மதியம் ஒன்றை தாண்டி கடிகாரம் வேகமாய் சுழன்று கொண்டிருந்தது. ஆபிஸே காலியாக இருந்தது. கவிதா மட்டும் மும்முரமாக தன் ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தாள்.
"ஹேய்.. நீ லஞ்சுக்கு போகல இன்னைக்கு?" அமைதியை கலைத்தாள் அமுதா.
"இல்லப்பா.."
ஒற்றை வார்த்தையில் பதிலளித்து மீண்டும் தன் கம்பியூட்டரில் மூழ்கினாள் கவிதா.
"உனக்கு எப்போ வேலை இல்லைன்னு சொல்லியிருக்க! ஹ்ம்ம்.. சரி இந்தா... சாக்லேட் எடுத்துக்கோ!"
"என்ன விசேஷம் இன்னைக்கு?"
"மறதி கோழி. போன வாரம்தானே சொன்னேன். இன்னைக்கு என் பொண்ணோட பிர்த்டேன்னு!" அமுதா செல்லமாக கடிந்துக்கொண்டாள்.
கவிதா தன் மேஜை நாள்காட்டியை பார்த்தாள்.
ஏப்ரல் 22..
அந்த தேதியை நாள்காட்டியில் பார்ததும் கவிதா அமைதியானாள்.. அவள் எண்ணங்கள் எட்டு வருடங்கள் பின்னோக்கி போனது..
*******************************************************************************
"ஹேய், நாளைக்கு ஸ்கூலையே ஒரு கலக்கு கலக்கிடனும்டா. இவ பிர்த்டேக்கு ஸ்கூலுக்கே லீவு கொடுக்க முடியலைன்னாலும், இந்த ஸ்கூலே அவளுக்கு பிர்த்டே பாட்டு பாடணும்".. தன் கனவுகளை வார்த்தையாய் கொட்டிக்கொண்டிருந்தாள் கவிதா.
"என்னடா சொல்ற! அது எப்படி சாத்தியம் ஆகும்? வேணும்ன்னா, பள்ளி முடிஞ்சதும் நாம் ஸ்வீட்டிக்கு போய் கேக் வாங்கி கொண்டாடுவோம்" என்று மலர் மறுத்து கவிதாவின் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
"ம்ம்.. இல்லடா.. இப்படி இது வரை யாருமே பிறந்த நாள் கொண்டாத அளவுக்கு செய்து அசத்தணும். இது கூட செய்யலைன்னா நாமெல்லாம் எதுக்குடா ஃபிரண்டுன்னு இருக்கோம்" கவிதா திரும்பவும் ஆரம்பிக்க.
"சரிடா. இப்ப என்ன செய்யலாம்? ஒவ்வொருத்தவங்க பிறந்த நாளையும் நீதான் ப்ளான் பண்ணுவ. நீயே இதையும் செய். நான் என்ன செய்யணும்ன்னு மட்டும் சொல்லிடு. செய்யுறேன்.."
"குட்.. அப்போ நாளைக்கு இதான் ப்ளான்.."
கவிதா பிறந்த நாள் பிளான் சூப்பரா போட்டாள்..
"அட, இந்த ப்ளான் நல்லா இருக்கே. ஆனால், கொஞ்சம் ரிஸ்க்.."
"கவலைப்படாதே.. அது நான் பார்த்துக்குறேன்.."
******************************************************************************
மறுநாள்.. அதே பள்ளியில் காலை 7.00க்கு..
"மலர், அனிதா வர்றா.. கண்டுக்காத மாதிரி இருடா"
கவிதாவும் மலரும் தமது வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.. அனிதாவின் பிறந்த நாளில் எப்போதுமே முதலில் வாழ்த்து சொல்பவர்கள் இவர்கள்தான். இன்றைக்கும் இவங்கதான் "மீ த ஃபர்ஸ்ட்டூ"ன்னு வாழ்த்துவாங்கன்னு ஆவலுடன் வந்தாள்.
ஆனால் இவர்கள் கண்டுக்காததை கண்டு மிகவும் வருத்தப்பட்டாள். இன்று தன் பிறந்தநாள்ன்னு பல அறிகுறிகளை காட்டினாள். ஆனால், இவர்கள் தெரிந்ததாக காட்டிக்கவில்லை.
கவிதா மாணவர் தலைவி என்பதால் 7.25க்கு டியூட்டி இருக்கென்று சொல்லி வகுப்பறையை விட்டு வெளியேறினாள். மலரோ எங்கே சென்றாள் என்று தெரியவில்லை.
7.30 மணிக்கு மாணவர்கள் தத்தம் வகுப்பறையின் வெளியே வரிசையில் நின்று தேசிய கீதம் பாடிவிட்டுதான் வகுப்புக்கு செல்ல வேண்டும். எல்லாரும் எப்போதும் போல் உற்சாகமாக பாட, அனிதா மட்டும் ஒரு வித சோகத்துடனேயே இருந்தாள். தேசிய கீதம் பாடி முடிந்ததும், தலைமை ஆசிரியர் ஒரு சின்ன உரை ஆற்றினார். அதன் பிறகு எல்லாரும் வகுப்பினுள் போக முற்ப்பட்டபோது, பிறந்த நாள் பாடல் பள்ளி ஒலிபெருக்கியில் பாட, ஒரு பள்ளியே சேர்ந்து பாடியது.
Happy Birthday To You..
Happy Birthday To You..
Happy Birthday To Anitha..
Happy Birthday To You..
அனிதாவுக்கு ஒரே ஷாக். பாடல் பாடி முடிந்ததும், அதே ஒலிபெருக்கியில் கவிதாவின் குரல். தன் தோழிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியா, ஒரு பள்ளியே சேர்ந்து அவள் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது என்று சொல்லி, மீண்டும் ஒரு முறை வாழ்த்தினாள்.
கவிதா வகுப்புக்கு வந்து சேரும் பொழுது, அனிதா முகம் கண்ணீருக்கு பின்னால் ஒளிந்திருந்தது. அப்படியே மலர் கொண்டு வந்த கேக்கை ஊதி வெட்டி கவிதாவுக்கும் மலருக்கும் ஊட்டினாள்.
இப்படி நெருக்கமாக இருந்த அந்த நட்பு, அன்றே உடையும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை..
*****************************************************************************
மணி 3 மதியம்..
இடம்: பள்ளி நூல்நிலையம்
"நான் கிளம்புரேண்டா. 5 மணிக்கு டியூஷன்ல பார்ப்போம்." என்று சொல்லி கவிதா தன் புத்தகப்பையை தூக்கிட்டு வெளியானாள்.
பள்ளியை விட்டு சிறிது தூரம் நடந்து வந்தவள், முக்கியமான புத்தகம் ஒன்றை அனிதாவிடம் மறந்து விட்டது ஞாபகம் வர, திரும்ப நூல்நிலையத்துக்கு நடந்து வந்தாள்..
அங்கே..
கவிதாவுக்கு ஒரு பக்கம் ஷாக்.. அனிதாவுக்கு ஒரு பக்கம் ஷாக். இவர்களை பார்த்த மலருக்கு இன்னொரு பக்கம் ஷாக்.. இன்னொருவொருவருக்கும் ஷாக்.. அவர் கவிதாவின் அண்ணன்.
கவிதாவின் அண்ணன் கவிதாவை விட இரண்டு வயது மூத்தவர். அதே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். கவிதாவுக்கும் அவள் அண்ணனுக்கும் குணங்கள் முழுமையாக வேறுப்பட்டிருக்கும். கவிதாவை ஒரு பள்ளியே அறியும். டீச்சர்ஸ்க்கிட்ட நல்ல பெயர். மாணவர்களிடையே ஜூனியர் முதல் சீனியர் வரை எல்லாருக்குமே கவிதாவை தெரியும். ஆனால், அவள் அண்ணன் ஜீவா ரொம்ப அமைதியான டைப். யாருக்கும் அவர் இருப்பதே தெரியாது.
இன்று ஜீவாவும் அனிதாவும் ஒரே மேஜையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் கவிதா. அது ஒரு ஷாக் இல்லை. ஆனால் அவர்கள் கைகளை பிடித்து உட்கார்ந்திருந்ததுதான் அவளுக்கு அப்படி ஒரு ஷாக்.
அந்த வயதில் காதலிப்பதே தப்பென்று சொல்பவள் கவிதா. இதனால் பல நாட்கள் மலருக்கும் கவிதாவுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.
தன் தோழிக்காக அந்த கொள்கையை கை விடுவதாக இருந்தாலும், இத்தனை நாட்கள் இந்த விஷயத்தை மறைத்து விட்டாளே என்ற கோபமும் தலைக்கேறியது. நட்பில் ஒளிவு மறைவு இருக்க கூடாதுன்னு முடிவுடன் இருந்தவள் கவிதா. அவளும் அதை கற்பு போல் காப்பாற்றியவள்..
அந்த சம்பவத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலித்த அனிதாவின் மேலும், அந்த காதலை ஊற்றி வளர்த்த மலரின் மேலும் உள்ள கோபத்தை அடக்க முடியவில்லை. அவளுக்கு அவர்களை திட்ட கூட முடியவில்லை. கண்ணீர் மட்டுமே நிரம்பியது.
அப்படியே திரும்பி வீட்டுக்கு போய்விட்டாள். நாள் முழுதும் அழுதாள். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு இனி இவர்களிடமிருந்து தள்ளி இருப்பதே நல்லதென முடிவெடுத்தாள். மலர் எத்தனையோ தடவை கவிதாவை தொடர்பு கொண்டாள். முடியவில்லை.
கவிதா இவர்களை சந்திப்பதை தவிர்த்தாள். காலேஜில் அட்மிஷன் கிடைச்சதும், தன்ன்னுடைய படிப்பிலேயே கவனம் செலுத்தினாள்.
நடுவில், ஏதோ ஒரு பிரச்சனையில் தன் அண்ணனும் அனிதாவும் பிரிந்து விட்டதாகவும், அதில் அனிதா ரொம்ப டிப்ரஸ்ட்டாகவும் இருப்பதாக கேள்விப்பட்டாலும், அவளுக்காக கவலைப்பட்டாலும்.. தன் வைராக்கியம் அவளை பார்க்க இடம் கொடுக்க வில்லை..
**************************************************************************
எட்டு வருடம் ஆகிவிட்டது. அனிதா, மலர் நட்பு இன்னமும் மனதில் ஆழமாக பதிந்திருந்தது கவிதாவுக்கு..
செல்போன் ரிங் ஆகி கவிதாவின் எண்ணங்களை கலைத்தது..
'Private Number Calling..'
யாராக இருக்கும் என நினைத்துக்கொண்டே போனை எடுத்தவள், "ஹலோ, கவிதா ஸ்பீக்கிங்..."
"...."
"ஹலோ.. வூ இஸ் ஆன் த லைன் ப்ளீஸ்?"
"ஹ.... ஹல்லோ"
அந்த குரலை கேட்டதும் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி நின்றாள் கவிதா.
"மலர்?"
"ஆமாம் கவிதா...."
"ஹேய்.. எப்படி இருக்கடா? இப்போ என்ன பண்றே? எங்கே இருக்கே?" மலரின் குரலை கேட்ட கவிதாவுக்கு தலைக்கு மேலே பல்ப் எறிந்சதைப்போல் தெளிவானாள்..
உலகமே மறந்துட்டு மலரோட அரட்டை அடிச்சுட்டு இருந்தாள். திடீரென்று,
"மலர், அனிதா இப்போ எப்படி இருக்கா?"
"ம்ம்.. அவளை பத்தி நீயே கேட்பேன்னுதான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்."
"நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேண்டா.."
"ஐ மிஸ் யூ டூ.. என்னை மன்னிச்சிடு"
"ஹேய்.. ஹேய்.. அனிதா?"
"அனிதாதான் பேசுறேன்.. இவ்வளவு நேரம் நீ என் கிட்ட பேசுவீயான்னு வேய்ட் பண்ணிட்டே இருந்தேன். நீ என்னைக்கும் என்னை மறக்க மாட்டே.. உன் நட்பை நாந்தான் புரிஞ்சிக்கல. மன்னிச்சிடுடா"
"ஹேய்.. அனி.. இப்பக்கூட நான் உன்னைத்தான் நெனச்சிட்டிருந்தேன். எப்படி உன் கிட்ட பேசுறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.. இப்போ எங்கே இருக்க?"
"நான் இப்போ கே.எல்.சி.சியில் இருக்கேன்.."
"அங்கேயே இரு.. நான் வந்துட்டே இருக்கேன்."
போனை ஆஃப் செய்துட்டு சந்தோஷமாக ஓடி காரில் ஏறினாள் கவிதா. இன்று எப்படி அனிதாவின் பிறந்த நாளை கொண்டாடுவது என்று ப்ளான் போட்டுக்கொண்டே கே.எல்.சி.சியை நோக்கி தன் காரில் பயணமானாள் கவிதா.
-----------------------------------------------------------------------------------
இன்று நண்பர்கள் தினம். நம்மை அறியாமலேயே நம் நண்பர்களிடம் இப்படி சண்டை போட்டிருந்தால், மறப்போம் மன்னிப்போமாக. :-)
என் வலையுலக நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
Sunday, August 05, 2007
184. மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
Posted by MyFriend at 5:42 PM 78 comments
Subscribe to:
Posts (Atom)