Monday, October 27, 2008

தீபாவளி வாழ்த்துக்கள்


அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்த மங்கள திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்வில் நலன்களும் மகிழ்ச்சிகளும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தீபாவளி சிந்தனையாக போன வருடம் தீபாவளிக்கு எழுதிய குமரனுடன் சில நிமிடங்கள் படிக்கலாம் வாங்க.

Monday, October 13, 2008

சினிமா சினிமா - கேள்வி பதில்

இந்த மாசக் கணக்கு எதுல இருந்து ஆரம்பிக்கிறதுன்னு நெனச்சிட்டே இருந்தேன். பரிசல் காரரு பரிசல் கொடுத்து காப்பாத்திட்டாரு. ;-)

சினிமா என் உயிரு..
சினிமா என் உயிர் மூச்சு..
சினிமா என் ரத்ததுல்ல ஓடுது..
சினிமா தான் நானு..
நாந்தான் சினிமா!

இப்படியெல்லாம் சொல்லுவேன்னு நெனச்சீங்களா?
அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க..

சினிமா..
சின்ன பிள்ளையா இருக்கிறப்போ அப்பா என்ன படம் டேப் வாடகை வாங்கிட்டு வந்தாலும் கூட உட்கார்ந்து பார்ப்போம்.. (குடும்பத்தோட..)
அதுவும் 9 மணி ஆச்சுன்னா “டைம் ஆச்சு.. போதும்.. பாத்ரூம் போயிட்டு படுக்க போங்க”ன்னு அப்பாவோட சவுண்ட் வரும். படத்துல என்ன ஆயிருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே ரூம்க்கு போயிட்டு அப்பா சொன்னது போல படுத்துப்போம். ஆனா தூங்க மாட்டோம். மெல்ல,

என் அண்ணாட்ட கேட்பேன். “அடுத்து என்ன ஆயிருக்கும்?”
உடனே என் அண்ணா முழு படத்தையும் ஏற்கனவே பார்த்துட்ட மாதிரி கதை சொல்வார். நானும் “ஆ”ன்னு வாயா திறந்துட்டு கதை கேட்பேன். கடைசியில் என் அண்ணன் “கதையும் முடிஞ்சிடுச்சு.. கத்திரிக்காயும் காய்ச்சிருச்சு”ன்னு சொல்வார். அப்பத்தான் தெரியும் இவ்வளவு நேரம் விட்டது எல்லாம் ரீலுன்னு.

கொஞ்சம் வளர்ந்ததும் (நம்புங்கப்பா கொஞ்சம் வளர்ந்துட்டேன் அப்போ)
அப்போ டேப் வாடகை வாங்கும் காலம் போய் நாங்க டேப் வாங்கும் காலம் வந்தது. அப்போ சின்ன வயசுல மிஸ் பண்ண படமெல்லாம் அண்ணாதான் ஞாபகம் வச்சி எடுப்பார்.
இந்த காலக் கட்டத்துல ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுசா தியேட்டர்ல வந்த படத்தை பார்க்க குடும்பத்தோட போவோம். தீபாவளின்னா பட்டாசுங்கிற காலம் போய் தீபாவளின்னா புதுப் படம் தியேட்டர்லன்ற காலம் வந்துச்சு. அதுவும் அப்போதெல்லாம் ஒவ்வொரு தீபாவளிக்கும் ரஜினி அல்லது கமல் படம் கட்டாயம் வரும். சில நேரங்கள்ல அம்மாதான் வரலைன்னு அடம் பிடிப்பாங்க. அவங்களை கன்வீன்ஸ் பண்ணி தியேட்டர்க்கு போறதுக்குள்ள சில நேரம் நள்ளிரவு காட்சிக்குதான் டிக்கேட் கிடைக்கும். அப்போதெல்லாம் தியேட்டர்ல (அந்த சத்தத்துல) தூங்கின தூக்கம் இருக்கே.. ஆஹா.. என்ன சுகம்!

கல்லூரி காலம்.. முதன் முதலில் நண்பர்களுடன் சினிமா பார்க்கப் போன காலம். வருஷத்த்துக்கு ஒன்னுன்னு ஆரம்பிச்சு, டெமெஸ்டருக்கு ஒன்னுன்னு வளர்ந்து, அப்புறம் நல்ல படம்ன்னு நம்பிக்கை உள்ள எல்லா படங்களுக்கு முதல் ஷோவுக்கே டிக்கேட் பூக் பண்ணி போக ஆரம்பிச்சோம்.
அது மட்டுமா? என்ன படம் வந்தாலும் (மொக்க படங்களையும் சேர்த்து) டவுன்லோட் பண்ணி விடிய விடிய தூங்காமல் படம் பார்த்து, அதையும் external hardiskல போட்டு அல்லது internal torrentல அப்லோட் பண்ணி நண்பர்களுக்கும் கொடுத்துன்னு 24 மணி நேரம் பத்தவே பத்தாது படம் பார்க்க. ஒரு மொழி படம் பார்த்தாலே பத்தாத இந்த சமயத்துல தமிழ், மலாய், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, ஜப்பான், சீனா, ஹாங் காங், கொரீயா, இந்தோனிசியான்னு பாராபட்சம் பார்க்காமல் எல்லா மொழி படங்கள், நாடகங்கள், டாக்குமெண்ட்ரீஸ், நகைச்சுவை தொகுப்புகள்ன்னு கலந்து கட்டி ஆடுன சமயம்..

சரி.. ரொம்ப பேசிட்டேன்.. பரிசல்காரரோட கேள்விக்கு என்ன பதில்?

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

என்ன வயசுன்னு சுத்தமா ஞாபகம் இல்ல. அப்படியே பார்த்திருந்தாலும் முழுப்படம் பார்த்தேனா இல்லையாங்கிறது இன்னொரு கேள்வி. ஆனா, நினைவு தெரிந்து நான் பார்க்கணும்ன்னு நினைச்ச ஒரு படம் இருக்கு. படத்தோட தலைப்பு என்னன்னு அப்போதும் (இப்போதும்) ஞாபகம் இல்ல. அதுல பாண்டியன், ஆனந்த பாபு மற்றும் ஒருத்தர் (அவரும் ஞாபகம் இல்ல) நடிப்பாங்க. இவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு நாள் யாரோ குழந்தைய விட்டுட்டு போயிருப்பாங்க. பாண்டியன் அந்த சமயம் ஊருக்கு போயிருப்பாரு. அவரு ப்லேபாய் என்பதால் இது பாண்டியனோட குழந்தையா இருக்கும்ன்னு நண்பர்கள் எடுத்து பார்த்துப்பாங்க. அப்புறம் பாண்டியன் வந்து இல்லன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. குழந்தையின் உண்மையான தந்தை யாருன்னு தெரியும்போது அந்த குழந்தையை பிரிய மனசிருக்காது. கடைசி வரை அந்த குழந்தைக்கு பேரு கூட வைக்காம தாயம்மான்னு கூப்பிடுவாங்க.. அப்போ எனக்கு ரொஉ 4-5 வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறேன். அந்த மூனு ஹீரோக்களும் ஒரு வித மோட்டர்சைக்கிள் உபயோகிப்பாங்க. அந்த மோட்டரை அப்போதெல்லாம் எங்க பார்த்தாலும் தாயம்மா மோட்டார் தாயம்மா மோட்டார்ன்னு நான் கத்துனது இப்போ நெனச்சாலும் சிரிப்பா வருது. அந்த படம் பிற்காலத்துல ஹிந்தில கூட பார்த்திருக்கேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

பரிசல், Give me Five.. :-)
நானும் கடைசியாக பார்த்தது சரோஜாதான். படம் முழுக்க சிரிச்சு சிரிச்சு படம் முடிஞ்சதும் அடுத்த ஷோ இருந்தா திரும்ப போகலாம்ன்னு சொல்ல கவுண்டரில் கேட்டா, டிக்கேட் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லி கெளம்ப வச்சிட்டாங்க..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நேற்று ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் வைதீஸ்வரன் படம் பார்த்தேன். மறுபிறவி இருக்கா இல்லையா என்பதை இயக்குனர் நல்லா குழப்பி சொல்லியிருக்கார்.
அதனால ரிலாக்ஸ் பண்றதுக்காக பொம்மரில்லு படம் பார்த்தேன். எத்தனை தடவை பார்த்தாலும் புதுசா இருக்கு. சித்தார்த் கலக்கிட்டார். படம் பார்த்து முடிந்ததும் சந்தோஷ் சுப்ரமணியத்தில் ரவியின் சொதப்பலை நினைத்து கோபம் கோபமாக வந்தது..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய இருக்கு.
குறிப்பா சொல்லணும்ன்னா உள்ளம் கேட்குமே. நான் ரசித்து, சிரித்து, அழுது பார்த்த படம். பல முறை பார்த்திருப்பேன் (தனியாக, நண்பர்களுடன்). ஆனால், எப்போது பார்த்தாலும் புதுசாக பார்ப்பதுப்போல் தோன்றும். கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல. என் பள்ளி வாழ்க்கை, பழைய நண்பர்கள் என அனைவரையும் நினைவு கூற வைக்கும் படம். பல முறை ஓ மனமே பாடலை கேட்கும்போதே என்னை அறியாமலேயே கண்களில் நீர் கோர்க்கும் சமயங்களில் படத்தை திரும்ப நினைத்துப்பார்ப்பேன்.. உள்ளம் கேட்குமே.. எப்போதும் இந்த நட்பை என் உள்ளம் கேட்குமே!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்னும் இல்லை. ;-)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்ப சம்பந்தம் என்றவுடன் எனக்கு தோன்றுவது safetiness in shooting placeதான். சில வருடங்களுக்கு முன் ஒரு லைட்பாய் ஆறடி உயரத்திலிருந்து விழுந்து மரணமடைந்தது. படங்களில் நாம் அறுவருப்பாய் நினைக்கும் வில்லன்கள் aka ஸ்டண்ட்மேன்கள். இவர்கள் ஒவ்வொரு படத்திலும் எடுக்கும் ரிஸ்க்ஸ்தான் எத்தனை எத்தனை! பலருக்கு பல காயங்களும், சில நேரங்களில் தன் உறுப்புக்கள் இழக்க நேரிடலும், அதையும் தாண்டி உயிரும் போகும்வரை அவர்கள் எடுக்கும் ரிஸ்க் நினைத்தாலே இப்படிப்பட்ட படங்கள் தேவையான்னு சில நேரம் என்னை நானே கேட்டுப்பேன். இவர்களின் வாழ்க்கையையும் படமாக எடுத்து நமக்கு இவர்களின் கஷ்டத்தை திரையிட்டு காட்டிய சசிக்கு இவ்வேளையில் நன்றிகள்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இது இல்லாமலா? தினமும் தினசரி படிக்கிறேனோ இல்லையோ.. கண்டிப்பாக இணையத்தில் சினிமா நியூஸ் படிக்கிறது வழக்கமாயிடுச்சு.
வலைப்பூக்களில்:
கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் வரும் குவீஸ்களும் தகவலும் & முரளிக்கண்ணனின் சினிமா பற்றிய ஆராய்ச்சிகளும் விரும்பி படிக்கிறேன்

7.தமிழ்ச்சினிமா இசை?

என்ன கேள்வி இது?
காலையில் எழுந்ததும் பாடும் என் கணிணி
பயணத்தில் கைக்கொடுக்கும் என் காரின் ரேடியோ + ஐபோட் + FM Transmitter
மீண்டும் ஆபிஸில் என் கணிணி
வீடு வந்ததும் டீவியில் பாடல் மற்றும் ஒளிப்பரப்பாகிற சேனல்
இப்படி தினசரி இசையில் லயித்துக்கொண்டே இருக்கிறேன்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி:
கடைசியா பார்த்த தாரே ஜமீன் பர் என்னை மிகவும் பாதித்தது

ஜப்பான்:
One Little of Tears
என்னை மிகவும் பாதித்த ஒரு கதை. உண்மையில் நடந்த கதையின் தொகுப்பு இது. ஒரே ஒரு சொட்டுன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க அழவைத்த படம். குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை கதையை அவள் 25 வயதில் இறக்கும் வரை முழுக்க காட்டிய காவியம். தன் நோயை அறிந்தப்பின் ஒரு மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவள் எழுதிய டைரியின் தொகுப்பே இக்கதை. அவளிடைய டைரி பிற்காலத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டு 1.1 மில்லியன் புத்தகங்கள் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

ஹாங்காங்:
The Flying Fox of The Snowy Mountain
20 வருடங்களுக்கு முன் மர்மமாக இறந்த தன் தாய்தந்தையை பற்றிய விவரங்கள் தேடி அலையும் ஒரு இளைஞனின் கதை. இது ஜின்யோங் என்ற எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு. கடைசியில் வரும் சண்டை காட்சி பிரமாதமாக இருக்கும்

மலாய்:
Jalinan Kasih
ஒரு ஏழை இளைஞனுக்கும் பணக்கார பெண்ணுக்கும் நடுவில் ஏற்படும் காதல். நம்ம தமிழ் படம் கதை போலவே. ஆனாலும் இது எங்கே மாறுப்படுதுன்னா அந்த பெண் தன் தந்தை (அவர் நல்லவர்ப்பா) பேச்சை மதித்து அவர் காட்டும் ஒருத்தரையே (இவரும் நல்லவர்ப்பா) மணம் புரிவார். காதல் தோல்வியடைந்த ஹீரோ ஒரு கம்பேனியில் வேலைக்கு சேர்றார். அங்க அவரோட முதலாலியின் மகள் அவரை ஒருதலையாக விரும்பிகிறார். அப்புறம் எப்படியோ ரெண்டு பேரும் திருமணம் பண்ணதால நம்ம ஹீரோ பணக்காரராயிடுறார். பணக்கார ஹீரோவும், முன்னாள் காதலியின் கணவரும் நண்பர்களாகிடுறாங்க. ஒரு கட்டத்துல ஹீரோவை ஒரு விபத்துல இருந்து முன்னால் காதலியின் கணவர் காப்பாற்றும்போது உயிர் இழக்கிறார். அதுக்கப்புறம் என்ன நடக்குது? இதுதான் கதை அன்பின் பினைப்பு aka ஜாலினான் காசே..

ஆங்கிலம்:
Passion of The Christ
Mel Gibson தயாரித்து இயக்கிய படம். யேசுவின் கடைசி 12 மணித்துளிகள். ஒன்னும் சொல்ல முடியல. அந்த அளவுக்கு பாதித்த படம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆரம்பக் கல்வி பயிலும்போது என் பள்ளி பத்துமலை வளாகத்தின் உள்ளேதான் இருந்தது. அப்போதெல்லாம் தமிழ் சினிமா பாடல்கள், காட்சிகள் பத்துமலை முருகன் தளத்தில் படம் பிடிக்க கும்பல் கும்பலாக வருவார்கள். அப்போ வகுப்பறை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தது ஞாபகம் இருக்கு

கொஞ்சம் வளர்ந்தப்போ Dr. Bombay டாக்ஸி டாக்ஸி என்ற பாடலுக்கு படம் பிடிக்கிறார் என்றும் அது என் வீட்டுக்கு அருகில்தான் என்றதான் பார்க்க போகலாம் என நண்பர்கள் கூப்பிட்டார்கள். ஏனோ போய் பார்க்கணும்ன்னு தோணல.

அதுக்கப்புறம் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேகாவில் சரத்குமாரும், தேவயானியும் ஆடிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக நான் ஏறியிருந்த பேருந்த கடந்தது.

போன வருடம் பில்லா படத்து சேவல் கொடி பறக்குதடா பாடல் காட்சி பத்துமலையில் படமாக்குக்கிறார்கள் என என் தோழன் கூப்பிட்டிருந்தான். வேறு நல்ல வேலை (ப்ளாக் எழுதுறதுதான்!) இருக்குன்னு சொல்லிட்டேன்.

இந்த அளவுதான் எனக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

போன வாரம் இதே தலைப்பில் என் சில நண்பர்களுடன் விவாதித்திருந்தோம். இப்போது ரீமேக் என்பது மிகப் பிரபளம் ஆகிவிட்டது. தெலுங்கிலிருந்து தமிழ், மலையாளத்திலிருந்து தமிழ், ஹிந்தியிலிருந்து தமிழ், ஆங்க்லத்திலிருந்து தமிழ்ன்னு இருந்த தமிழ் சினிமா இப்போ சீனாவிலிருந்து தமிழ், ஜப்பானிலிருந்து தமிழ், ஜெர்மனிலிருந்து தமிழ், அரபுலிருந்து தமிழ்ன்னு வருது. நல்ல கதை கொடுக்கிறவங்க ஒன்னு ஒரு படம் எடுக்க 5-7 வருடம் எடுக்குது (உதாரணம் பாலா) , இல்லண்ணா நானும் ஒரு ரீமெக் படம் எடுக்கிறேன்னு அன்னிய மொழியிலிருந்து கதை சுடுறாங்க (உதாரணம் மிஷ்கின்). நல்ல கதைக்களம் கொண்ட தமிழ்சினிமா எழுத்தாளர்கள், இயக்குனர்கள் எத்தனை பேர் இருக்காங்க. இருக்கிறவங்க ஒழுங்கா வருஷத்துக்கு ஒன்னு கொடுத்தாலே போதும்.. தமிழ் சினிமா எங்கேயோ போயிடும்.

ஆனா, நம்ம இயக்குனர்களுக்கு இப்போது கதாநாயகர்கள் ஆசை வேற வளர்ந்துட்டே போகுது. நல்ல படங்கள் கொடுக்கிற இயக்குனர்களும் மத்த இயக்குனர்கள் படத்துல ஹீரோவா நடிக்க போயிட்டா எப்போ நாம் ரசிச்சு பார்க்கிற படம் இயக்கப்போறாங்க? அப்புறம் ரீமேக் ராஜா போன்ற ஆளுங்கத்தான் தமிழ் சினிமாவை ஆழ்வாங்க.

இது நடந்துச்சுன்னா ஒரு 10 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமா சொல்லும்: “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!” :-(

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நல்லது..
இருக்கவே இருக்கு மத்த மொழி படங்கள்.
இன்னும் பார்க்காத மொழிப்படங்கள் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டு அந்த படங்களையெல்லாம் தேடி தேடிப் பார்க்கலாம்.
மேலே சொன்னது எனக்கு.

கீழே சொல்ல போறது நம்ம தமிழ் சினிமா பத்தி:
டீவியில சித்தி, அண்ணாமலை, அரசி போன்ற மெகா சீரியல் அதிகரிக்கும், ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாரும் அதில் நடிக்கலாம்

டீவி இண்டர்வியூ போன்ற சமாச்சாரங்கள் காந்தி ஜெயந்தி, விநாயகர் சதூர்த்தி போன்ற நாட்களில் போட மாட்டாங்க என்பதால் வீடு வீடாக போய் ரசிகர்களுக்கு பேட்டி கொடுக்கலாம்

திரும்ப பழைய வேலைக்கே (ஊருல விவசாயம் பார்க்கிறது) திரும்பலாம்.

ஜே கே ரித்திஷ் போன்ற ஆட்கள் திரும்ப அரசியலுக்கு திரும்பி முதலமைச்சருக்கே சவாலாக இருக்கலாம்.

நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன்ன்னு எல்லா நடிகர்களும் எழுத்தாளர் ஆகி புத்தகம் வெளியிடலாம்.

இப்படி நிறைய விஷயங்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு. ஆனால் இதெல்லாம் நடந்தால் உட்கலவரம் நடகும் என்பதால் இப்படிப்பட்ட தடைகள் வராதுன்னு நம்பறேன். :-P
------------------------------------------------------------------
பரிசல்காரரே, 5 பேரையா கூப்பிடணும்? கூப்பிட்றலாம்:

1- சிங்கப்பூர் விஷால் ரசிகர் மன்ற தலைவி தமிழ்மாங்கணி
2- கத்தார் ஷ்ரேயா கோஷல் ரசிகர் மன்ற தலைவர் ஆயில்யன்
3- அகில உலக வீக்-எண்ட் ஜொல்லுஸ் முன்னேற்ற கழகம் முன்னாள் தலைவர் மங்களூர் சிவா
4- அகில உலக வீக்-எண்ட் ஜொல்லுஸ் முன்னேற்ற கழகம் புதுத் தலைவர் சஞ்சய் காந்தி
5- உலக .:: மை ஃபிரண்ட் ::. ரசிக மன்ற தலைவி கயல்விழி முத்துலெட்சுமி ;-)