Monday, August 11, 2008

நஸ்கா (Nazca) ராட்சச கோடுகள்

உலகத்தில் இன்னும் தீர்வுக்காணாத/ முடியாத பல அதிசயங்களும் மர்மங்களும் ஆச்சர்யங்களும் தினம் தினம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. சில மர்மங்களுக்கு இப்படி இருக்குமோ என்று நாமே சில யூகங்களை உண்டாக்கிக்கொண்டு திருப்தியடைந்துக்கொள்கிறோம்.

நஸ்கா ராட்சச கோடுகள் (Nazca Lines) என்பதும் இன்று வரை மர்மங்களில் ஜொலிக்கும் ஒரு விஷயமாகவே இருந்துக்கொண்டிருக்கிறது. இதன் உருவாக்க ரகசியம் பற்றி பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. எந்த காலக்கட்டத்தில் யாரால் உருவாக்கப்பப்ட்டது? எப்படி இதை செய்தார்கள்? இந்த கோடுகள் உருவாக்கத்தின் பின்னனி மற்றும் நோக்கம்தான் என்ன? ம்ஹூம்.. ஒன்றுமே தெரியாத மர்மம்தான் இது.

பெரு நாட்டின் பம்பா மற்றும் நஸ்கா இடங்களில் இந்த கோடுகளை பார்க்கலாம். பெரு பட்டணத்திலிருந்து ஒரு 400 கிலோமீட்டர் தென்கிழக்கு நோக்கி போக வேண்டும். 450 கிலோமீட்டர் சதுர அளவில் இந்த கோடுகள் அமைந்திருக்கின்றன. அம்மாம்பெரிய கோடுகளா என்கிறீர்களா? ஆமாம். நீங்கள் இந்த இடத்தில் நின்று எங்கே அந்த கோடுகள் என்று தேடினால் கண்டு பிடிக்கவே முடியாது. இந்த கோடுகளையும், சித்திரங்களையும் பார்க்க வேண்டுமானால் உங்களுக்கு ஒரு சாட்டிலைட் அல்லது ஒரு விமானம் தேவைப்படும். கடலிலிருந்து 600 மீட்டர் உயரத்தில் நின்றால் மட்டுமே தெரியும். குறைந்த பட்சம் உங்களுக்கு கூகுல் ஏர்த் (Google Earth) இருந்தாலும் பரவாயில்லை. (ஆனால், தேடிக்கண்டு பிடிக்க உங்களுக்கு பொறுமை மிக அவசியம்).

[பெரு மற்றும் நஸ்கா நகரம்]

இந்த கோடுகள் 1920-ஆம் ஆண்டுகளில்தான் பேசப்பட ஆரம்பித்தது. இந்த காலக்கட்டத்தில்தான் அமேரிக்க கமர்ஷியல் விமானங்கள் நஸ்கா நகரை கடந்து போக ஆரம்பித்தன. அப்போதுதான் பயணிகளும், விமானிகளும் விமானத் தறையிரங்கும் தடங்கள் தெரிவதாக சொல்லியிருக்கின்றனர். ஆளே இல்லாத இடத்தில் யார் விமானத்தடங்களை அமைத்திருப்பார்கள்? இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்முன்னரே குரங்கு, பல்லி, எட்டுக்கால் பூச்சி என்று மிருகங்களின் ராட்சச ஓவியங்களையும் விமானப் பயணிகள் கண்டுள்ளனர்.

[விமானத் தடமாக தெரிந்த கோடுகள்]

புதுசா ஒன்று ஆச்சர்யம் கொடுக்கும் அளவு இருந்தால் விடுவார்களா நம் விஞ்ஞானிகள்? தொல்பொருள் நிபுணர்கள் கிளம்பிட்டாங்க பெரு நகருக்கு. என்னத்தான் அதிசயம் அங்கு காத்திருக்கு? எப்படி இதெல்லாம் வரைந்தார்கள்? ராட்சச மனிதர்கள், இயந்திரங்கள் கிடைக்குமா? எல்லா கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் என அதீத நம்பிக்கையில் பெட்டி கட்டி கிளம்பிட்டாங்க.

அவர்களின் ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், இந்த கோடுகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனாலும் எந்த காலக்கட்டத்தில், எந்த இனத்தவரால், எதுக்காக என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏனென்றால், அந்த கோடுகளில் சிக்கலான ஆனால் நேர்த்தியான வேலைப்பாடுகள் தெரிந்தன. இந்த அளவுக்கு நேர்த்தியாய் செய்ய விஞ்ஞான வளர்ச்சி கண்டிப்பாக அந்த காலக்கட்டத்தில் இருந்திருக்காது. அவ்வளவு நேர்த்தியாகவும் ப்ராட்சச உருவத்திலும் எப்படி செய்ய முடிந்தது? ஆகாயத்திலிருந்து ஒருத்தவர் கவனித்து சொல்லியிருந்தால் கூட இந்த அளவுக்கு பரிப்பூர்ண ஓவியம் வரைவது கஷ்டமே! அப்படியென்றால், இவர்கள் ரோம், மெசோப்போதாமிய மக்களை விட அறிவாளிகளா? ஒரு துறுப்பு சீட்டு கூட கண்ணுக்கு கிடைக்கலையே. எதையும் எழுதி வைத்த மாதிரியும் இல்லையே?

[குரங்கு வடிவில் நஸ்கா கோடுகள்]

ஆனாலும், தொல்பொருள் நிபுணர்கள் இந்த நஸ்கா கோடுகளை கஹூவாச்சி (Cahuachi) என்ற ஆதிவாசிகளின் முன்னோர்கள் வரைந்திருக்கக்கூடும் என நம்புகிறார்கள். இவர்கள் நஸ்கா நகரின் சுற்றுப்புற இடங்களில் இன்னும் வசிக்கின்றனர். ஏன் இவர்கள்? கஹூவாச்சி மக்கள் வசிப்பிடத்தில் பழைய கோட்டையின் ஒரு பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தவிர்த்து மம்மிகள் மற்றும் நஸ்கா கோடுகளின் சில படங்களின் கல்சுவடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த யூகம் தப்பாக இருக்கலாம் என்று நிபுணர்களே சொல்லியிருக்கார்கள். இது கஹூவாச்சி மக்களுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் இருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் வேலைப்பாடுகளாய் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், அவர்கள் யார்?

பல நூற்றாண்டுகள் முன்னர் உருவான இந்த ஓவியங்கள் / கோடுகள் இன்று வரை அப்படியே இருக்க காரணம் என்ன? நஸ்கா வட்டாரத்தின் இயல்பியலே இதற்கு முக்கிய காரணம். மழை இந்த இடத்தில் பெய்வது மிக மிக குறைவு. வருடத்துக்கு 20 நிமிடங்கள் மட்டுமே. உலகில் மிகக் குறைவான அளவில் மழை பெய்யும் இடங்களில் இதுவும் ஒன்று. நஸ்கா நிலம் கடினமான, கற்பாறைகளால் நிறைந்தவை. தூசு, குப்பை பறவாத நிலம் மற்றும் மிகக் குறைந்த அளவில் மழை; இதுவே வரைந்த கோடுகள் இன்று வரை கொஞ்சம் உருமாற மர்மத்தின் ரகசியம்.


[ராட்சச வௌவால்]

இதை தவிர்த்து ஒவ்வொரு கோடுகளின் முனையிலும் இதனை வரைந்தவர்கள் ஒரு வெளிச்சமான வர்ணங்களின் இன்னொரு அடுக்கை கொடுத்திருக்கின்றனர். அதனால் எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் மிகவும் தெளிவாகவும் பிரகாசமாகவும் தெரியும். பல நூறு வருடங்கள் ஆனாலும் அழியாது.

[ஹும்மிங் பறவை]

[நஸ்கா கோடுகளில் பல ஓவியங்கள் இதில் தெரிகின்றது]

[திமிங்கிலம்]

இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள் / கோடுகள்:

- எட்டுக்கால் பூச்சி (46 மீட்டர் நீளம்)
- குரங்கு (55 மீட்டர் நீளம்)
- ராட்சச வௌவால் (குவானோ பறவை) (280 மீட்டர் நீளம்)
- பல்லி (180 நீளம்)
- ஹும்மிங் பறவை (50 மீட்டர் நீளம்)
- திமிங்கிலம் (65 மீட்டர் நீளம்)
- Pelican (285 மீட்டர் நீளம்)

[நஸ்கா கோடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள்]

References:
http://en.wikipedia.org/wiki/Nazca_lines
http://www.peru-explorer.com/nasca.htm
http://unmuseum.mus.pa.us/nazca.htm