Tuesday, December 30, 2008

12 வருடத்துக்கு பிறகு ஒரு வெற்றிகரமான சந்திப்பு : 28 மாணவர்கள் + 2 ஆசிரியர்கள்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பப்புள்ளியில் செய்யும் தவறு முதல் இடத்தில் வெற்றிப்பெற வேண்டிய வாய்ப்பை இழக்க வைத்துவிடும். இதுவே ஆரம்பப்புள்ளியில் சரியான நேரத்தில் புறப்பட்டு சீராக ஓடியிருந்தால் வெற்றி நிச்சயம்! அதனால்தான் இப்படிப்பட்ட விளையாட்டில் எப்படி முடிக்க வேண்டும் என்பதை விட எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர்கள் மிக கடுமையான பயிற்சிகளை விளையாட்டாளர்களுக்கு வளங்குவர்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னவெல்லாம் சாதித்திருந்தாலும், எங்கெல்லாம் போயிருந்தாலும் ஆரம்பப்புள்ளியை மறக்க முடியாது. ஆமாம்! நாம் வாயில் நுழையாத படிப்பெல்லாம் படித்து ஏ.சி. அறையிலும், விமானத்திலும், சொகுசு கார்களிலும் இப்போது பயணம் செய்தாலும், இதற்கெல்லாம் வித்தாக இருந்த நமது அ, ஆ சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும், ஆரம்பப் பள்ளியும், நண்பர்களும், அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளும், வாங்கிய அடிகளும், ஓடிய ஓட்டங்களும், சிரித்து மகிழ்ந்த தருணங்களும், கண்கள் கலங்கி நின்ற சம்பவங்களும், பரிட்சையில் பிட் அடித்த நேரங்களும் எப்போதுமே மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்து புதைந்து கிடைக்கின்றன.

வெகு சிலர் மட்டுமே அந்த பழைய நட்புகளை இன்னும் தன் தொடர்பில் வைத்திருக்கின்றனர். பலர் தன் வாழ்க்கை சக்கரம் ஓடும் வேகத்தில் இதற்கெல்லாம் நேரம் ஏது என்பதுபோல சுழன்று கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நீங்கள் நின்று திரும்பிப் பார்க்கும்போது “ச்சே.. வாய்ப்பு கிடைத்தபோது இந்த நட்பை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டதே! இப்போது இவர்களெல்லாம் எங்கே எப்படி இருக்காங்களோ!” என்று தோன்றவைக்கும் தருணம் மனதை மிகவும் புண்படுத்தும். பழைய நினைவுகளை நினைவில் கொண்டுவந்து கொஞ்சம் திருப்தி அடையவே முடியும்.

1996-ஆம் ஆண்டில் நாங்களும் எங்கள் ஆசிரியர்களும்

நான் சிறு வயதில் படிக்கும்போது ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பில் சொல்லும் ஒரு விசயம்: ”இன்னும் சில வருடம் கழித்து நீங்களெல்லாம் படித்து நல்ல வேலையில் இருக்கும்போது எங்கேயாவது எங்களை பார்த்தால் “வணக்கம் டீச்சர், நாந்தான் உங்கள் மாணவன்/மாணவி. 19XX வருடத்தில் உங்கள் வகுப்பில் படித்தேன். இப்போது ஒரு டாக்டராக/வக்கீலாக/ஆசிரியராக/பொறியியலாலராக வேலை பார்க்கிறேன்” என்று அன்று சொல்லப்போகும் ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக ஆக்கும். ஒரு பெண்ணுக்கு தாய்மை எப்படி அவளை முழுமையாக்குகிறதோ, அதேப்போல இந்த ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக்கும்”. அப்போதே என் மனதில் புதைந்த விசயம்! நானும் எப்போதாவது எனக்கு படித்து கொடுத்த ஆசிரியர் முன்னாள் நின்று “டீச்சர் என்னை நினைவிருக்கிறதா? 96-ஆம் ஆண்டு உங்கள் வகுப்பு மாணவியாக இருந்தேனே? வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்கினேனே! கணிதப்பாடம் நன்றாக செய்ததுக்கு நீங்க கூட தட்டிக்கொடுத்து முத்தம் கொடுத்தீங்களே!” என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த சந்தர்ப்பம் 12 வருடங்கள் கழித்து நேற்று அமைந்தது!
பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் ஆறாம்வகுப்பு வரை படித்து 1996-இல் நானும் நண்பர்களும் வெளியானோம். 12 வருடம் கழித்து ஒரு 2 மாதத்துக்கு முன்பு திரும்ப நண்பர்களெல்லாம் ஒன்றாக சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தேன். பல வகையிலும் கஷ்டப்பட்டு சிறுக சிறுக ஒவ்வொருவராக சேர்த்து 29/12/08-இல் சந்திக்கலாம் என ஏற்பாடானது.

காலை 11 மணிக்கு பத்துமலை கோவிலில் (முன்னாள் எங்கள் பள்ளி இந்த இடம்தான். பக்கத்திலேயே புதிதாக பள்ளி கட்டிக்கொண்டு அங்கே போனதும் எங்கள் பழைய பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டு கார் நிறுத்துமிடமாகவும், திருமண விருந்து நடக்கும் ஹாலாகவும் மாற்றப்பட்டுவிட்டது) எல்லாரையும் சந்தித்து சிறிது நேரம் அரட்டை அடித்தோம். பிறகு அனைவரும் கூட்டமாக பள்ளிக்கு சென்றோம். அப்போது எங்கள் மலாய் ஆசிரியை இப்போது அதே பள்ளியில் துணை தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். அவர் எங்களை பார்த்ததும் மகிழ்வுடன் வரவேற்றார். மற்ற ஆசிரியர்களை கூப்பிட்டு “இவர்கள்தான் என் பழைய மாணவர்கள்” என எங்கள் அனைவரையும் அந்த ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, எங்களில் நால்வர் (மற்ற அனைவரின் சார்பில்)அவருடன் பள்ளி அலுவலகத்துக்குள் சென்று இப்போதுள்ள பள்ளியின் நிலவரம், மாணவர்கள், ஆசிரியர்கள், பிரச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் என சில விசயங்களை கலந்தாலோசித்து விட்டு வந்தோம். அதன் பிறகு போட்டோஸ், போட்டோஸ், போட்டோஸ் என ஆங்காங்கே க்ளிக்கிக் கொண்டு பசி வந்ததும் அடுத்த இடம் பார்த்து கிளம்பினோம்.

மலாய் ஆசிரியர் ராஜேஸ்வரி டீச்சருடன் நாங்கள்

28 பேர் தாராளமாக உட்கார்ந்து சாப்பிட வசதியான இடம் எது என்று ஒரு பெரிய கேள்விக்கு விடை காணும் விதமாக அனைவரும் எஸ்.டி.சி ரெஸ்டாரண்டுக்கு பயணமானோம். அங்கே சுற்றி உட்கார்ந்த அனைவரும் எங்களையே பார்க்கும்படி பலவிதமான கூத்துகளை செய்து, உணவு அருந்தி, கலந்துரையாடினோம். இங்கேயும் போட்டோஸ் சில க்ளிக்கிவிட்டு அடுத்த இடத்துக்கு பயணத்தை தொடரலாமா என்று அனைவரின் கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் புறப்படலாம் என ஒரு மனதாய் முடிவெடுத்த பிறகு, நாங்கள் வாங்கிய நினைவுசின்னங்களை ஆளுக்கு ஒன்று என கொடுத்துவிட்டு 7 கார்களில் ரவாங்கை நோக்கி புறப்பட்டோம்.

உணவு விடுதியில் நாங்கள்

அங்கேதான் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கலாவதி வசிக்கிறார். அவரிடம் முன்னமே நாங்கள் வரும் தகவலை அவரிடம் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களை வர சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அவரும் அதே நேரம் அங்கே வந்திருந்தார். “வாங்க.. அனைவரும் என் வீட்டும் போகலாம்” என சொன்னதும் 7 கார்களும் அவருடைய வாஜா காரை தொடர்ந்தோம்.

அருமையான இரண்டு மாடி வீடு. பல வித வித்தியாசமான பொருட்களால் அலங்கர்க்கப்பட்டிருந்தது. வீட்டில் டீச்சரின் கணவரும், அவருடைய மூன்று அழகிய மகள்களும் எங்கள் அனைவரையும் சந்தோஷமாக வரவேற்றனர். அங்கிள் வீட்டில் இருந்த அனைத்து நாற்காலிகளையும் எடுத்து வந்து வைக்க வைக்க, நாங்கள் வீட்டின் உள்ளே வர வர.. ”என்னடா வந்துட்டே இருக்காங்க.. எத்தனை பேரப்பா!”ன்னு அவருக்கே பிரமிப்பாய் இருந்திருக்கும்.

ஒரு வழியாக எல்லாரும் வந்து அவர் வீட்டும் ஹால் நிறைத்துவிட்டோம். டீச்சர் எங்களின் வருகை அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொண்டுவந்துள்ளது என்று விளக்கினார். அவரின் குடும்ப உறுப்பினர்ர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரின் இப்போதைய பள்ளியை பற்றியும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் சொன்னார்.

வருடத்துக்கு முன் டீச்சர் எங்களுக்கு என்னென்னமோ பரிட்சையெல்லாம் வைத்திருக்கிறார். இப்போது டீச்சருக்கு நாங்கெல்லாம் சேர்ந்து பரிட்சை வைத்தோம். நான் 12 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட வகுப்பு போட்டோவை எடுத்து வந்திருந்தேன். அதை டீச்சர் கையில் கொடுத்ததும் அவர் அந்த போட்டோவை வைத்து எங்கள் ஒவ்வொருவரையும் கண்டுப்பிடிக்கும் வேலையில் இறங்கினார். அவர் ஒவ்வொருவராக கண்டுப்பிடிக்க, நாங்கள் எங்கள் இப்போதைய நிலை என்ன என்றும் அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அனைவரும் நல்ல நிலையில் இருப்பதை கேட்டு அவர் மிகவும் பூரித்து போனார்.

டீச்சரிடம் நாங்கள் அனைவருமே ஒரு தடவையாவது அடி வாங்கியுள்ளோம். அந்த தருணங்களை இப்போது ஒன்று கூடி அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அவர் எங்களை கிள்ளியது, அடித்தது, அறைந்தது, என அப்போது கசப்பான தருணங்கள் இப்போது பகிர்ந்துகொண்டபோது ஒவ்வொருவரும் சிரித்துக்கொண்டோம். ஒருவர் பாடம் செய்யாததால் இன்னொருவர் அடி வாங்கிய சம்பவங்களிலிருந்து, நாங்கள் செய்த குறும்பால் எங்கள் வகுப்பு தலைவன் ஓட ஓட துரத்தப்பட்டது வரை சம்பவங்கள் இப்போது நகைச்சுவையாக மட்டுமே தோன்றியது.

இதையும் தாண்டி டீச்சர் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த தருணங்கள், அவர் எங்களுக்கு சொன்ன அறிவுரைகள், பிரச்சனையான மாணவர்களை தனியே கூட்டிச்சென்று அவர்களின் பிரச்சனைகளை பகிர்ந்துக்கொண்டு அவர் வருத்தப்பட்ட நேரங்கள், நாங்கள் நன்றாக பரிட்சையெழுதி வெற்றிப்பெற வேண்டும் என்று அவர் கடவுளை பிரார்த்தித்த வேளைகள், நிறைமாத கர்ப்பிணியாய் உடல் நலம் சுகமில்லாமல் இருந்த சமயங்களிலும் எங்கள் நலனுக்காக பள்ளியில் எங்களுடன் எங்கள் கல்விக்காக அர்ப்பணித்த அந்த சமயங்கள், நாங்கள் வெற்றிப்பெற்ற அந்த சமயத்தில் அவர் எங்கள் பக்கத்தில் இல்லாத அந்த சமயங்கள்... இப்படி பல மனதை நெகிழ வைத்த பல சம்பவங்கள் எங்கள் முன் தோன்றி கலங்க வைத்தன. ஆனால், எல்லாமே இப்போது வெற்றிக்கணியை பறித்ததில் ஒரு மகிழ்ச்சியான தருணமாக மாறியது.

நாங்கள் இப்படி கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்த நேரத்தில் அங்கிள் எங்களுக்காக பலகாரங்கள் வாங்கி வந்து மேஜையை நிரப்பி விட்டார். பிறகு டீச்சர் கலக்கிய மைலோவும், டீயும், ஜூஸும் குடித்துக்கொண்டே பலகாரங்களை சுவைத்தோம். மீண்டும் பல இனிமையான தகவல்களை பறிமாறிக்கொண்டோம்.

அடுத்து அனைவரும் எப்போது சந்திக்கலாம்; எங்கு சந்திக்கலாம் போன்ற தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டது. அடுத்த மாதம் தோழி பிரேமாவின் திருமண வைபோகத்தில் எல்லாரும் அவசியம் கலந்துக்கொள்ளவேண்டும் என அன்பு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது. டீச்சரும் எங்களுடன் கலந்துக்கொள்வதாக தீர்மானமானது. அதற்கு முன் வரும் ஜனவரி ஒன்றில் திலகவதியின் வீட்டில் நடக்கும் வருடப்பிறப்பு விருந்தில் கலந்துக்கொள்ள அனைவரும் அழைக்கப்பட்டனர்.

இனி, யாரும் தொடர்பு அறுந்து போகக்கூடாது என்பதற்க்காக ஒரு ஸ்ட்ராங்கான இணைப்பு தேவை என்பத்இல் அனைவரும் ஆம்மோதித்தனர். ஒரு க்ரூப் ஆரம்பித்தால் எல்லா வித தகவல்களும் ஒரே இடத்தில் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருக்குமென எங்களில் ஒருவர் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டோம். இதையும் தவிர்த்து சில நல்ல காரியங்கள் ஒன்றாக சேர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளோம். எல்லாம் நலம்பெற, நல்லபடியாக நடக்க இறைவன் அருள்புரிவானாக..

கிளம்பும்போது திரும்ப இன்னொரு குழு போட்டோ டீச்சருடன் எடுத்துக்கொண்டோம். டீச்சர் எங்களை ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து தழுவி முத்தங்களுடன் வழியுனுப்பிவைத்தார். அங்கிள் மற்றும் டீச்சரின் புதல்விகளுக்கும் இவ்வேளையில் எங்கள் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு ஆசிரியர் கலாவதி டீச்சருடன் நாங்கள்

நேற்றிரவு அனேக நண்பர்களிடமிருந்தும் எனக்கு குறுந்தகவல்கள் வந்தன. அனைவரும் எந்த அளவு ரசித்தனர் என்ற திருப்தியை குறுந்தகவலாக எனக்கு அனுப்பியதை படிக்கும்போது எங்கள் சந்திப்பின் வெற்றியை அறியமுடிந்தது. இது இத்தோடு நிற்காமல் இன்னும் பல வருடங்கள் தொடர வேண்டும்; அதுவும் இது வெறும் ஒரு சந்திப்பாக மட்டும் இல்லாமல் பலருக்கு நன்மை பெயர்க்கும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். இதற்கு பலரும் சம்மதித்ததால் நம்மின் அடுத்த கட்ட வேலைகளில் நேற்றிலிருந்தே நான் ஈடுப்பட ஆரம்பித்துள்ளேன்.

ஒரு நாள்.. ஆனால், பல வருட ஆசைகள் நிறைவேறிய திருப்தி! இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்குமா என்று பலரும் ஏங்கும் சமயத்தில், நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதில் எல்லையில்லா மகிழ்ச்சி. இந்த ஒரு நாள் என் வாழ்வில் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். இதை மறக்ககூடாது என்ற ஒரு எண்ணத்தில் எனது டைரி குறிப்பாக இங்கே என் வலைப்பதிவில் செதுக்குகிறேன்.

Wednesday, November 07, 2007

குமரனுடன் சில நிமிடங்கள்...

"அக்கா.. தொந்தரவுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒரு இரண்டு நிமிடம் கிடைக்குமா?"

ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..

போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தபோது அந்த குரல் என் பக்கத்தில் ஒளித்தது.

இதில் என்ன அப்படி ஆச்சர்யம்.. திகைப்புன்னு நீங்க கேட்கலாம் (கேட்காட்டினாலும் நாங்க சொல்லுவோம்ல.. ) வேலைக்காக நான் தினமும் மலேசியாவின் தலைநகரம் (சுந்தர் சி நடிச்ச படமில்லைங்க) குவாலா லும்புருக்கு பயணம் செய்வேன். எனது பிரயாணத்தில் தினமும் பல நூறு பேரை சந்திக்கிறேன். அதில் பலர் இந்தியர்கள் அல்லது மலேசிய தமிழர்கள் ஆவர்.

இதில் பாதி பேருக்கு தமிழே தெரியாது. மீதி உள்ளவர்களுக்கு தமிழ் தெரிந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுவாங்க. எல்லாம் ஸ்டைலும் வெட்கமும்தான் காரணம். நம் தாய் மொழியில் பேச எதற்க்கு வெட்கம் என்று நானே சிலரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்.

நானே தமிழில் புலவி என்றெல்லாம் சொல்ல வரலைங்க. எனக்கு இருக்கும் தமிழ் அறிவும் கொஞ்சம் கொஞ்சம்தான். நான் தமிழ் பேசும்போதே என்னையும் அறியாமல் மலாயும் ஆங்கிலமும் கலந்து வரும். முடிந்தவரை அப்படி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சரி, சொல்ல வந்த விஷயம் வேற.. இப்போ வேற எதையோ பேசிட்டு இருக்கேன் பாருங்க..

கே.எல் பட்டணத்தில் இப்படி தமிழில் பேசி நான் கேட்பது ரொம்ப அபூர்வம்தான். அதுவும் சுத்த தமிழில் அழகாய் ஒரு சின்ன பையனின் குரலில் கேட்டபோது ஒரு வித பூரிப்பும் மகிழ்ச்சியும் கூடி வந்தது. அந்த சந்தோஷம் மிக விரைவிலேயே அழிந்தது.

அந்த குரலை கேட்டு நான் திரும்பியபோது ஒரு 12-13 வயது தமிழ்ப்பையன் கையில் ஒரு சின்ன மூட்டையுடன் என்னைப்பார்த்து நின்றிருந்தான். அரைக்கால் சிலுவாருடன் ஆங்காங்கே கிழிந்த இடத்தில் ஒட்டுப்பட்ட சட்டை அணிந்திருந்தான். பழைய உடை என்றாலும் அது சுத்தமாக இருப்பதை பார்த்ததுமே அவன் மேல் ஒரு மரியாதை வந்தது. போட்டிருப்பது புதியதா பழையதா என்பதை பார்ப்பதைவிட அதை எப்படி பாதுக்காக்கிறார்கள் என்பதுதானே சிறந்த் விஷயம்?

"என்ன தம்பி?" நான் வாயை திறந்தேன். வார்த்தையிலேயே பரிவும் சேர்ந்து தம்பி என்ற பாசமும் ஒட்டிக்கொண்டது.

"அக்கா, நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்க்கா. வீட்டுல ரொம்ப கஷ்டம். நான் படிக்கணும். அதுக்கு பணமில்லை" என்றூ சொல்லிக்கொண்டே தன் மூட்டையில் கை விட்டான்..

இவன் பிச்சை எடுக்கும் எண்ணம் கொண்டவன் இல்லை என்பது தெளிவாக புரிந்தது எனக்கு. மனதில் தன்னம்பிக்கையும் நிறைய இருப்பதும் ஓரளவு அவன் முகத்தில் என்னால் கண்டறிய முடிந்தது. அந்த மூட்டையிலிருந்து ஒரு பொருளை எடுத்து காட்டினான்.

"அக்கா, இது நானே செதுக்கியது. Candle Stand. பாருங்க. பிடிச்சிருந்தா வாங்குங்க. RM10தான். என் படிப்புக்கு உதவியா இருக்கும்" என என் கிட்டே நீட்டினான்.

அதை நான் வாங்கிப்பார்த்தேன். சொந்தமாக செய்த வேலைப்பாடு தெரிந்தது. அந்த பையன் உண்மையிலேயே டேலண்டட். ரொம்ப அழகாய் செதுக்கப்படிருந்தது. ஆனால், அது எனக்கு பயன்படாது என்று தோன்றியது.

"தம்பி, எனக்கிது தேவைப்படாதுப்பா. பரவாயில்லை.. இந்த 10 வெள்ளியை வச்சுக்கோ. அக்காவுடைய கிஃப்ட்டா இருக்கட்டும்."

"வேணாம்க்கா." என்று கொஞ்சம் தயங்கினான்.

நான் வற்ப்புறுத்தி அவனின் சட்டை பாக்கேட்டில் திணித்தேன்.

அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"

அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

"தம்பி உன் பேர் என்னப்பா? என்ன படிக்கிறே?"

"அக்கா, என் பேரு குமரன். ஆறாம் வகுப்பு படிக்கிறேன்."

"படிச்சு பெரிய ஆள் ஆனதும் என்னவா ஆகப்போற?"

"நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.

"வீட்டுல எத்தனை பேரு? அம்ம அப்பா என்ன பண்றாங்க?"

"எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. இப்போதான் 7 வயசு. அப்பா இருக்கிற வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்டாரு. அம்மாதான் ஆங்க்கங்கே வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து என்னை படிக்க வச்சாங்க. இப்போ அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. வேலைக்கு போய் 1 வாரம் ஆச்சு. அதான் இப்போ நானும் வேலைக்கு போறேன்க்கா" அந்த சிறூவன் சொல்லும்போதே கண்ணில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.

"அக்கா. இன்னைக்கு நிறைய பேர் இந்த ஏரியாவுக்கு வந்திருக்காங்க. எல்லாரும் தீபாவளி ஷாப்பிங் வந்திருக்காங்க. அவங்க கிட்டேயும் நான் என் பொருளை விற்கணும்க்கா. நான் கிளம்புரேண்க்கா. ரொம்ப நன்றி" என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய மூட்டையை கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவன் நடந்து போவதையும், அங்கு ஷாப்பிங் செய்துக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசுவதையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் அவனிடம் பரிவுடன் பேசுவதும் சிலர் அவனை விரட்டுவதுமாய் இருந்தாலும் மான்ம் தளராமல் அடுத்தவர்களை சந்தித்தான் குமரன்.

"அண்ணே, அவன் சாதிப்பான் ஒரு நாள்.." என்று என் பக்கத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு புத்த்கங்கள் வாங்கிவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

வழியில் ஒரு அம்மா ஓரத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. கையில் குமரன் காட்டிய அந்த மெழுகுவர்த்தி சிலை வத்திருந்தார். உடம்பு சரியில்லாமல் இருப்பது அவர் முகம் காட்டிக்கொடுத்தது. நான் என் நடையை தொடர்ந்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென்று திரும்பி பார்த்தேன். குமரன் அந்த அம்மாவை எழுந்திரிக்க உதவி செய்து ரெண்டு பேரும் ஒன்றாய் நடந்து போனார்கள். அவர்தான் குமரன் சொல்லிய அவர் நோய்வாய்ப்பட்ட அம்மாவாக இருக்குமோ என்று தோணியது.

திரும்பி அந்த சாலை முழுவதும் பார்த்தேன். பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை குதூகலமாக சந்தோஷத்துடன் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் சந்தோஷமாய் புத்தாடையுடன், நல்ல உணவுடன் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடபோகிறோம். ஆனால், இப்படியும் சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனரே! அவர்களுக்கு இந்த மாதிரி தீபாவளி, பொங்கல் என்ற விழாக்கள் எப்படி இருக்குமோ! atleast ஒரு வேளை உணவாவது வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடும்படி அமையுமா?

நண்பர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த
தீபாளி ல்வாழ்த்துக்ள்.....

வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?

Wednesday, October 10, 2007

திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன்...


இன்று ஒரு புள்ளியில் நின்று கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன். எங்கெங்கோ நடந்து/ கடந்து வந்திருக்கிறேன். மை ஃபிரண்டின் உலகின் 200வது பதிவையும் தொட்டாச்சு. மார்ச் மாதம் 2006-இல் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது இந்த வலைப்பூ.

மார்ச் 11-இல் ப்ளாக்கர்ன்னா என்னன்னு தெரிந்துக்கொள்வதுக்காகத்தான் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். 4 மாதம்.. சரியாக நாலே நாலு மாதம்தான்.. மூடும் விழாவையும் நடத்தாமலேயே போய்விட்டேன். ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் இருக்கிறது என்பதையே மறந்துட்டேன். தமிழ் கிறுக்கு எனக்கும் பிடித்திருந்ததால் இரண்டாவது திறப்புவிழாவும் கண்டேன் நான்.

அக்டோபர் 10-இல் தமிழில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. 200 பதிவுகளில் அனேகமாக தமிழில் எழுதியது மட்டும் 100 இருக்கும்.

நான் எழுத ஆரம்பிச்சது தமிழில் எனக்கிருந்த தாகம்தான். எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. தமிழ்ல எதை பார்த்தாலும் அதை படிப்பேன். ஒருத்தடவை நான் பேருந்துக்கு காத்திருந்தபோது ஒரு பேருந்து கண்ணாடி உள்ளே ஒரு போஸ்டர்… தமிழில்.. அதை நான் பார்க்கும்போது அந்த பேருந்து புரப்பட தயாராகிடுச்சு. அதை படித்தே தீரணும்ன்னு அந்த பேருந்துல ஏறி டிக்கெட் எடுத்து அந்த போஸ்டரை படித்துட்டுதான் இறங்கினேன்.

உங்க ஊரில் தமிழ் புத்தகம் கிடைக்காதான்னு கேட்டா, என்னோட பதில் இல்லைன்னுதான் சொல்வேன். நான் இருந்த இடத்தில் தமிழ் நாளிதழே கிடைக்காத போது புத்தகத்துக்கு எங்கே போவேன் நான்? அதுக்குதான் இப்படி பஸ்ல, ரோட்டுல, கீழே கிடக்குற எதுல தமிழை பார்த்தாலும் படிச்சுட்டு இருப்பேன்.

Basic தமிழ் மட்டுமே கற்றிருந்த எனக்கு ஒரு பதிவெழுதவே குதிரை கொம்பாக இருந்தது. இதை வச்சிக்கிட்டே இத்தனை பதிவெழுதியிருப்பது எனக்கே ஒரு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுல ஏதாவது ஒரு பதிவாவது உங்களை கவர்ந்திருக்குமா இல்லையான்னு எனக்கே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது எதுன்னு நீங்கதான் சொல்ல வேண்டும்.

நான் இவ்வலையுலகில் கற்றதை விட பெற்றது அதிகம். கற்றது தமிழ்.. பெற்றது நண்பர்கள். ஈயடிச்சான் காப்பியிலிருந்து நண்பனான சூனியன் வரை கார்த்தியிலிருந்து லேட்டஸ்ட் ஃபிரண்ட் நிலா வரை எத்தனை எத்தனை நண்பர்கள்! என் நண்பர்களின் உலகத்தை அப்படியே வலது பக்கத்தில் பாருங்க.

உங்கள் ஒவ்வொருத்தரின் பற்றியும் இங்கே பேசவேண்டும் என்று ஆசைதான்.. ஆனால், அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் அதுக்கே ஒரு தொடர் எழுத வேண்டும். இது கூடிய சீக்கிரமே வெளி வரும் என்று நினைக்கிறேன்.

இங்கே யார் யார் என்று சொல்லாமல் நான் அறிந்த சில நண்பர்களைப்பற்றி சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனையோ நண்பர்கள்!

சங்கம், யூனியன், கும்மி என்று பல வகை க்ரூப். அதையும் மீறீ சில நட்பு. அவர்களில் சிலர் இணையத்திலிருந்து ஒரு படி மேலே போய் போனிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் அளவு வளர்ந்துள்ளது. அதிலும் ஒரு சிலர் இன்னொரு படி மேலே இதயத்தின் பக்கத்திலும் இடம் பிடித்திருக்கீங்க.

என்னுடைய பதிவுகளில் உங்களுக்கு ஏதாவது வளர்ச்சி தெரிந்தால் அதுக்கு காரணம் நான் அல்ல. என்னுடைய பதிவுகளை இடைவிடாது படித்து இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று ஐடியா கொடுக்கும் என் நண்பர்கள்தான் காரனம். காமெடி எழுது கதை எழுது என்று சொல்லி அதுக்கும் இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று கற்று கொடுப்பதிலிருந்து எழுதி முடித்ததும் இந்த வார்த்தை தவறு, 'ன'க்கு பதிலா 'ண' என்று எழுத வேண்டும், இப்படி எழுதினால் இந்த வார்த்தையில் அர்த்தம் இப்படி ஆகிடும், இந்த மாதிரி ஸ்டைய்லில் எழுதலாமே என்று அவர்கள் கொடுத்த அறிவுரைதான் காரணம். இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது கோடி நன்றிகள். இனியும் அப்படியே எனக்கு வழிக்காட்டணும். சரியா? ;-)

இது வரை எந்த ஒரு பதிவரையும் நேரில் நான் பார்த்ததில்லை. கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்குமளவு வளர்ந்திருக்கும் சில நட்பு. என் நலனிலும் சந்தோஷத்திலும் மிகவும் அக்கறை வைத்திருக்கும் அந்த சிலருக்கு நான் என்ன செய்ய போகிறேன்?

தமிழில் பெரிசாக எதுவும் சாதிக்கும் அளவு எனக்கு திறமை இல்லாவிட்டாலும், இதுவரை எழுதியதை விட இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று ஆசைகள் இருக்கு. நடக்குமா?? அதையும் பார்ப்போம். J



பி.கு 1: Double celebration என்னன்னு நான் சொல்லிட்டேன்

பி.கு 2: அதுல ஒரு குட் நியூஸ் G3 கலாய்த்தல் சங்கம் ஆரம்பிக்கறதுன்னு சிலர் தப்பா நெனச்சிட்டு இருந்திருப்பீங்க. அஸ்கு புஸ்கு.. எங்க அக்காவை நான் கலாய்க்கலாம். மத்தவங்க கலாய்க்கிறதுக்கு நானே சங்கம் ஆரம்பிப்பேனா?

பி.கு 3: ஆனால், மத்தவங்க அந்த சங்கம் ஆரம்பித்தால் கண்டிப்பாக எனக்கு லைஃப் டைம் அட்மிஷன் கொடுக்கணும். சரியா?

பி.கு 4: நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன? விருந்துதான். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு G3 விருந்து வழங்குவார். ஷார்ஜா, துபாய் பக்கம் உள்ளவங்களுக்கு கோபி்யும் பேங்கலூரில் ராம் மற்றும் இம்சை அரசியும், அமெரிக்காவில் ஜி அண்ணணத்தேயும் விருந்து வழங்குவார்கள். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு இந்த சின்ன குழந்தையை வாழ்த்திட்டு போங்க. :-)

Saturday, September 01, 2007

185. G3 பிறந்தநாளுக்கு நானும் G3 பண்ணிட்டேன்

சொர்.. சொர்.. சொர்ணாக்காவோட பிறந்தநாள் இன்னைக்கு.. ஆனால் யாருமே அவங்க மாதிரி G3 பண்ணி போடாமல் சொந்தமா மூளையை கசக்கி பதிவு போடுறீங்கன்னு வருத்ததுல இருக்காங்க. வ்ருத்தப்பட வச்சிடுவோமா நாங்கள்? அதுக்குதான் இதோ:


இது சொர்ணாக்கா பிறந்தநாளுக்கு அவங்களே வாங்கிக்கிட்டாங்க.. (நமக்கெல்லாம் இதுல பங்கு தரக்கூட மாட்டேன்னு சொலிட்டாங்க. கோப்ஸ் & K4K, வந்து கொஞ்சம் என்னன்னு கேளுங்கப்பா)

இவங்களோடு இவங்க சாப்பிடுற உணவை ஒப்பிட்டோம்ன்னா, இவங்களை விட அந்த உணவு பொருட்கள்தான் பெருசா தெரியும். இவங்க விஷயத்துல இது மட்டும் எப்படி சாத்தியம் ஆகுது? ஒரே கேள்விகுறியா இருக்குப்பா.. :-P

இந்த சாக்லேட்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கிறது யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்? :-D

இது அவங்க பிறந்த நாளுக்கு நாமெல்லாம் வங்கி கொடுத்த கேக். அவங்க வயசை யாரு சரியா கண்டுபிடிக்கிறாங்கன்னு பார்ப்போமா? ;-)

இவங்க தட்டையும் காலி செய்துட்டு மத்தவங்க தட்டுலேயும் பாயுறதுல இவங்க கெட்டிக்காரங்க. :-D

இது யாருன்னு தெரியுதா? பரணி அண்ணாவும் வேதா அக்காவும்தான் இவங்க. இன்னைக்கு சென்னை ப்ளாக்கர் மீட்டிங்ல G3 பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க போகுதாம். எனக்கு கிடைத்த சி.ஐ.டி. தகவலின்படி உங்க ரெண்டு பேருக்கும் தூக்க மருந்து கொடுத்துட்டு உங்க உணவையும் இவங்களே காலி பண்ண போறாங்கலாம். அண்ணா & அக்கா, ஜாக்கிரத்தை. :-D

ஈட்டிங் குவின் @ சொர்ணாக்கா @ G3...
இவங்க ஒரு தங்க கம்பி (யாருப்பா அங்கே ஒரு பவுனு எவ்வளவுன்னு கேட்கிறது?)
கொண்டாடுறாங்க வெள்ளி விழா..
இன்று தனியா கொண்டாடுறவங்க..
அடுத்த வருடம் மூவரா கொண்டாட வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!

Sunday, July 22, 2007

183. இது நான் நன்றி சொல்லும் நேரம்

பாசமழை பொழிகிறது..
ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிகிறது..
ப்ளாக்கர் தோட்டத்து நண்பர்களே
.:: மை ஃபிரண்ட் ::.க்கே "மை ஃபிரண்டுகளே"
பாசமழை பொழிகிறது..
ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிகிறது..


இந்த பதிவு ஏன்? எதுக்கு என்று நான் சொல்லவே தேவையில்லை.. You all made it complete. :-)


எதை சொல்ல..


அன்பு தங்கச்சியின் கவுண் டவுனை சொல்லவா?

G3-யின் ப்ராவகம் ஸ்பெஷல் விருது 2007-ஐ சொல்லவா?

தல கார்த்தியின் 500-ஆவது பதிவை எனக்கு பரிசளித்ததை சொல்லவா?

கவிதாயினி காயத்ரியின் என் நெஞ்சை நெகிழ வைத்த அந்த டெஸ்டிமோனியலை சொல்லவா?

பாசக்கார குடும்பத்தின் சார்பா குசும்பன் சொன்ன வாழ்த்தை சொல்லவா?

சித்துவையும் பாசக்கார குடும்பத்தில் சேர்க்க அனுமதிச்ச பாசக்கார குடும்பத்தை பற்றி சொல்லவா?

சித்து எனக்காக எழுதிய கவிதையை சொல்லவா? அனுப்பிய ஈ-கார்டை சொல்லவா?

இதையெல்லாம் செய்துட்டு மீண்டும் அவங்க பெயரில் மனமார வாழ்த்திய கண்மணியக்காவை பற்றி சொல்லவா?

எனக்கு எத்தனை வயசுன்னு போட்டி வச்சாங்களே, அதை சொல்லவா?

சரியாக பதிலளித்த கோபி எனக்காக அனுப்பிய அந்த அழகான வாழ்த்து அட்டையை சொல்லவா?

அனுசுயா கொடுத்த மலேசிய புயல் என்ற பட்டத்தை பற்றி சொல்லவா?

சிபி அண்ணாத்தே டெடிக்கேட் பண்ணிய பாடலை சொல்லவா?

இம்சையக்கா, ஜீ, ராம் அனுப்பிய அந்த அழகான பரிசை பற்றி சொல்லவா?

இரவு 12 மணியிலுருந்து கால் பண்ணி வாழ்த்து சொன்ன கோப்ஸ், புலி, அருண், கப்பியை பற்றி சொல்லவா?

காலையில் நடந்த கான்ஃபரன்ஸில் இணைந்து கலாய்த்த கே.ஆர்.எஸ், ட்ரீம்ஸ், சந்தோஷ் பற்றி சொல்லவா?

கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?

ப்ளாக் யூனியன் மக்கள்ஸின் பாச மழைகளை சொல்லவா?

12 மணிக்கு எதிர்ப்பாராமல் வந்த மதி அக்காவின் மின்னஞ்சல் வாழ்த்தை சொல்லவா?

கடலில் இருந்தாலும் மறக்காமல் என்னை நினைத்து அழகிய ஈ-கார்டுடன் கூடிய அந்த அருமையான வாழ்த்து சொல்லிய கடல் கணேசனை சொல்லவா?

எங்கே எனக்கு பதிவு போட்டாலும் எல்லா இடத்திலும் வந்து பின்னூட்டமிட்ட அபி அப்பா, கானா பிரபா, மின்னுது மின்னல், தம்பி, கார்த்திக் BS, அய்யனார், பரணி அவர்களின் கைவரிசைகளை சொல்லவா?

ஆர்குட்டிலும் தேவ் அண்ணா, சவுண்ட் பார்ட்டி, பாலா, ஜொல்லு பாண்டி வாழ்த்திய ஸ்க்ராப்களை சொல்லவா?

மற்றும் வாழ்த்து சொன்ன இளா, வெட்டியண்ணே, கிட்டு M&M, சுமதியக்கா, பொற்கொடி, பத்மப்ரியா, நிலவன், வேதா, செந்தழல் ரவி, தம்பி, மனசு, குட்டி பிசாசு, முத்து லெட்சுமி அக்கா, மலைநாடான், நெல்லல காந்த், UP தர்சன், காட்டாறு அக்கக, துளசி டீச்சர், மணி பிரகாஷ் மற்றும் பெயர்கள் விட்டுப்போன அனைத்து நல் உள்ளங்களையெல்லாம் (இங்கேதான் என் ஞாபக சக்தி கொடி [இங்கேயும் கொடிதான்.. என்ன கொடுமை கொடி இது!] கட்டி பறக்குது. உங்க பெயர்கள் விட்டுப்போயிருந்தால் புதிதாய் பிறந்த இந்த குழந்தையை மன்னிக்கனும்.)

You all made my day COMPLETE buddies!

நன்றிகள் பல கோடி உரித்தாகுக. :-)

கேக் எல்லாம் door delivery செஞ்சாச்சு! வந்து சேரலைன்னா, நீங்க தொடர்பு கொ(ல்ல)ள்ள வேண்டிய நபர்:

மிஸ்டர் அபி அப்பா,
கிடேசன் பார்க்,
துபார் குறுக்கு சந்து,
துபாய் மேயின் ரோடு,
துபாய்..

இவரை தொடர்பு கொ(ல்ல)ள்ள முடியலைன்னா, கிடேசன் பார்க்ல கவுந்து கிடக்கும் பாறைகள் (எல்லாம் நம்ம மக்கள்ஸ்தான்.. அலேய்ன் பார்க்ல இருந்து வந்து இங்கே ஒரே குத்தாட்டம் போட்டு மயங்கி விழுதிருக்காங்க..) யாரையாவது எழுப்பி கேட்கவும். ;-)
உங்கள் அனைவருக்காகவும்:

Saturday, May 12, 2007

178. கனவுலக நாயகனின் பிறந்தநாள் இன்று..

இவன்..
அகில உலக ப்ளாக் முன்னேற்ற கழக தலைவன்..
முன்னாள் பி.மு.க முதலமைச்சர்..

கிராமத்து மண் வாசனை அறிந்த இவன் ஒரு பாரதிராஜா..
தல அஜித்தின் உண்மை தொண்டன்..

சிட்டுக் குருவியின் நண்பன்..
வினாடி-வினா அரசன்..

புதியவர்களுக்கு இவன் கைக்கொடுக்கும் குரு..
பழையவர்களுக்கு இவன் தோள் கொடுக்கும் தளபதி..

நல்ல பதிவுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு விகடன்..
உளருவது தன் உள்ளத்தின் வேலையாக கருதும் ஒரு உண்மை உழைப்பாளி..

வெள்ளோடு கிராமத்து இளைஞன்..
ஒஹியோவின் இளவரசன்..

கவிதை கிறுக்கன்..
கனவுலகின் நாயகன்..

எங்கள் நாயகன் மு.கார்த்திகேயனின் பிறந்த நாள் இன்று.


பர்த்துடே பேபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இன்று போல் என்றென்றும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வணங்குகிறேன்.


பி.மு.க கட்சியின் செலவில் நாட்டாமையின் தலைமையில் துணை முதல்வர் வேதாவின் திட்டங்களுடன் பில்லு பரணியின் நிதியுதவியுடன் இன்னைக்கு ஒரு விருந்து ஏற்பாடு பண்ணியிருக்காங்கலாம்ல.. அதை பத்தி யாராவது கொஞ்சம் தகவல் சொல்லுங்கப்பா.. :-P