திரும்பி பார்க்கிறேன்...
இன்று ஒரு புள்ளியில் நின்று கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன். எங்கெங்கோ நடந்து/ கடந்து வந்திருக்கிறேன். மை ஃபிரண்டின் உலகின் 200வது பதிவையும் தொட்டாச்சு. மார்ச் மாதம் 2006-இல் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது இந்த வலைப்பூ.
மார்ச் 11-இல் ப்ளாக்கர்ன்னா என்னன்னு தெரிந்துக்கொள்வதுக்காகத்தான் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். 4 மாதம்.. சரியாக நாலே நாலு மாதம்தான்.. மூடும் விழாவையும் நடத்தாமலேயே போய்விட்டேன். ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் இருக்கிறது என்பதையே மறந்துட்டேன். தமிழ் கிறுக்கு எனக்கும் பிடித்திருந்ததால் இரண்டாவது திறப்புவிழாவும் கண்டேன் நான்.
அக்டோபர் 10-இல் தமிழில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. 200 பதிவுகளில் அனேகமாக தமிழில் எழுதியது மட்டும் 100 இருக்கும்.
நான் எழுத ஆரம்பிச்சது தமிழில் எனக்கிருந்த தாகம்தான். எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. தமிழ்ல எதை பார்த்தாலும் அதை படிப்பேன். ஒருத்தடவை நான் பேருந்துக்கு காத்திருந்தபோது ஒரு பேருந்து கண்ணாடி உள்ளே ஒரு போஸ்டர்… தமிழில்.. அதை நான் பார்க்கும்போது அந்த பேருந்து புரப்பட தயாராகிடுச்சு. அதை படித்தே தீரணும்ன்னு அந்த பேருந்துல ஏறி டிக்கெட் எடுத்து அந்த போஸ்டரை படித்துட்டுதான் இறங்கினேன்.
உங்க ஊரில் தமிழ் புத்தகம் கிடைக்காதான்னு கேட்டா, என்னோட பதில் இல்லைன்னுதான் சொல்வேன். நான் இருந்த இடத்தில் தமிழ் நாளிதழே கிடைக்காத போது புத்தகத்துக்கு எங்கே போவேன் நான்? அதுக்குதான் இப்படி பஸ்ல, ரோட்டுல, கீழே கிடக்குற எதுல தமிழை பார்த்தாலும் படிச்சுட்டு இருப்பேன்.
Basic தமிழ் மட்டுமே கற்றிருந்த எனக்கு ஒரு பதிவெழுதவே குதிரை கொம்பாக இருந்தது. இதை வச்சிக்கிட்டே இத்தனை பதிவெழுதியிருப்பது எனக்கே ஒரு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுல ஏதாவது ஒரு பதிவாவது உங்களை கவர்ந்திருக்குமா இல்லையான்னு எனக்கே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது எதுன்னு நீங்கதான் சொல்ல வேண்டும்.
நான் இவ்வலையுலகில் கற்றதை விட பெற்றது அதிகம். கற்றது தமிழ்.. பெற்றது நண்பர்கள். ஈயடிச்சான் காப்பியிலிருந்து நண்பனான சூனியன் வரை கார்த்தியிலிருந்து லேட்டஸ்ட் ஃபிரண்ட் நிலா வரை எத்தனை எத்தனை நண்பர்கள்! என் நண்பர்களின் உலகத்தை அப்படியே வலது பக்கத்தில் பாருங்க.
உங்கள் ஒவ்வொருத்தரின் பற்றியும் இங்கே பேசவேண்டும் என்று ஆசைதான்.. ஆனால், அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் அதுக்கே ஒரு தொடர் எழுத வேண்டும். இது கூடிய சீக்கிரமே வெளி வரும் என்று நினைக்கிறேன்.
இங்கே யார் யார் என்று சொல்லாமல் நான் அறிந்த சில நண்பர்களைப்பற்றி சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனையோ நண்பர்கள்!
சங்கம், யூனியன், கும்மி என்று பல வகை க்ரூப். அதையும் மீறீ சில நட்பு. அவர்களில் சிலர் இணையத்திலிருந்து ஒரு படி மேலே போய் போனிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் அளவு வளர்ந்துள்ளது. அதிலும் ஒரு சிலர் இன்னொரு படி மேலே இதயத்தின் பக்கத்திலும் இடம் பிடித்திருக்கீங்க.
என்னுடைய பதிவுகளில் உங்களுக்கு ஏதாவது வளர்ச்சி தெரிந்தால் அதுக்கு காரணம் நான் அல்ல. என்னுடைய பதிவுகளை இடைவிடாது படித்து இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று ஐடியா கொடுக்கும் என் நண்பர்கள்தான் காரனம். காமெடி எழுது கதை எழுது என்று சொல்லி அதுக்கும் இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று கற்று கொடுப்பதிலிருந்து எழுதி முடித்ததும் இந்த வார்த்தை தவறு, 'ன'க்கு பதிலா 'ண' என்று எழுத வேண்டும், இப்படி எழுதினால் இந்த வார்த்தையில் அர்த்தம் இப்படி ஆகிடும், இந்த மாதிரி ஸ்டைய்லில் எழுதலாமே என்று அவர்கள் கொடுத்த அறிவுரைதான் காரணம். இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது கோடி நன்றிகள். இனியும் அப்படியே எனக்கு வழிக்காட்டணும். சரியா? ;-)
இது வரை எந்த ஒரு பதிவரையும் நேரில் நான் பார்த்ததில்லை. கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்குமளவு வளர்ந்திருக்கும் சில நட்பு. என் நலனிலும் சந்தோஷத்திலும் மிகவும் அக்கறை வைத்திருக்கும் அந்த சிலருக்கு நான் என்ன செய்ய போகிறேன்?
தமிழில் பெரிசாக எதுவும் சாதிக்கும் அளவு எனக்கு திறமை இல்லாவிட்டாலும், இதுவரை எழுதியதை விட இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று ஆசைகள் இருக்கு. நடக்குமா?? அதையும் பார்ப்போம். J
பி.கு 1: Double celebration என்னன்னு நான் சொல்லிட்டேன்
பி.கு 2: அதுல ஒரு குட் நியூஸ் G3 கலாய்த்தல் சங்கம் ஆரம்பிக்கறதுன்னு சிலர் தப்பா நெனச்சிட்டு இருந்திருப்பீங்க. அஸ்கு புஸ்கு.. எங்க அக்காவை நான் கலாய்க்கலாம். மத்தவங்க கலாய்க்கிறதுக்கு நானே சங்கம் ஆரம்பிப்பேனா?
பி.கு 3: ஆனால், மத்தவங்க அந்த சங்கம் ஆரம்பித்தால் கண்டிப்பாக எனக்கு லைஃப் டைம் அட்மிஷன் கொடுக்கணும். சரியா?
பி.கு 4: நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன? விருந்துதான். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு G3 விருந்து வழங்குவார். ஷார்ஜா, துபாய் பக்கம் உள்ளவங்களுக்கு கோபி்யும் பேங்கலூரில் ராம் மற்றும் இம்சை அரசியும், அமெரிக்காவில் ஜி அண்ணணத்தேயும் விருந்து வழங்குவார்கள். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு இந்த சின்ன குழந்தையை வாழ்த்திட்டு போங்க. :-)


