருக்கு. தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பாய் இருந்தது.

'சே! இந்த மனுஷனோட ரத்தமா என் உடம்புல ஓடுது? இப்படிப்பட்ட கீழ்தரமான ஒருத்தருக்கு மகனா பிறக்க நான் முன் ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ தெரியலையே! ஆண்டவா'

குமாரின் மனதில் பல வாறாக சிந்தனை அலையடித்துக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் உட்கார முடியாமல் என்னமோ போல் இருந்தான் மருத்துவமனை ஐ.சி.யூ வாட் வெளியே நின்றிருந்தான்.

"மேடம், இனி இங்கே வச்சு பார்ப்பதுல அர்த்தம் இல்ல. விடியும் வரை உயிரு இருப்பதே பெரிய விஷயம். நீங்க வீட்டுக்கு கொண்டு போறதா இருந்தா சொல்லுங்க. பேப்பர்ல கையெழுத்து போட்டு தர்றேன்" என தன் கையை விரித்தார் டாக்டர் விஜயன்.

தன் முந்தானையால் அடக்கி வைக்க முடியாத அழுகையை மறைக்க வாயை பொத்திக்கொண்டார் காந்திமதியம்மாள். தன் கணவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்வதை மனம் உணர்ந்தாலும் அதற்கு இடம் கொடுக்க மறுத்தது.

"குமார், இப்ப என்ன பண்றது? டாக்டரே அப்பாவை காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாரே!" தளுத்தளுத்த குரலில் தன் மகனிடம் கேட்டார் காந்திமதியம்மாள்.

"செத்து போட்டும்.. விடுங்க. இவருக்கு போய் இப்படி அழுவுறியேம்மா!"
மனதில் இருந்த கோபம் வார்த்தைகளாய் வெளியானது குமாருக்கு.

"ஏண்டா.. அதுவும் இந்த நேரத்துல உனக்கு என்ன வந்துச்சு? உங்கப்பா மேலே உனக்கென்ன இப்படி திடீர் வெறுப்பு?"

திடீர் வெறுப்புதான். ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவின் மேல் தன் உயிரையே வைத்திருந்தவந்தான் குமார். அப்பாதான் தன்னுடைய குரு. அவரைப்போலவே தன் நடை, உடை, ஸ்டைல் எல்லாம் இருக்க வேண்டும் என அவரை பார்த்து பார்த்து செய்தவனாயிற்றே.. அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போனதை கேள்வி பட்டதும் பதறீப்போய் பட்டணத்திலிருந்து அறக்க பறக்க ஓடி வந்தவன். மூன்றூ நாட்களாய் அப்பாவுக்கு துணையாய் மருத்துவமனையே கதியென்று இங்கேயே விழுந்து கிடப்பவன். அப்பா சீக்கிரம் குணமாக வேண்டும் என நிமிடத்துக்கு ஒரு முறை கடவுளை வேண்டிக்கொண்டிருப்பவன்.. திடீரென என்ன வந்துச்சு இவனுக்கு?

"அம்மா.. அப்பா நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திட்டாரம்மா"

"என்னடா சொல்ற?"

"அப்பா நம்ம குடும்ப வக்கீலை அழைத்து வர சொன்னாருன்னு மனோகரன் அங்கிளை கூட்டிட்டு வந்தேன். தாகமா இருக்கு தண்ணீர் எடுத்து வர சொல்லி என்னை அனுப்பிவிட்டார். நான் தண்ணீர் எடுத்து ரூம்க்கு வரும்போதுதான் அந்த விஷயத்தை கேட்டேன்......"

சிறிது நேர மௌனத்துக்கு பிறகு,

"அவர் தன்னோட சொத்துல பாதி யாரோ கார்த்திக்கு எழுதி வச்சிருக்கார். மனோகரன் அங்கிள் இது யாருன்னு கேட்டதுக்கு, அவன் என்னோட இன்னொரு மகன். குமாருக்கு மூத்தவன்ன்னு சொன்னது என் காதில் விழுந்துடுச்சு. அப்பா இப்படி உனக்கும் எனக்கும் பச்சை துரோகம் பண்ணிட்டாரேம்மா!"

"குமார்.."

"அப்பா மேலே நீயும் நானும் எவ்வளோ பாசமா இருந்தோம்.. ஒருத்தருக்கொருத்தர் எவ்வளொ அன்பு வச்சிருந்தோம்.. ஆனால், அவர் யாரோ ஒருத்தன் கார்த்திக் மேலே அன்பு வச்சிருக்கார் பாருங்க.. வெளியே நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு உள்ளுக்குள்ள பெண் மோகம் இருந்திருக்கு அவருக்கு. உனக்கு துரோகம் பண்ணிட்டாரு.."

"குமா..."

"நீ ஒன்னும் பேசாதம்மா.. அவருக்கு ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செஞ்சியேம்மா.. அவருக்கு உடம்பு சரியில்லாதபோதேல்லாம் உன்னையும் கவனிக்காமல் அவரையே கண்ணுக்குள்ள வச்சி தாங்கினியே! உனக்கு கண் ஆப்புரேஷன் பண்ணா 2 வாரம் மருத்துவமனையிலேயே தங்கினா அவரை யார் பார்த்துக்குவான்னு சொல்லி நீ இன்னும் அந்த கண் ஆப்புரேஷன் கூட பண்ணாம இருக்கியே! அவருக்காக என்னென்ன தியாகம் பண்ணியிருக்க.. ஆனா, அவர்! யாரோ ஒருத்தியை இத்தனை வருஷமா ஊருக்கு தெரியாமல் வச்சிருக்கார்.. இப்போகூட உனக்கும் எனக்கும் தெரியாமல் மூடி மறைச்சி வக்கீல் மூலமா அவனுக்கு சொத்து எழுதி வச்சி தன் பாவத்தை கழுவ பார்க்கிறார்.. பார்த்தியா?"

"சொத்துதான் உன் பிரச்ச்னையாடா?"

"இல்லம்மா. இந்த எல்லா சொத்தையும் அப்பா அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வச்சிருந்தா கூட நான் ரொம்ப ரொம்ப பெருமை பட்டிருப்பேன். எனக்கு இந்த சொத்துல இருந்து சல்லி காசு வேணாம்மா.. ஆனா, இந்த மனுஷன் இப்படி ஒரு மிருகமா நடந்திருக்கிட்டாரே! அதான்மா என்னால தாங்கலை. அவரோட பையன் கார்த்திக்கே வந்து இவருக்கு கடைசி காரியங்கள் செய்யட்டும்.. செத்தா கூட இவர் முகத்துல விழிக்க மாட்டேன் நான்!"

"அப்படி சொல்லாதடா.. நீதானடா இவருக்கு இந்த காரியங்கள் செய்ய வேணும். அவரோட ஆத்மா சாந்தியடைய வேணாமாடா?"

"அதுக்குதான் அவரோட செல்ல பிள்ளை கார்த்திக் இருக்கான்ல.. இதைப்பத்தி இதுவரை தெரியாமல் இருந்திருக்கியேம்மா. உனக்கு கொஞ்சம் கூட கோபம் வரலை?"

"கார்த்திக் இப்போ ஜெர்மனில இருக்கான்.. ஒரு இஞ்சினியரிங் கம்பேனில சீனியர் இஞ்சினியரா வேலை செய்யுறான்.. போதுமா? இல்ல இன்னும் வேற தகவல் வேணுமா உனக்கு?"

"அட்ரா சக்கைனானா.. உனக்கு ஏற்கனவே இந்த விவகாரம் தெரியுமா? அதான் இந்த மனுஷனுக்கு தான் செய்யுறது ஒரு தப்புன்னு வருத்தமே தெரியாமல் இருக்காரா? இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொடுக்கிற தண்டனை, இனி யாரும் தன்னோட கட்டிய மனைவிக்கும் பிள்ளைங்களுக்கும் துரோகம் பண்ண தைரியம் இல்லாதவங்களா ஆக்கணும்!!" கோபத்துக்கு உச்சிக்கே போய் விட்டான் குமார்.

"குமார், நான் சொல்றதை கேளுடா.."

"நான் சொல்றதை நீ கேளும்மா.. கார்த்திக்கை பத்தி இவ்வளோ தெரிஞ்சு வச்சிருக்கல்ல.. கண்டிப்பா அவனோட முகவரியும் உங்கிட்ட இருக்கும். கால் பண்ணி அவனை யும் வன் அம்மாவையும் வந்து எல்லா காரியமும் பண்ண சொல்லு. என் அப்பா எப்பவோ செத்துப்போயிட்டார். நான் கிளம்புறேன்"

"டேய் குமார்.. நான் சொல்றதை கேளுடா. நீ இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கிறது கார்த்திக்கோட அம்மாக்கிட்டதாண்டா..."

"அம்மா?"

"ஆமாண்டா.. கார்த்திக் எனக்கும் இன்னொருத்தருக்கும் பிறந்தவன். உன் அண்ணன். என்னை விதவை கோலத்தில் பார்த்த உங்கப்பா என்னை மறுமணம் செஞ்சிக்கிடதுமில்லாமல் கார்த்திக்கையும் தன் சொந்த மகனாத்தான் இப்ப வரைக்கும் நினைக்கிறார். ஆனால் இந்த மறுமணத்துல அவனுக்கு சம்மதமில்லாமல் தன் மாமாக்கிட்டதான் வளர்வேன்னு என்னை விட்டு பிரிஞ்சி இருக்கான். அப்பப்போ உங்கப்பாதான் அவனை போய் பார்ப்பார். எவ்வளவுதான் அவமானப்பட்டாலும் கார்த்திக்தான் தன்னோட முதல் மகன்னு நினைக்கும் ஒரு உத்தமர் உங்கப்பா.."

"அம்மா....."

"சாரி மேடம். பேஷண்ட் இறந்துட்டாரு." நர்ஸ் வந்து சொன்ன அந்த வார்த்தையில் இருவரும் திடுக்கிட்டனர்..

குமார் அப்பா என்று கத்தி கதறி அழுதான். மீண்டும் தன்னை நினைத்து அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. ஒரு உத்தமரை அதுவும் அவர் சாகப்போகும் தருவாயில் இப்படி ஒரு அபாண்ட பழி சுமத்திட்டுமே என மனம் புழுகினான். கண் முன் தன் அப்பா அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்... மூச்சில்லாமல்..



பி.கு: நண்பர்களின் வற்புருத்தலின் பேரில் இந்த கதையை சர்வேசனின் நச்சுன்னு ஒரு கதை போட்டிக்கு அனுப்புறேன். :-)

Saturday, December 01, 2007

மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்

உரிமைப்போராட்டம், மலேசியாவில் கலவரம் என்று எங்குப்பார்த்தாலும் (தமிழ்மணத்தில் கூட) அதிருகிறது மலேசியா. இதைபப்ற்றி பலரும் பல வகையாக அலசி ஆராய்ந்துவிட்டார்கள். தினசரி நாளிதழ்களிலும், தொலைதொடர்பு சாதனங்களிலும் கிழித்து நாராய் தொங்க விட்டுட்டார்கள்.. ஒவ்வொன்றையும் படிக்கும்போதும் நான் நேரில் கண்ட காட்சிகளில் சிலவற்றவை மாறுப்பட்ட போதிலும் இதற்கென்று தனியாக ஒரு பதிவெழுதவேண்டும் என்று நினைக்கவில்லை.

இன்று TBCD அண்ணாவின் பதிவையும் கோவி அவர்களின் பதிவையும் படித்த போது, அண்டை நாட்டுக்காரர் அவர் கண்ணோட்டத்தில் எழுதிவிட்டார்.. இங்கே வந்து சில மாதங்கள் குடியேறிய TBCDயும் அவர் கண்ணோட்டத்தில் என்னென்ன தெரிந்ததோ அதைப்பற்றியும் எழுதிவிட்டார். இனி, ஒரு மலேசியராக என் கண்ணோட்டத்தில் சில விஷயங்களை பற்றி இங்கே சொல்ல நினைக்கிறேன். என்னுடைய இந்த பதிவு யாரையும் சாராமல் நடுநிலைவாதியாக எழுதுகிறேன்.

1874-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நிலமாய் அவர்களின் ஆட்சியின் உட்படுத்திக்கொண்ட பொழுது அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைக்காக இந்தியர்களும் சீனர்களும் ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர் என்று அனைவரும் அறிந்ததே. அப்பொழுதே மலாய், சீன, இந்தியர் ஒன்றுப்பட்டால் போராட்டம் ஆரம்பித்து அவர்களை நாட்டை விட்டு துரத்த இயலும் என்று முன்கூட்டியே உணர்ந்து மூன்று இனத்தவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர். எப்படி?

இந்தியர்களை தோட்டப்புறங்களிலும், சீனர்களை ஈயக்குள அருகினுலும், மலாய்காரர்களை கிராமப்புறங்களிலும் தங்கும்படி பார்த்துக்கொண்டனர். மற்ற இனத்தவரிடம் தொடர்பில்லாததால் அவர்கள் இருக்கும் இடமே உலகம் என்று கிணற்று தவளையாகவே இருந்ததும் உண்மைதான்!

இரண்டாம் உலகப்போருக்கு பிறகுதான் சுதந்திரத்தின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் உண்ர்ந்தனர். டாத்துக் ஓன் ஜபார் மாலாயாவில் 1947-இல் பார்ட்டி கெசாத்துவான் மெலாயு என்ற கட்சியை ஆரம்பித்து மலாய் இனத்தவர்களை ஒன்று படுத்தினார். பின்னால் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் மற்றும் து ஹுஸ்ஸேன் ஓன் போன்ற தலைவர்கள் சுதந்திர தீயை அதிகப்படுத்தி ஆகஸ்ட் 31 1957-இல் மலாயாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர்.

இங்கு அவர்களின் சுத்ந்திர வெற்றியின் மிக முக்கிய ஆயுதம் ஒற்றுமை. மூவினத்தவருடைய பிறந்த ஒற்றுமையே மிக குறுகிய காலத்துலேயே சுதந்திரம் பெற வழி வகுத்தது..

ஆனால் இப்போது?

யாரின் மூலமாக சுதந்திரம் கிட்டியதோ.. அவர்களின் மூலமாகவே சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கியது.

1970-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் பொருளாதார நிலை மிகவும் வருத்தப்படும் நிலையில் இருந்தது. ஆய்வுகளில் மலேசிய பொருளாதாரத்தில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் ஆதிக்கம் தலைத்தோங்கி நிற்பது தெரிந்தது. மலாய்க்காரர்கள் இன்னமும் கிராமப்புறங்களில் சொந்த தொழில்களில் செய்து வறுமை கோட்டின் கீழேதான் இருந்தார்கள். பொருளாதாரத்தை வளர்க்க நினைத்த தலைவர்கள் முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும் என நினைத்துதான் பல உரிமைகளை பூமிபுத்ராகாரர்களுக்கு வழங்க தொடங்கினர். ஆனால், அது மற்ற இனத்தவர்களை பாதிக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள்.. அல்லது நினைக்க மறுத்துவிட்டார்களா?

New Economic Policy (NEP) தான் இந்த திட்டங்கள் செயல்படுத்த ஆரம்பித்த பாலிஸி. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக அமலப்படுத்தப்பட்டபோது பொருளாதார வளர்ச்சியும் கூடவே வளர்ந்தது. மனிதர்களுக்கு எப்போது போதும் எனும் மனம் வந்திருக்கு? வளர்ச்சி அதிகமாக்க வேண்டும் எனத்தானே நினைப்பாங்க? அதேதான் அடுத்து நடந்தது.

நாலாவது பிரதமராக பதவியேற்ற துன் டாக்டர் மஹாதிர் முகமது 1981-இல் ஆட்சிக்கு வந்தார். அவர் திறமைசாலி. நாட்டை முன்னுக்கு கொண்டு வரணும். அனைத்துலக அளவில் மலேசியா பிரசித்து பெற வேண்டும். பல சாதனைகளை மலேசியா செய்ய வேண்டும் என பல திட்டங்களை வகுத்தார். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்ய முடியாத சூழ்நிலை. அதனால் பல திட்டங்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் போட்டார். அதில் நலல் வெற்றியும் கண்டார்.

இவரால் மலேசியா பல படிகளை தாண்டி மேலே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு தலைவன் தவறு செய்தாலும், அதையும் தாண்டி பல நன்மைகள் நாட்டு மக்களுக்காக செய்தால் கண்டிப்பாக அந்த தலைவனை மக்கள் போற்றுவார்கள். அதற்க்கு உதாரணம் இவரேதான். 20 வருடங்களுக்கும் மேலாகவே இந்த மண்ணில் பிரதமராக இருந்தவர் இவர்.

நாடும் உயர்ந்தது. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள்.. எல்லாரும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள். இருந்தும் மலாய்காரர்களின் உரிமைகள் அதிகம். அரசாங்கத்தின் சலுகைகள் அவர்களுக்கு அளவுக்கு மீறியே கிடைத்தது உண்மை. இந்த சலுகைகளை வெட்டவும் முடியாது மஹாதீரினால். அவர் அப்போது அந்த உரிமையின் மேல் கை வைத்திருந்தால், அவர் எப்போதோ பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார். எல்லா நாட்டிலும் இதுதானே நடக்கிறது!!!!

ஆனால், அப்படி இவர் தூக்கப்பட்டிருந்தால் மலேசியாவால் இந்தளவு சாதிக்க முடிந்திருக்காது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல திட்டங்களின் பிள்ளையார் சுழி போட்டதும் அவரேதான். இவருக்கு பிறகு வந்தவருக்கு மஹாதிர் அளவுக்கு திறமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிரதமரால் இந்த பிரச்சனையை கவனிக்க முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நம் இனத்தவரின் தலைவர் இருக்கார் அல்லவா? அவர்தானே நம் நலன்களை பராமரிக்க வேண்டும்? நமக்கு ஏதாவது பிரச்சனையென்றால் ஓடி வந்திருக்க வேண்டும்?

மஹாதீராவது 21 வருடங்கள்தான் ஆட்சியில் இருந்தார். ஆனாலும் நம் இந்திய சமூதாயத்தின் தலைவர், மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா) தலைவர் பொதுத்துறை அமைச்சராகவும் தலைவராகவும் 28 வருடக்காலமாக இருக்கிறாரே! அவர் என்ன செய்தார்? இப்படி மாற்றங்கள் நடக்கும்போதே ஏதாவது செய்திருக்க வேண்டும். சரி, அப்போதுதான் முடியவில்லை..

இந்திய மக்களின் நலனில்தான் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார்? சரி, நல்லது செய்ய வேனாம்யா.. கெட்டதாவது செய்யாமல் இருக்கலாமே?

அரசாங்கம் ஒன்னும் செய்யவில்லை என்று சொல்வது அபத்தம். பல உதவிகளை நம் சமூதாயத்துக்கு செய்தது. மற்ற தலைவர்களை விட மஹாதீர் காலத்தில் அவர் நிறையவே செய்திருக்கிறார். 10 மில்லியன் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 9 லட்சம் ரிங்கிட் எம்.ஏ.எஸ் பங்குகள், 18 லட்சம் ரிங்கிட் எம்.ஐ.எஸ்.சி பங்குகள், 37 லட்சம் ரிங்கிட் டிவி 3 பங்குகள், 55 லட்சம் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 1 கோடி 50 லட்சம் ரிங்கிட் எம்.ஆர்.சி.பி பங்குகள் என்று பல வெவ்வேறு காலக்கட்டத்தில் இந்தியர்களுக்காக அரசாங்கம் கொடுத்த பணங்கள் எங்கே போனது? அதை முறையாக கண்காணித்து செயல்பட்டிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணிருக்கலாம்.

சரி, அரசாங்கம் கொடுத்த பணமும் போய்விட்டது. மக்கள் சேமிப்பாக மஇகா ஹோல்டிங்ஸ் ஆரம்பித்த சேமிப்பு திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் வாயக்கட்டி வயித்தக்கட்டி சம்பாரித்த பணத்தை போட்டாங்களே? முதலுக்கே மோசம் என்பதுபோல போட்ட பணமும் எங்கே என்று தெரியவில்லை.. கிடைக்க வேண்டிய வட்டி பணமும் கிடைக்க வில்லை. இப்படி அரசாங்கம் கொடுத்தப் பணமும் மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணமும் கட்சிகளும் தலைவர்களுமே முழுங்கியதில் பாமர மக்களுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை..

கடந்த வாரம் நடந்த போராட்டத்துக்கும் இதுவே காரணம்.. இவர்கள் தங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்று போராடுகிறர்களே! இதுக்கு உண்மையில் யார் காரணம்? மக்களா? தலைவர்களா? இது ஒரு உரிமை போராட்டம்தான்! ஏன்? இந்திய மக்களின் பிரநிதியிடம் இதே மனுவை கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? அவர்களுக்கு அவர்கள் வேலைகளை செய்யவே நேரம் இலலாத போது இந்த மனுவை கவனிக்கவா நேரம் இருக்க போகுது? கிடைக்கிற எல்லா நேரமும் தன் சொந்த அலுவல்களையும் மற்ற கட்சிகளுடன் சண்டைகளும் போடுவதே முழு நேர வேலையாக கொண்டவர்களுக்கு இதை கவனிக்க நேரம் இராது.

சரி, இப்போது இந்த போராட்டத்தை நடத்தியவர்களை பார்ப்போம். இவர்கள் HINDRAF (Hindhu Rights Action Force) என்று ஆரம்பித்திருக்கிறார்கள். HINDRAF எனும் பெயரில் இயங்குவதை விட INDRAF (Indian Rights Action Force) என பெயரில் இயங்கியிருந்துக்கலாம். இது ஒரு இனத்தவரின் போராட்டமாக இல்லாமல், ஒரு மதத்தினரின் போராட்டமாகவே ஆக்கபட்டுள்ளது.

இவர்களின் போராட்டம்தான் என்ன?

1- Discrimination of Indians
2- இந்தியர்களின் வறுமையை ஒழிப்பது
3- தோட்டப்புறத்து இந்தியர்களின் நலனைப் பேணுவது
4- கோவில்கள் இடிப்படுவதை தடுப்பது
5- தமிழ் பள்ளிகளின் நலன்களை பேணுவது

..... இன்றும் நிறைய..
அடுக்கிக்கொண்டே போகலாம். இது எல்லா, மலேசிய இந்தியர்களுக்கும் பொருந்தும். ஆனால், ஏன் இந்துக்களை மட்டும் ஒன்றுக்கூட்டி இந்த போராட்டத்தை நடத்த வேண்டும். கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஒற்றுமையையும் இது குலைக்க நேரிடும். எந்த ஒரு போராட்டத்துக்கும் முக்கியமான ஒன்று ஒற்றுமை. எந்த மதமும், இனமும் நம்மை விட தாழ்ந்தவர் இல்லை என்ற ஒரு எண்ணம் நமக்கு முதலில் வர வேண்டும். எல்லாரையும் சமமாக மதிக்க வேண்டிய பக்குவம் நமக்கு வர வேண்டும்.

பிறகு, என்ன பண்ண போகிறோம்? ஒரு செயலுக்கு பிறகு என்ன நடக்கும்? அதை எப்படி எதிர்க்கொள்வது? என்பதைப்பற்றியும் பல வழிகளையும் யூகித்து செயல்படுவதே சிறந்தது. அது மற்றவர்களை பாதிக்காத வாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.

பேரணியில் எட்டாயிரக்கணக்கான இந்துக்கள் கலந்துக்கொண்டனர். இதில் முதல் தவறு கண்டிப்பாக அரசாங்கத்தை சான்றது. மனு கொடுப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பதும் அதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கோறியபோது கொடுத்திருந்தால் எல்லாம் சுபமாக நடந்திருக்கும். பேரணியை அனுமதிக்காததுனால் இந்த குழுவிற்கு அரசாங்கத்தின் மேல் மேலும் கோபங்கள் அனுமதித்தது.

சட்டவிரோதமென்று தெரிந்தும் மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டது நம் இந்துக்களின் தவறு. கஷ்டங்கள் யாருக்கு? அடியும், ஜெயிலும், ராசாயண தண்ணீரினால் மூச்சடைப்பும், வாந்தியும், இன்னும் பல கஷ்டங்களும் நமக்கே! சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கோர்ட் கேஸ் என்று அழைபவர்கள் யார்?

அழகாய் இருந்த பூமியில் கலவரம் என்று அனைத்துலக மேடையில் நம் மலேசிய மானம்தான் கப்பலேறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால் புதிதாக ஆரம்பிக்கபோகிற பிரச்சனை என்ன தெரியுமா? வெளிநாட்டவர் நம் நாட்டில் முதலீடு செய்ய பயப்படுவர். தன் பங்குகளை திரும்ப பெற்றுக்கொள்வர். நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். Inflation ஏற்ப்படும். Inflation ஏற்ப்பட்டால் மக்களாகிய நம்மைத்தான் அது பாதிக்கும். 1997-இல் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடி திரும்ப உதிக்கும்.

இப்படி வரப்போகும் பாதிப்புக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு ஒரே வழி. நம் இனத்தலைவர்கள் இறங்கி வந்து இந்த கோறிக்கைகளை கேட்டு தெளிவு படுத்த வேண்டும். அரசாங்கம் ஒரு ஹாட்லைன் (Hotline) ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், இது நம் இந்திய தலைவர்களிடமே கொடுக்கப்படுவதை கேட்டதும் மனதில் ஒரு அச்சம். திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறி விடுமோ! எவ்வளவு நாள் இது சரியாக பேணப்படும்?

இந்த விவகாரம் பல நாடுகளுக்கு தெரிய வந்தபோது, உதவ முன் வந்தது தமிழ்நாடு. உண்மையில் அந்த உதவி தேவையில்லைதான். உள்நாட்டு பிரச்சனை சுபமாக தீர்த்துவைக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. இதில் மற்ற நாடுகள் தலையிடுவது லேசாக புகைந்துக்கொண்டிருப்பதை தீக்காடாக மாற்றக்கூடும்.

தமிழ்நாட்டின் உதவும் மனப்பான்மை போற்றக்கூடியதே! ஆனால், அந்த உதவி தேவைபடாது என்று நல்ல படியாக சொல்லியிருக்கலாம் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசீஸ். "Nothing to do with TamilNadu" என்று முகத்தில் அடித்த மாதிரி பேசியது அவரின் தவறு. இரு நாட்டினருக்கும் நல்ல புரிந்துணர்வை இவரின் வார்த்தைகள் புண்பட செய்திருக்கும்.

ஆனால் TBCD சொல்லியபடி:

"இந்த தடைகளையும் மீறி இந்த தலைமுறையினர் சிலர் வளர்ந்திருக்கிறார்கள் என்றால், அது அவர்களின், தனிப்பட்ட கடும் உழைப்பு, முனைப்பு. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்."

என்ற வரிகள் முற்றிலும் உண்மை. சம்பாதிப்பதுக்கும், சுகமாக வாழ்வதுக்கும் மலேசியா ஒரு சிறந்த நாடு. இங்கே வாழ முடியவில்லை என்று சொன்னால் எந்த நாட்டிலும் வாழ முடியாது..

இதை உணர்ந்தால் எல்லார் வாழ்விலும் ஒளிமயமான எதிர்க்காலத்தை காணலாம்.