எது சிறந்தது?
இப்படி என் தோழி கேள்வி கேட்டு, மொழி தான் வென்றது..
ஏன்னா இங்கே மலேசியாவில் மொழி மட்டும்தான் வெளியாகியிருக்கு! பருத்திவீரன் இன்னும் இல்லை..
என்ன இருந்தாலும் மொழி நாங்கள் எதிர்ப்பார்த்த படங்களில் ஒன்றுதான். திடீர் ப்ளான் போட்டோம். கிளம்பினோம்.. அப்போதும் படத்துக்கும் 10 நிமிடம் லேட்டு!!
உள்ளே போகும் போது ஒரு காட்சி.. ஒரு பண்ணையார் வீட்டுப் பெண் கோயிலில் நடந்து போக, அவளிடமிருந்து ஏதோ கீழே விழ, பக்கத்தில் உள்ள பிச்சைக்காரன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருவருக்குமிடையே காதல் பூப்பூக்கிறது! உடனே நாம் திரும்பி, நாம் தப்பான தியேட்டரில் புகுந்துவிட்டோம் போல.. எனக்கு தெரிஞ்சு படத்துல இந்த ரெண்டு பேரும் நடிக்கலைன்னு சொல்லி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.. திடீர்ன்னு பிரகாஷ்ராஜின் சிரிப்பு அலைகள். திரும்பி பார்த்தால் பிரகாஷ் ராஜ் - பிரித்திவிராஜ். அந்த படத்துக்கு ரீரெக்கார்டிங் செய்கிறார்கலாம். திரும்பவும் போய் இருக்கையில் அமர்ந்தோம்.
படத்தின் காமெடி அப்போது வெடிக்க தொடங்கியது (எனக்கு தெரிந்து!).. கிளைமேக்ஸின் முதல் காட்சி வரையிலும் வெடித்துக் கொண்டேதான் இருந்தது.
இவர்கள் குடிப்போகும் அபார்ட்மெண்டில் குடும்பஸ்தனுக்கு மட்டும்தான் வீடு என்று சொல்ல, பிரகாஷ் பிருத்திவியை திருமணம் செய்துக்க சொல்றார். அதற்கு நான் ஒரு பெண்ணை பார்க்கும் போது காமிக் புத்தகத்தில் வருமே அதுபோல என் தலைக்கு மேல் பல்ப் எரியணும், மணி அடிக்கணும்ன்னு சொல்றார். அதே போல், அந்த பல்ப்பும் மணி எப்படி அடிக்கிறது என்பதை அழகாக காட்டியிருக்காங்க.. இதை கிண்டல் பண்ணும் பிரகாஷ்க்கு எப்படி அதே பல்பும் மணியும் அடிக்கின்றது என்பதும் ஸ்வாரஸ்யம். :-))
பிருத்திவி சமீபத்தில் மலயாள படத்துக்குகாக சிறந்த நடிகர் பட்டம் வாங்கியதாக கேள்விப் பட்டேன். இவர் தமிழிலும் வாங்குவார் என்ற நம்பிக்கை இருக்கு. இவர் ஜோ மீது காட்டும் அன்பு, பாசம், காதல்.. பிரகாஷ் மீது வைத்திருக்கும் நட்பு.. மற்றவர்களின் மீது வைத்திருக்கும் மரியாதை, அவர்கள் கஷ்டப்படும்போது பரிதாபப்படும் இவர் மனது... சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத இவரது கோபம்.. என்று இவருடைய ஒவ்வொரு பரிணாமத்தை பற்றியும் சொல்லிட்டே போகலாம்.
ஜோதிகாவின் intro சூப்பர். சூர்யா, இனி நீங்க ஜோதிகாவிடம் பழகும்போது கொஞ்சம் தள்ளியே பழகுங்க.. ஹிஹி.. படத்தை பார்ப்பதற்கு முன்னே இவர் deaf & dumbன்னு எனக்கு தெரிஞ்சதாலே எந்த கட்டத்தில் இவர் திரையில் சொல்வார் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன். ஆனாலும், இவர் deaf & dumb என்பதை ஒரு கெத்தா தான் சொன்னார். அவருக்குள் உள்ள தன்னம்பிக்கையை அந்த ஒரு விநாடியிலேயே நமக்கெல்லாம் புரிய வைத்துட்டார். ஒரு கட்டத்தில், பிருத்திவி இவருக்கு ஒரு பிண்ணணி குரல் கொடுக்க முயற்சி செய்ய இவர் கடுப்பாக, அதன் காரணமும் சரியென்றே எனக்கு தோணுது. தன் கண்களை இவர் உருட்டி உருட்டி.. முகத்தை ஆட்டி ஆட்டி பேசும் விதம் உண்மையிலேயே இவர் எவ்வளவு ஹோம்வர்க் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.. எல்லாரும் புகழ்ந்து பேசும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கூட இவர் நன்றாக செய்திருக்கிறார் என்று நான் ஒப்புக் கொள்ளவே இல்லை. மற்றவர்களும் இதை விட நன்றாக செய்திருப்பார்கள் என்று வாதாடினேன். ஆனால், இப்போது சொல்கிறேன்.. இவர் நடிக்காதது, தமிழ் திரையுலகிற்கு ஒரு இழப்புதான். ஒரு அருமையான நடிகையை இழக்கிறோம். :-(
செல்லம் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருக்கார். ஸ்வர்ணமால்யாவிடம் தான் ஒரு CBI எனச் சொல்ல, அவர் நான் எப்படி நம்புறதுன்னு கேட்க.. அதுக்கு இவர் "கூட் குவச்சன்.. நான் இப்படியே நடந்து பொறேன். CBIன்னு கூப்பிடுங்க. நான் திரும்பி பார்ப்பேன்"கிறார். ஒரு கட்டதில் அவர் சீரியஸாக ஒன்னு சொல்ல அது எடுப்படாமல், "எனக்கு காமெடி மட்டும்தான் வருது. சீரியஸா ஒன்னு முயற்சி செய்தா அது வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது" என்கிறார்.
ஸ்வர்ணமால்யா ஜோதிகாவின் தோழியாக வருகிறார். இவர் பிருத்திவிக்கு sign language கற்றுக் கொடுத்தாரோ இல்லையோ. படம் முடிந்து வெளிவரும்போது ஆடியன்ஸ் கண்டிப்பாக இந்த மொழியை கற்றுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு சுலப்மாக கற்றுக் கொடுத்தார். நானே படம் முடிந்து வெளிவரும்போது, அந்த மொழி பெனக்கும் புரிந்தது.
படத்தில் மிக குறைவான கதாபாத்திரங்களை வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். குறிப்பாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் 'பட்டாபி' பாஸ்கர். படம் ஆரம்பத்தில் ஒரு காமெடியனாக தெரிந்தாலும், போக போக அவரின் சோகங்கள் நம்மையும் வாடுகின்றது. அவரது நடிப்பும்.. சாரி.. அவர் அந்த professor-ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவரை தவிர்த்து ஜோவின் பாட்டி மற்றும் ஜோவின் கார்டியன் குடும்பம் மட்டுமே இதர கதாபாத்திரங்கள்.
என்னடா எல்லாமே காமெடி காமெடின்னு சொல்றேனே. செண்டிமெண்ட் இல்லையான்னு கேட்கறீங்களா? இருக்குங்க.. எப்படி இல்லாமல் போகும். படத்தின் இன்னொரு ப்லஸ் இதுதானே! ஆனால் பரணி இவைகளை அழகாய் லிஸ்ட் போட்டு காட்டிட்டாரு பரணி. இவர் சொன்ன அந்தந்த காட்சிகள் என்னையும் மிகவும் பாதித்த காட்சிகள். அதை அவர் அழகாய் இங்கே சொன்ன் பிறகு நான் அதை திரும்பவும் எழுத வேண்டாம்ன்னு நினைக்கிறேன். அதுவும், பிருத்திவி ஜோதிகாவும் இசையை உணர வேண்டும் என்று அவருடைய கைகளை ஸ்பீக்கர்களில் வைக்கும் காட்சி இருக்கே!! அப்பப்பா!! அருமை அருமை!
இசையை பற்றி சொல்லியே ஆகணும் இங்கே! தேவையே இல்லாத இடத்தில், அர்த்தமே இல்லாத பாடல்களை போடும் படங்களுக்கு நடுவே, அர்த்தமுள்ள பாடல்களை தேவை படும் இடத்தில் சரியாக தொகுக்கப்பட்டதுக்கு ஒரு சபாஷ்.. பாடசில இடங்களில் இசையே இல்லாமல் மௌனம் காப்பதும் ஒரு மொழி. அதுக்கு இன்னொரு சபாஷ்!
சம்பாதித்த பணங்களை திரும்பவும் அதிலேயே போட்டு ரிஸ்க் எடுப்பவர் ஒருவர் கமல் என்றால் இன்னொருவர் பிரகாஷ்தான். இவரின் நாம், கண்ட நாள் முதல், அழகிய தீயே மற்றும் மற்றவைகள்.. தமிழ் திரையுலகின் அடுத்த பரிணாமத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எடுக்கப் பட்டு நன்றாக ஓடாமல் இவர் கையை சுட்டுக் கொண்டதே மிச்சம். ஆனாலும், இவர் தைரியமாக மொழியை எடுத்திருக்கிறார். இவர் மென்மேலும் நல்ல படங்களை எடுக்க வேண்டுமானால், நாம்தான் மொழியை போன்ற படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். சண்டை, ரத்தம் போன்ற படங்களுக்கு நடுவில் ஒரு இதமான ஆனால் கனமான படம் பார்த்த திருப்தி.
ஒரு புது மொழியையும் கற்றுக் கொண்ட திருப்தி!