Wednesday, March 26, 2008

சந்தோஷ் சுப்ரமணியம் டவுன் டவுன்!

அழகான ஒரு குடும்பம்; பாசமான சகோதரர்கள்; அக்கறை காட்டும் பெற்றோர்கள்; கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள்; உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள அருமையான நண்பர்கள். எல்லாம் இருந்தும் ஒருவனுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஒரு பென்சில் கேட்டால் பார்கர் பேனாவை வாங்கிக் கொடுப்பார் தந்தை. மிதிவண்டி கேட்டால் மாருதி வண்டி வாங்கி தருவார். மிட்டாய் கேட்டால் உயர்ரக சாக்லேட் வாங்கி தருகிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட தந்தை கிடைக்க மாட்டாரா என்று ஏங்கும் நிலையில் இவன் ஒருவன் எப்படி இந்த சூழ்நிலையிலுந்து தப்பிப்பது என்று யோசிக்கிறான். வாழ்க்கையில் தன் தொழில் மற்றும் வாழ்க்கை துணை; இவை இரண்டும் தானாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறான். தந்தை சொல் தட்டாத மகன் இவன். தன் லட்சியத்தை அடைகிறானா அல்லது அலட்சியப் படுத்தப்படுகிறானா? இதுதான் பொம்மை வீடாக (பொம்மரில்லு) தெலுங்கு சினிமாவில் அலங்கரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்கு படங்களை விஜய் ரீமேக் செய்து நல்ல பெயரை திருடிக்கொண்டிருப்பது போல் சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படங்களை அப்படியே காப்பியடித்து "ரீமேக்" ரவி பாஸ் மார்க் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஜெயம், M குமரன் S/O மகாலெட்சுமி மற்றும் சம்திங் சம்திங் மட்டுமே ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளையும் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது (மழை படம் விதிவிலக்கு). தமிழில் ஒரிஜினலாக தயாரிக்கப்பட்ட தாஸ், தீபாவளி மற்றும் இதயத்திருடன் எல்லாமே தோல்வியை தழுவிய காரணங்கள் என்னவென்று இப்போது புரிந்திருக்கும்.

அசல் படத்துக்கும் அண்ணன் ராஜாவின் படத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னவோ?

ராஜாவின் இயக்கத்தில் வெளியாகும் எல்லா படங்களும் ஒரிஜினல் தெலுங்கு படத்தை அப்படியே 100% காப்பியடிக்கப்பட்டிருக்கும். படத்தின் ஹீரோவை தவிர்த்து (அதுக்குதான் தம்பி ரவி இருக்காரே) மற்ற அனைத்து நடிகர்களும் முடிந்த வரை அந்த அசல் படத்தில் நடித்த நடிகர்களையே நடிக்க வைக்க முயற்ச்சிப்பார்.. ஹீரோயின் உட்பட.

அப்படியே அந்த துணை நடிகர்கள் நடிக்க இயலவில்லையென்றால் அவர் என்ன செய்வார் தெரியுமா? அதே போல முகச்சாயல் கொண்ட நடிகர் நடிகைகளை தேடி கண்டுப்பிடிப்பார். சம்திங் சம்திங்கில் மல்லிகா, ரீச்சா பல்லோட், பிரபு எல்லாம் தெலுங்கில் நடித்த நடிகர்களின் முகச் சாயல் அல்லது உடலைமைப்புக்கு ஏற்ற வாரே அமைந்திருக்கும்.

அசல் படத்தை விட ரீமேக் படம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுக்கு அவருடைய அடுத்த ட்ரிக் ஒரு காலத்தில் மிக பிரபலாமாக இருந்த ஸ்டார் இப்போ வெள்ளித்திரையில் இல்லாதவரை நடிக்க வைக்க முயற்ச்சிப்பது. M குமரனில் நதியா; சந்தோஷ் சுப்ரமணியத்தில் கௌசல்யா.

நடிகர் நடிகை தேர்வு முடிந்துவிட்டது. அடுத்து டெக்னிகள் க்ரூஸ் (technical crew) தேர்வு. இது ரொம்பவும் சுலபம். புதுசாக ஒருவரை தேட தேவையில்லை. தெலுங்கு படத்தில் வேலை செய்த அத்தனை பேரையும் அல்லேக்கா தூக்கி மெட்ராஸ்க்கு கொண்டு வந்திடுவார். கேமராமேன்ல இருந்து, இசையமைப்பாளர் வரை அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்திடுவார்.

இசை என்றதும் இந்த துறையை பற்றியும் பேச வேண்டும். தெலுங்கில் இசையமைத்த இசையமைப்பாளரையே தூக்கிட்டு வந்துவிட்டதால் பாடல்களின் இசையில் ஒரு மாற்றமும் இருக்காது. படத்தில் ஒரு பாடலை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் அதே இசையில் இருக்கும். சம்திங் சம்திங்கில் கோழி வெடைக்கோழி பாடல் மட்டுமே அசல். அதே போல் சந்தோஷ் சுப்ரமணியத்தில் எப்படி இருந்த என் மனசு என்ற பாடல் மட்டுமே அசல். பாடல்களே மாறாமல் இருக்கும்போது பாடகர்கள் மட்டும் மாறிடுவாங்களா என்ன?

இவ்வளவு நேரம் சொன்ன மேட்டர்களாவது பரவாயில்லைங்க. இதெல்லாவற்றையும் விட இன்னொரு பெரிய ஒற்றுமை என்னன்னா படத்தில் வர்ற காஸ்டியூம்ஸ், அவர்களது ஆடைகள் கூட மாறாமல் இருப்பதுதான். அசலில் ஹீரோ என்ன உடை போட்டிருந்தாரோ, அதேப்போல உடை டிசைக்ன் செய்து தமிழில் ரவி அணிந்திருப்பார். படத்தின் கதாநாயகியும் கூட. ஒரே மாதிரி உடை படத்தின் கதைக்கு தேவையான ஒன்று என்று நீங்கள் நினைத்தால், இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகணும். அந்த உடையின் வர்ணம் கூடவா ஒன்றாக இருக்க வேண்டும்? இது என்ன சீருடையா? சம்திங் சம்திங் பாடலை பாருங்கள். கதாநாயகன்/நாயகியின் உடைகளை!

ரீமேக் பண்ணுவது தப்பில்லைங்க. நம்மில் சிலர் இன்னமும் பழைய படங்களை பார்ப்பதில்லை. கேட்டால் "நாங்க இந்த காலத்து தலைமுறை. கருப்பு வெள்ளை படங்கள் எல்லாம் ஒரு படமா?"ன்னு கேட்குறாங்க. நம்மில் பலருக்கு வேற்று மொழி புரியாததால் சப்டைட்டல் இல்லாத படங்களை பார்க்க இயலாது. என்னைப்போல் சிலர் சப்டைட்டல் இல்லாமலும் பார்த்து அவங்க அசைவை வைத்து இந்த டயலோக் பேசியிருக்கலாம் என யூகித்து படத்தை பார்ப்பவர்களும் இருக்காங்க. ஆனால், பழைய படங்களையும், வேற்று மொழி படங்களையும் ரீமேக் செய்வதால், நல்ல நல்ல கதைகள் மக்களிடம் போய் சேர்கிறது. ஆனால், 100% காப்பி & பேஸ்ட் பண்ணுவதால் என்ன புண்ணியம்? அதுக்கு அசல் படத்தை டப் பண்ணியிருக்கலாமே!

ரீமேக் செய்வதன் முக்கிய நோக்கம் மக்களிடம் ரீச் ஆகாத கதையை (நல்ல கதை கரு கொண்ட படங்கள்) மக்களிடம் அதுவும் இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என எடுத்து கொடுத்தல்தான். ஆங்கில படம் தமிழில் ரீமேக் பண்ணும்போது, இந்தியாவில் இதே மாதிரி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என இயக்குனர் யோசித்து இயக்குவதுதான்.அங்கே இருக்கும் ஆனால் இங்கே இல்லாத ஒன்னை இருக்குன்னு சொன்னால் அது மக்களிடம் முழுமையா போய் சேராது. என்னடா இவன் ரீல் விடுறான் எனத்தான் மக்கள் எண்ணுவார்கள்! பழைய படங்களை ரீமேக் பண்ணும்போது அது இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என எண்ணி அதுக்கேற்ற மாதிரி திரைக்கதையை அமைப்பதில்தான் ஒரு இயக்குனரின் சாமர்த்தியம் அறிய முடியும். உதாரணத்துக்கு, பில்லா 2007 பழைய பில்லா கதைதான். ஆனால், டெக்னாலஜி மற்றும் பல அம்சங்கள் இப்போதுள்ள காலக்கட்டத்தில் மாறியுள்ளது. அதனையும் மாற்றினால்தான், படம் சிறப்பாக இருக்கும்.

ஒரே காலக்கட்டத்தில் வெளியாகிய வேற்று மொழி படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் பண்ணும்போது என்ன மாற்ற முடியும்? எல்லாமே ஒன்றுதானே? என்று கேட்கலாம். ஆனால், இதுதான் ஒரு இயக்குனரின் நிஜமான சேலேஞ் (challenge). எத்தனையோ விஷயங்கள் மாற்றலாம். கதை ஒன்றாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு வெரைட்டி கிடைக்கும். அசலை விட இது பெட்டர் என்ற பெயர் எடுப்பதே ஒரு ரீமேக் படத்தின் நிஜமான வெற்றி.

ஒரு இயக்குனர் அவர் சொந்த படத்தையே இன்னொரு மொழியில் ரீமேக் பண்ணும்போது பல மாறுதல்கள் செய்வார். அவர் செய்வது பெரும்பாலும் அசல் படத்தில் அவர் செய்த பிழைகளை திருத்தி மென்மேலும் மெருகேற்றுவார். இதுவே மற்றவரின் கதையை வாங்கி இன்னொரு இயக்குனர் ரீமேக் செய்யும்போது அவர் அதை சரியாக, ஆழமாக ஆய்வு செய்யவில்லையென்றால் அவருக்கு அந்த பிழைகள் தெரியாது. திருத்தவும் முடியாது. அப்படி திருத்தாமல் காப்பியடிக்கும் ஒரு படம் ஹிட்டாகி பெயர், புகழ் கிடைத்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி நிழைக்குமா? அதில் சந்தோஷம்தான் இருக்குமா? இது இன்னொருவரின் உழைப்பும், வேர்வையும் ஆச்சே!

100% ரீமேக்கை விட டப்பிங் படங்களுக்கு ஆதரவு போய் சேர்வது நல்லது என்பது என் கருத்து. உங்களுக்கு?