Sunday, November 25, 2007

உன்னை சரணடைந்தேன்..

சேரனின் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பாடல் எப்போதும் முனுமுனுக்க வைக்கிற மாதிரி அமைந்திடும்.. இதோ தவமாய் தவமிருந்து படத்திலிருந்து இந்த ஒரு பாடல்..

பிரசன்னாவின் குரல் இனிமையானது. காதல் வந்து (சரவணா), வெயிலோடு விளையாடி(வெயில்), ராதா காதல் வராதா (நான் அவன் இல்லை) என்ற பாடல்களை கேட்டவர்களுக்கு இவரின் குரலை கண்டிப்பாக பிடித்திருக்கும். கல்யாணி மட்டும் சும்மாவா? காலை அரும்பி (கனா கண்டேன்), சும்ம கிடந்த (தம்பி), கோழி குண்டு (எம்டன் மகன்), ஆசை கனவே (இம்சை அரசன்) , கடவுள் தந்த (மாயாவி) போன்ற பாடல்களையே அவர் குரலால் அழகு படுத்தியவர்.





பாடல்: உன்னை சரணடைந்தேன்
பாடகர்: பிரசன்னா, கல்யாணி
இசை: சபேஷ் - முரளி
படம்: தவமாய் தவமிருந்து


பெ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு என்னையே வந்து நிற்க..
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல..
தாயாக மாறிப்போனாயே
வேறாக தாங்கி நின்றாயே
அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க
கண்ணிருடன் மாயத்திலே
காலமெல்லாம் உப்பைப்போல
உந்தனுள்ளே நானிருப்பேனே..
(உன்னை..)

ஆ: தினந்தோறும் சாமிக்கிட்ட
தீராத ஆயுள் கேட்பேன்
நீ பார்க்கும் பார்வைப்போல
பூவெல்லாம் பூக்க கேட்பேன்
நீ நடக்கும் நிலத்தினிலும்
நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும்
தாய்மையை தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழையாகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதியாகுவேன்

ஆ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
காதல் என்ற சொல்லில் காதலே இல்லையென்பேன்
வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைக்காக்கும் தாய்க்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டைக்கூட்டில் ஓடுடைத்து
முட்டி மோதும் குஞ்சைப்போல
தினமும் புதிதாய் நானும் பிறப்பேனே..

இதே இசை வேறொரு வரியில்...



Wednesday, November 14, 2007

காதல் குளிர் வில்லனை பார்க்கணுமா?

காதர் குளிருக்கு வில்லன் போட்டோ வேணும்ன்னு ராகவன் அண்ணனும் துர்காவும் கேட்டாங்க..

சரின்னு இது கொடுத்தேன்:


வில்லன் சிரிச்சுட்டே இருக்கார்.. என்னமோ லிஃப்ட் கேட்க நிக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டாரு அண்ணன். (சிரிச்ச முகத்துக்காரரு அண்ணன் கே.ஆர்.எஸ்.. என்ன செய்தாலும் அவர் முகத்துல வடியிற பாலை துடைக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க.. )

வேற ஒன்னு ட்ரை பண்ண சொன்னார்.. மேன் இன் ப்ளாக் மாதிரி வேணும்ன்னு சொன்னார்.. இப்போ வில்லன் கே.ஆர்.எஸ்:

எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு!
கருப்பு உடையிலும் கலையா இருக்காரு வில்லன்..

கடைசியா இது காட்டினேன்.

இதைப் பார்த்துட்டு ராகவன் அண்ணா சொன்னது: “இவன் வில்லன் மாதிரி இல்ல.. ஹீரோ மாதிரில இருக்கான்.. இதெல்லாம் நான் என் ப்ளாக்ல போட மாட்டேன்”

ம்ம்.. அவர் போடலைன்ன என்ன.. நாமே வெளியிட்டுடுவோம்ன்னு முடிவு பண்ணியாச்சு.. எப்படி இருக்காரு நம்ம வில்லன்?? ;-)

Saturday, November 10, 2007

அழகிய(??) தமிழ்(!!) மகன்???

குடும்பத்தோட கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படம் பிதாமகன். இந்த வருட தீபாவளிக்கு எப்படியும் எல்லாரும் ஒன்னா ஒரு படம் பார்த்திடணும்ன்னு எங்கண்ணா கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்சாரு. அவர் ஒரு தடவை முடிவு பண்ணிட்டார்ன்னா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம்! என்ன கொடுமை சரவணா இது!!

சரி, என்ன படத்துக்கு போகலாம்ன்னு நாங்க லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்டோம். ஆப்ஷன்ல மூனு படம் செலக்ட் ஆச்சு: வேல், அழகிய தமிழ் மகன், கண்ணாமூச்சி ஏனடா. அப்பா உடனே, சூர்யா நல்லா நடிப்பான்ல. அந்த பொண்ணு அசின் கூட நல்லா கியூட்டா நடிக்குதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அம்மா ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க. அப்பா அடங்கி போயிட்டாரு. அப்போ டீவில அழகு குட்டி செல்லம்ன்னு பிருத்திவிராஜ் ஆடிக்கொண்டிருந்தார். அப்பா, இவரோட படம் கூட ஒன்னு ரிலீஸ் ஆகுதுப்பா. சத்தியராஜ், ராதிகா கூட நடிக்கிறாங்கன்னு நான் சொன்னதும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச 2 ஓல்ட் ஜெனெரேஷன் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறதை கேள்விப்பட்டதும் ஓக்கேன்னு சொல்லிட்டாங்க. அண்ணன் வந்தாரு. அழகிய தமிழ் மகனுக்குதான் போகணும்ன்னு ஒரே அடம்.

சரி, சிங்கம் சிங்கிளா கொண்டாடுற கடைசி தீபாவளி. இன்னும் கொஞ்ச நாள்ல மஞ்ச தண்ணி தெளிச்சு பலி கெடா கொடுக்கப்போறதுக்கு முன்னே ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்ன்னு ஓகே சொல்லிட்டாங்க. விஜய் படமா? அதே மசாலா கதைதானே! என்ன பண்றதுன்னு நான் யோசிக்க, சரி, ஒரு பதிவெழுத ஐடியா கிடைச்சாச்சுன்னு நானே என்னை சமாதான படுத்திக்கிட்டேங்க. அப்பா செலவுல (டிக்கேட் பணம் அப்பாதேனே போடபோறார்) சூனியம்ன்னு தெரிஞ்சும் படவிமர்சனம் எழுதி பல மாதங்கள் ஆச்சேன்னு ஓகே சொல்லிட்டேன்.

படம் ஆரம்பிக்கும்போதே டாக்டர் விஜய்ன்னு வரும்போது பின்னால விசில் பறக்குது! நான் தலையில அடிச்சுக்கிட்டேன். (டாக்டர் பட்டம் இப்படி ச்சீப்பா போச்சே!) படம் ஆரம்பிச்சதும், ஒரு சண்டை, அதை தொடர்ந்து ஒரு பாட்டு, ஹீரோயின் இண்ட்ரோ, ஹீரோயினோட சின்ன சண்டை, அதுக்கப்புறம் காதல் டூயட், அப்புறம் ஹீரோவோட தனி ட்ராக் = கதை(??), சண்டை, சுபம்ன்னு எல்லா விஜய் படம் போலவே இதுவும் அமைஞ்சிருக்கு. நடுநடுவில் குத்துப்பாட்டு. வித்தியாசம் என்னன்னா மற்ற படத்துல ஹீரோ விஜய், வில்லை இன்னொருத்தர். ஆனால் இதில், ஹீரோ = விஜய், வில்லன் = விஜய்.

படம் ஆரம்பிக்கும்போதே காட்டாறு அக்காவை வம்பிழுக்கிற மாதிரி ஒரு பஞ்ச் டயலோக். அடுத்த காட்சியிலேயே நம்ம கவிதாயினி தமிழ் M.Aக்கு போட்டியா ஒரு கவிதை:

"நீயும் நானும் ஒன்னு
காந்தி பிறந்த மண்ணு
டீக்கடையில நின்னு
தின்னு பாரு பன்னு.. "

இதுக்கு க(கா)விதை போட்டியில முதல் பரிசு. என்ன கொடுமை கவிதாயினி இது!!

படம் முழுதும் பஞ்ச் டயலோக் பறக்குது. “எவ்வ்வ்வ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்ய மாட்டோமா என்ன”, “அடடடடடே”, “நான் போக்கிரிடா”ன்னு மார் தட்டி பெருமை பட்டுகொள்கிறார் கதாநாயகன். படம் முழுதும் ஆங்காங்கே இவர் மாலையுடந்தான் திரிகிறார். மாலை மற்றும் புகழ் மேல் என்ன ஈர்ப்போ தெரியவில்லை..

ரஹ்மான் பாடல்களை அருமையாக கம்போஸ் பண்ணியிருக்கிறார். ஆனால், படத்தில் ஒவ்வொரு பாடல்களும் கஷ்டப்பட்டு திணிக்கப்பட்டதுபோல கதைக்கும் பாடல்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் வருகிறது. ஒட்டவே இல்லை! என்ன கொடுமை ரஹ்மான் இது!!

பல காட்சிகளில் விஜயின் நடிப்பு மற்ற நடிகர்களை ஞாபகப்படுத்துகிறது. இரட்டை வேடத்தில் விஜய் என்று அறிவிக்கும்போது, ஏதாவது வித்தியாசம் இருக்குமோ (இல்லைன்னு தெரிஞ்சும்) என்று எதிர்ப்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்! அதே கிறுக்குத்தன நடிப்புதான் இதிலேயும்!

ஷ்ரேயா.. என்னத்த சொல்றது!!! திருவிளையாடல் ஆரம்பம் ஷ்ரேயா, சிவாஜி ஷ்ரேயா, அழகிய தமிழ் மகன் ஷ்ரேயா.. இதில் குறைந்த பட்சம் அஞ்சு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியுமா என்னாலன்னு எனக்கே தெரியலை. அதே கதாப்பாத்திரம், அதே ஸ்டைல், அதே மாதிரி உடைகள்!

தேவையே இல்லாத ஒரு கதாப்பாத்திரம்.. நமிதாவுடையது.. எதுக்கு வந்தார்ன்னே தெரியவில்லை! அந்த அளவு அவருடைய கேரக்டர் படத்துல ஸ்ட்ரோங்கா(!!) இருக்கு! சின்ன வயசுல போடாமல் விட்ட உடையெல்லாம் இப்போ அணிந்தே தீருவேன்னு சபதம் எடுத்துட்டார் போல.. அவர் ஆசையெல்லாம் நிறைவேற்றிகொண்டார்..

ஆங்.. நமிதா கேரக்டரை பத்தி சொல்லும்போது இன்னொரு கேரக்டர் ஞாபகம் வருது. ஷாகிலா! எதுக்கு இவர் வரணும்? அவசியம் என்ன? கடைசி வரைக்கும் எனக்கு விடை கிடைக்கலைங்க. உங்கள் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா..

கதாப்பாத்திரங்கள்தான் சொதப்பிடுச்சு. கதையாவது.... (சாரி.. டாக்டர் விஜய் படத்துல கதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாமா? ) ரசிக்கும்படியாக இருக்குமான்னு பார்த்தாலும் நீங்க ஏமாந்துதான் போவீர்கள் என்று இப்போதே எச்சரிக்கை கொடுத்துவிடுகிறேன். வீட்டுல ஓட்டையடைக்கிறதுக்கு சுண்ணாம்பு உபயோகிப்பாங்க. அந்த மாதிரி 2 டின் உபயோகிச்சாலும் எல்லா ஓட்டையும் அடைக்க முடியாதுங்க.

2 விஜய்க்கும் வித்தியசம் கூட தெரியவில்லை விஜயின் நெருங்கிய நண்பர்களுக்கு. கருமம் இவங்களுக்குதான் தெரியவில்லை.. காதலி ஷ்ரேயாவுக்குமா தெரியவில்லை? சரி, ஓட்டப்பந்தயம் வச்சி யார் ரியல்.. யாரு போலின்னு கண்டுபிடிக்கிறேன்னு ஒரு அறிவுப்பூர்மா முடிவெடுத்தீங்க. அவங்க ஓடும்போதுக்கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை?

க்ளைமேக்ஸ் முன்னே நடக்கும் ச்சேஸிங் காட்சியில் ஒன்றைக்கூட நம்புற கரமா இல்லை. மோட்டர்லேயே 360 டிக்ரீ சுற்றுவதும் பாய்ந்து லாரியில் ஏறுவதும்.. என்ன கொடுமை சார் இது!

இப்படி பட பார்க்கும்போது நானே நிறைய கேள்விகளை அடுக்கி வச்சேன். வந்து எழுதுறதுக்குள்ள எல்லா பாய்ண்டைஉம் மறந்துட்டேன். வேணும்ன்னா திரும்ப பார்த்துட்டு அந்த விட்டுப்போனா ஓட்டைகளை எழுதுவோம்.
ஓட்டையிலேயே பெரிய ஓட்டை க்ளைமேக்ஸ் சீன். அது என்னன்னு நீங்களே பர்த்து தெரிஞ்சிக்கோங்க. யாம் பெற்ற துன்பம் இவ்வகையும் பெருக. :-P

படத்தில் எல்லாமே சொதப்பலாக இருந்தாலும் 2 ப்ளஸ் இருக்கு. ஒன்னு ரஹ்மான். இரண்டாவது எடிட்டிங் ஆண்டனி. அவருடைய எடிட்டிங் சூப்பரா வந்திருக்கு. கேளாயோ பாடலில் வரும் க்ராஃபிக்ஸ் அருமையா வந்திருக்கு.

அழகிய தமிழ் மகன் = அழகிய(??) தமிழ்(!!) மகன்???


பி.கு: இது சங்கம் போட்டிக்கு அல்ல. ;-)

Wednesday, November 07, 2007

குமரனுடன் சில நிமிடங்கள்...

"அக்கா.. தொந்தரவுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒரு இரண்டு நிமிடம் கிடைக்குமா?"

ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..

போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தபோது அந்த குரல் என் பக்கத்தில் ஒளித்தது.

இதில் என்ன அப்படி ஆச்சர்யம்.. திகைப்புன்னு நீங்க கேட்கலாம் (கேட்காட்டினாலும் நாங்க சொல்லுவோம்ல.. ) வேலைக்காக நான் தினமும் மலேசியாவின் தலைநகரம் (சுந்தர் சி நடிச்ச படமில்லைங்க) குவாலா லும்புருக்கு பயணம் செய்வேன். எனது பிரயாணத்தில் தினமும் பல நூறு பேரை சந்திக்கிறேன். அதில் பலர் இந்தியர்கள் அல்லது மலேசிய தமிழர்கள் ஆவர்.

இதில் பாதி பேருக்கு தமிழே தெரியாது. மீதி உள்ளவர்களுக்கு தமிழ் தெரிந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுவாங்க. எல்லாம் ஸ்டைலும் வெட்கமும்தான் காரணம். நம் தாய் மொழியில் பேச எதற்க்கு வெட்கம் என்று நானே சிலரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்.

நானே தமிழில் புலவி என்றெல்லாம் சொல்ல வரலைங்க. எனக்கு இருக்கும் தமிழ் அறிவும் கொஞ்சம் கொஞ்சம்தான். நான் தமிழ் பேசும்போதே என்னையும் அறியாமல் மலாயும் ஆங்கிலமும் கலந்து வரும். முடிந்தவரை அப்படி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சரி, சொல்ல வந்த விஷயம் வேற.. இப்போ வேற எதையோ பேசிட்டு இருக்கேன் பாருங்க..

கே.எல் பட்டணத்தில் இப்படி தமிழில் பேசி நான் கேட்பது ரொம்ப அபூர்வம்தான். அதுவும் சுத்த தமிழில் அழகாய் ஒரு சின்ன பையனின் குரலில் கேட்டபோது ஒரு வித பூரிப்பும் மகிழ்ச்சியும் கூடி வந்தது. அந்த சந்தோஷம் மிக விரைவிலேயே அழிந்தது.

அந்த குரலை கேட்டு நான் திரும்பியபோது ஒரு 12-13 வயது தமிழ்ப்பையன் கையில் ஒரு சின்ன மூட்டையுடன் என்னைப்பார்த்து நின்றிருந்தான். அரைக்கால் சிலுவாருடன் ஆங்காங்கே கிழிந்த இடத்தில் ஒட்டுப்பட்ட சட்டை அணிந்திருந்தான். பழைய உடை என்றாலும் அது சுத்தமாக இருப்பதை பார்த்ததுமே அவன் மேல் ஒரு மரியாதை வந்தது. போட்டிருப்பது புதியதா பழையதா என்பதை பார்ப்பதைவிட அதை எப்படி பாதுக்காக்கிறார்கள் என்பதுதானே சிறந்த் விஷயம்?

"என்ன தம்பி?" நான் வாயை திறந்தேன். வார்த்தையிலேயே பரிவும் சேர்ந்து தம்பி என்ற பாசமும் ஒட்டிக்கொண்டது.

"அக்கா, நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்க்கா. வீட்டுல ரொம்ப கஷ்டம். நான் படிக்கணும். அதுக்கு பணமில்லை" என்றூ சொல்லிக்கொண்டே தன் மூட்டையில் கை விட்டான்..

இவன் பிச்சை எடுக்கும் எண்ணம் கொண்டவன் இல்லை என்பது தெளிவாக புரிந்தது எனக்கு. மனதில் தன்னம்பிக்கையும் நிறைய இருப்பதும் ஓரளவு அவன் முகத்தில் என்னால் கண்டறிய முடிந்தது. அந்த மூட்டையிலிருந்து ஒரு பொருளை எடுத்து காட்டினான்.

"அக்கா, இது நானே செதுக்கியது. Candle Stand. பாருங்க. பிடிச்சிருந்தா வாங்குங்க. RM10தான். என் படிப்புக்கு உதவியா இருக்கும்" என என் கிட்டே நீட்டினான்.

அதை நான் வாங்கிப்பார்த்தேன். சொந்தமாக செய்த வேலைப்பாடு தெரிந்தது. அந்த பையன் உண்மையிலேயே டேலண்டட். ரொம்ப அழகாய் செதுக்கப்படிருந்தது. ஆனால், அது எனக்கு பயன்படாது என்று தோன்றியது.

"தம்பி, எனக்கிது தேவைப்படாதுப்பா. பரவாயில்லை.. இந்த 10 வெள்ளியை வச்சுக்கோ. அக்காவுடைய கிஃப்ட்டா இருக்கட்டும்."

"வேணாம்க்கா." என்று கொஞ்சம் தயங்கினான்.

நான் வற்ப்புறுத்தி அவனின் சட்டை பாக்கேட்டில் திணித்தேன்.

அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"

அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

"தம்பி உன் பேர் என்னப்பா? என்ன படிக்கிறே?"

"அக்கா, என் பேரு குமரன். ஆறாம் வகுப்பு படிக்கிறேன்."

"படிச்சு பெரிய ஆள் ஆனதும் என்னவா ஆகப்போற?"

"நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.

"வீட்டுல எத்தனை பேரு? அம்ம அப்பா என்ன பண்றாங்க?"

"எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. இப்போதான் 7 வயசு. அப்பா இருக்கிற வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்டாரு. அம்மாதான் ஆங்க்கங்கே வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து என்னை படிக்க வச்சாங்க. இப்போ அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. வேலைக்கு போய் 1 வாரம் ஆச்சு. அதான் இப்போ நானும் வேலைக்கு போறேன்க்கா" அந்த சிறூவன் சொல்லும்போதே கண்ணில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.

"அக்கா. இன்னைக்கு நிறைய பேர் இந்த ஏரியாவுக்கு வந்திருக்காங்க. எல்லாரும் தீபாவளி ஷாப்பிங் வந்திருக்காங்க. அவங்க கிட்டேயும் நான் என் பொருளை விற்கணும்க்கா. நான் கிளம்புரேண்க்கா. ரொம்ப நன்றி" என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய மூட்டையை கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவன் நடந்து போவதையும், அங்கு ஷாப்பிங் செய்துக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசுவதையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் அவனிடம் பரிவுடன் பேசுவதும் சிலர் அவனை விரட்டுவதுமாய் இருந்தாலும் மான்ம் தளராமல் அடுத்தவர்களை சந்தித்தான் குமரன்.

"அண்ணே, அவன் சாதிப்பான் ஒரு நாள்.." என்று என் பக்கத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு புத்த்கங்கள் வாங்கிவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

வழியில் ஒரு அம்மா ஓரத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. கையில் குமரன் காட்டிய அந்த மெழுகுவர்த்தி சிலை வத்திருந்தார். உடம்பு சரியில்லாமல் இருப்பது அவர் முகம் காட்டிக்கொடுத்தது. நான் என் நடையை தொடர்ந்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென்று திரும்பி பார்த்தேன். குமரன் அந்த அம்மாவை எழுந்திரிக்க உதவி செய்து ரெண்டு பேரும் ஒன்றாய் நடந்து போனார்கள். அவர்தான் குமரன் சொல்லிய அவர் நோய்வாய்ப்பட்ட அம்மாவாக இருக்குமோ என்று தோணியது.

திரும்பி அந்த சாலை முழுவதும் பார்த்தேன். பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை குதூகலமாக சந்தோஷத்துடன் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் சந்தோஷமாய் புத்தாடையுடன், நல்ல உணவுடன் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடபோகிறோம். ஆனால், இப்படியும் சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனரே! அவர்களுக்கு இந்த மாதிரி தீபாவளி, பொங்கல் என்ற விழாக்கள் எப்படி இருக்குமோ! atleast ஒரு வேளை உணவாவது வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடும்படி அமையுமா?

நண்பர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த
தீபாளி ல்வாழ்த்துக்ள்.....

வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?

Monday, November 05, 2007

தேர்தல்: அவசரம் தேவையா?

ரம்ஜான் மாதத்திலிருந்தே அதிகம் பேசப்படும் மூன்று தலைப்புகள்: சிறப்பாக கொண்டாடப்படும் ஹரி ராயா, சாலை விபத்து மற்றும் தேர்தல் எப்போது?. முதல் இரண்டு தலைப்புகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வந்தாலும், மூன்றாவது தலைப்பு இன்னும் அதிகமாக சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

நிறைய பேர் தேர்தல் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று கணித்திருக்கிறார்கள். சிலர் நவம்பர் ஆரம்பத்தில் என்றும் சிலர் ஏப்ரல் 2008-க்குள் என கணிக்கத்தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த கணிப்புக்கு காரணம், தேர்தல் ஏப்ரல் 2008-க்கு பிறகு நடந்தால் அன்வார் இப்ராஹிம் போட்டியில் கலந்துக்கொள்ள முடியுமே!

தேர்தல் சீக்கிரமாய் நடக்க இது ஒரு காரணம் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்த எனக்கு இப்போது பல வேறு காரணங்களும் இதுக்கு காரணமாய் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது என்பது என் கருத்து.

அடுத்த தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு 21 மார்ச் 2009 வரை காலக்கெடு இருக்கின்றது. தேற்தல் என்பது 5 வருடத்துக்கு ஒரு முறை நடக்கும். அரசாங்கத்துக்கு அந்த 5 வருடமும் பவர் இருந்தாலும் 36 மாதங்களுக்கு பிறகு எப்போது வேண்டும்னாலும் பார்லிமெண்டை கலைக்கலாம். மக்களும் எப்போது அடுத்த தேர்தல் வரப்போகிறது என்று ஆரவம் காப்பார்கள். ஏனென்றால், வயதான மக்கள் பிரநிதி அடுத்த தேர்தலில் தேர்வு பெறவில்லையென்றாலும் தோற்றுப்போனாலும் அவருக்கு பென்சேன் (pencen) கிடைக்கும்.

பார்லிமெண்ட் கலைக்கப்படும் தேதியை அதிக ஆர்வத்துடன் காத்திருப்பவர்கள் கண்டிப்பாக எதிர் கட்சிகள்தான். அவர்களே பல கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இவர்களைத் தவிர்த்து அரசியல் கண்காணிப்பாளர்களும் பல வகை கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இந்த தடவையின் பார்லிமெண்ட் கலைப்பும் வெகு விரைவில் தேர்தலும் நடத்த பல காரணங்களை அடுக்கலாம்.

முதலாவதாக, அன்வார் இப்ராஹிம் தேர்தலில் கலந்துக்கொள்ள முடியாமல் இருக்க தடுக்க. காரணம் அவருடைய அளிக்கப்பட்ட அரசியல் தடா ஆர்டர் ஏப்ரல் 2008-உடன் முடிவுக்கு வருகிறது.

இரண்டாவது, பொருட்களின் விலையேற்றத்தினாலும், லஞ்சத்தினாலும், தப்பாக உபயோகிக்கப்பட்ட பவர்ன்னாலும் அரசாங்கத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத சில பிரச்சனைகள். மூன்றாவது, கடந்த பட்ஜெட் (budget) அறிவிப்பில் அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வு கொடுத்ததில் மக்கள் கண்டிப்பாக அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை. நான்காவது, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ரிங்கிட் மதிப்பெண் அதிகரித்ததும் மக்களின் மனதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது பெட்ரோல் எண்ணை விலையேற்றம் ஒரு முக்கிய காரணம். தேர்தல் நடக்காத வரை பெட்ரோலின் விலையை அனைத்துலக விலைக்கு ஏற்றாற்ப்போல் ஏற்றமுடியாது. இது மக்களுக்கு அதிருப்தி கொண்டுவருமே!

இந்த காரணங்களினால் தேர்தல் அறிவிப்பு கூடிய சீக்கிரமாய் வெளியாகும் என எதிப்பார்க்கப்பட்டும் எதிர்க்கட்சி கணித்தபடி நவம்பரில் தேர்தல் நடக்காததும் சில குழப்பங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்து கணிக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி - மார்ச்) நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

என்னைப் பொருத்த வரையில் தேர்தலுக்கு அவசரப்படுத்துவது தேவையில்லாத ஒன்று. அடுத்த தேர்தலின் அவசரத்துக்கு மூலக்காரணம் அன்வார்தான் என்றால், தேர்தலை அவசரப்படுத்துவது சரியா? அன்வாரின் அரசியல் மறுப்பிரவேசத்தில் பலருக்கு இருக்கும் பயம் ஏனென்று எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த வருடம் பங்காலான் பாசிர், கிளாந்தானிலும் ஈஜோக், சிலாங்கூரிலும் நடந்த தேர்தலுக்கு அந்த மக்கள் பிரநிதிக்காக பிரசாரம் செய்தது அன்வார்தனே? கிளாந்தான் மாநிலத்தையே கைக்குள் போட்டு ஆளும் PAS கட்சிக்கூட அந்த தேர்தலில் ஆபார தோல்வியையே சந்தித்தது என்பதுதானே மறைக்கமுடியாத உண்மை!

பாரிசான் நேஷனல் (ஆளும் கட்சி) தங்களுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்திருக்கிறோம் என நினைத்தால் இப்படி தனி ஒரு நபருக்காக பயப்படத் தேவையில்லையே! 1999-ஆவது வருடத்தில் எதிர்க்கட்சிகள் அன்வாரின் இமேஜை பயன் படுத்தி ஓட்டு வாங்கினார்கள் என்பது நாமெல்லாம் அறிவோம். ஆனால் காலம் இப்போது நிறைய மாறியிருக்கிறது. ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்த அன்வாரிடமே பல மாறுதல்கள் இருக்கிறதே!

கெ-அடிலான் கட்சி என்ற பெயரையே மக்கள் கெ-அடிலான் கட்சி என்ற பெயர் மாற்றம் செய்ததே ஒரு வியக்கத்தக்க செயல் ஆச்சே! ஆதலால்; அடுத்த தேர்தலில் போட்டியிட போறேனா இல்லையா என்பதை அன்வாரே முடிவு பண்ணட்டுமே! டெமோக்ராஸியில் வாழும் நாம் யாரையும் நாம் நினைத்தபடி ஆட்டி வைக்காமல், அவர்களுக்கு எது தேவையோ அதை செய்யட்டுமே!

ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!
தேர்தல் ஆணைய குழுவும் இருக்கின்ற இந்த நேரங்களை பயன்படுத்தி தேவையான ஆரய்ச்சிகளை செய்து எது தேவை எது தேவையில்லை என்று முடிவு செய்து ஒரு நல்ல நியாயமான தேர்தலை வழங்க வேண்டும்.

இப்போதுள்ள சூழ்நிலையில் எதிர்கட்சிகள் அரசாங்கத்துக்கு ஒரு போட்டியாகவே கருத முடியாது. என் கண்ணோட்டத்தில் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்று சேரவில்லையே. அவர்களுக்குள்ளேயே பல கலப்புகள் நிகழ்ந்த படிதானே இருக்கின்றது.

ஆதலால், இந்த காலக்கட்டத்தை ஆளும் கட்சி சரியாக பயன்படுத்தி மக்க்ளுக்கு தன் சேவையை தொடர்வதுதான் சிறந்தது. மக்கள் பிரநிதிகள் தன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து முடிக்க விடுங்கள். இதுவே அடுத்த தேர்தலில் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க மக்கள் யோசிக்கும் காலமாக அமையும்.

Friday, November 02, 2007

அசின், ஐ லவ் யூ....

இப்போதெல்லாம் யூடியூப்பிலிருந்து நல்ல வீடியோக்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.

நாம் ரசித்த காட்சிகளை மற்றவர்களும் பார்த்து ரசிக்க காட்டுவதில் ஏதும் தப்பில்லைதானே?

அப்படின்னா, இந்த மிமிக்ரியை பாருங்க. ரசிக்கும்படியா இருக்கா? :-)