நீங்கள் சீனாவில் வசிக்கிறீரா?
உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு கிடைப்பது:
யூ டியூப் நோ! நோ!
யாஹூ நோ! நோ!
கூகில் நியூஸ் நோ! நோ!
பிபிசி வோர்ல்ட் நோ! நோ!
சி.என்.என் நோ! நோ!
குவார்டியன் நோ! நோ!
திரும்ப பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாடான்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே மேட்டர் என்னன்னு சொல்லிடுறேனுங்க.
இந்த சீனா நாட்டுல இப்போதுள்ள நிலமை என்னன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். திபேத்திய மக்களின் போராட்டமும், சீன அரசாங்கத்தின் அராஜகமும் (அடடே, டைட்டல் நல்லா இருக்கே!) இப்போ அங்கே கட்டுக்கடங்காமல் நடந்துட்டு இருக்கு. பல நாடுகள் சீன அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டேதான் இருக்காங்க.. டலாய் லாமாவும் இந்த அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூடிய விரைவில் பெய்ஜிங்கில் நடக்கப்போகும் ஒலிம்பிக்கை புறக்கணியுங்கள் என்று உலக மக்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்.
இந்த மாதிரி போராட்டம் நடக்குமிடத்தில் உண்மையான விபரங்கள் பத்திரிக்கைகளில் வராது. இது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும், உண்மையில் என்ன நடந்தது என்று மக்களுக்கு சொல்லுவதற்கு ஏதாவது ஒரு மீடியம் தேவைப்படும். அதிலும் எல்லா தரப்பு மக்களுக்கும், உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் மக்களுக்கும் போய் சேர வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கு. இண்டெர்நெட்! அதுவும் எழுத்து வடிவத்தை விட வீடியோ நிரல்களாய் மக்களிடம் போய் சேரும்போது அதனுடைய பாதிப்பும் அதிகம்!
இந்த வகையில் யூ டியூப் ஒரு மிகப் பெரிய சாதனை! எந்த போராட்டத்தையும், மக்களின் கருத்துக்களையும் ஒரே இடத்தில் வீடியோவாய் பார்க்கலாம். சீனா-திபேத் பிரச்சனை பற்றியும் பல வீடியோக்கள் வெளியாக ஆரம்ப்பித்துவிட்டது. நாமெல்லாம் இதை பார்த்து திபேத் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்திடுவோம் என்று பயந்து சீனா என்ன செய்தது! யூ டியூப்பை சீனாவில் ப்லோக் பண்ணிடுச்சு. அதனால், இனி இந்த பிரச்சனையை பற்றி புது வீடியோக்களை இனி யூ டியூப்பில் காண முடியாது. கூகல், யாஹோ, பிபிசி போன்ற நியூஸ் சான்ற தளங்களிலும் உள்நாட்டு RSS-ஐ தடுத்துவிட்டது.
இதெல்லாம் செய்தால் செய்திகள் வெளியே கசியாது என்று தப்பு கணக்கு போட்டுவிட்டது சீனா! எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றது சரிதானே! ;-)
Tuesday, April 01, 2008
சீனா: யூ டியூப் நோ! நோ!
Posted by MyFriend at 5:29 PM 13 comments
Labels: சமூகம்
Monday, January 28, 2008
நூரின், ஷர்லினி, அன்பரசி போன்ற குழந்தைகள் கடத்தலும் வீரத் தமிழ்ப்பெண்ணும்
இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கடத்தல்காரனை / கொலைகாரனை கண்டுபிடித்தாயிற்று என்று சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனால், இல்லை இல்லை.. இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை! என்றே சொல்லவேண்டிய கட்டாயம் இப்பொழுது!

நூரினின் கேஸையே தீர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு இன்னொரு சவால் விடப்பட்டுள்ளது. ஷர்லினி என்ற 5 வயது குட்டி பாப்பாவும் கடந்த ஜனுவரி ஒன்பதாம் தேதி கடத்தப்பட்டாள். பெட்டாலிங் ஜெயாவில் தன் வீட்டின் அருகாமையிலுள்ள விளையாட்டு மைதானத்தில் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றது.
காவல்துறை, மீடியாக்கள், மக்கள் என்று நாலாபுறமும் தேடிக்கொண்டேதான் இருக்கின்றனர்.. ஆனால்...... இன்றுவரை கிடைக்கும் ஒரே பதில்: காணவில்லை! மட்டுமே!

இதே மாதிரி ஒரு சம்பவம் தைப்பூசத்துக்கு இரண்டு நாள் முன்பு பாசிர் கூடாங்கிலும் நாட்ந்திருக்கிறது. திருமதி சரஸ்வதி என்பவர் தன் 4 வயது மகள் அன்பரசியை அழைத்துக்கொண்டு அவர் வேலை செய்யும் இடத்துக்கு நடந்து செல்லும்பொழுது, திடீரென பின்புறமாக மோட்டார் சைக்கிளில் கவச தொப்பி அணிந்திருந்த இருவரில் ஒருவன் இவரை உதைத்து இடது காது புறம் குத்தி கீழே தள்ளியிருக்கான்.
இவர் கீழே விழுந்ததும் அவன் அன்பரசியை தூக்கி பின்னால் வந்த நீல நிற பழைய காரின் உள்ளே தள்ளி கதவை மூட முயன்றான். நல்ல வேளையாக திருமதி சரஸ்வதி சீக்கிரமாக சுதாகரித்துக்கொண்டு உடனே எழுந்து ஓடி ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் குத்தி தனது மகளை காரிலிருந்து மீட்டிருக்கிறார். ஆனாலும், மோட்டார் சைக்கிளில் வந்தவன் அவரை தாக்கி அன்பரசியை கடத்த முயன்ற போது அவனை எத்தி, உதைத்து தன் மகளை காரிலிருந்து இழுத்து வெளியே தள்ளியதாகவும் இந்த சம்பவத்தில் தன் மகளுக்கு சில சீராய்ப்பு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது என்றும் சொல்லியிருந்தார்.

"கடத்தல்காரர்களிடமிருந்து எப்படித் தான் என் மகளை காப்பாற்றினேன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் என் உயிரை ஒரு பொருட்டாக நான் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது" என்று அவர் பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார்.
இதைச் சொல்லும்பொழுது, கடந்த பொங்கலன்று நானும் என் சகோதரர்களும் ஒரு சீன ஒட்டுக்கடையில் இரவு உணவு உண்ண சென்றபொழுது பார்த்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இரவு ஒரு 10-11 மணி இருக்கும். நாங்கள் போனது ரோட்டரத்தில் அமைந்த ஒரு ஒட்டுக்கடை. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென்று அலறும் ஒரு சத்தம். அதையடுத்து ஒரு கார் வேகமாக போவதும் பின்னால் சிலர் ஓடுவதுமாக இருந்தது. என்ன நடக்குதுன்னு போய் பார்த்தால், அங்கே ஒரு 3 வயது குட்டிபெண் கத்தி அழுதுக்கொண்டிந்தாள்.
என்ன நடந்து என்று விசாரிக்கையில் கார் அந்த பெண்ணின் கால் மீது ஏறிவிட்டது என்று சொன்னார்கள். உடனே ஒருவர், "சின்ன பிள்ளையை ஏன் தனியா விட்டீங்க? தூக்கிட்டோ, இல்ல கை பிடித்தோ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்று கேட்டார். அது நியாயமான கேள்விதான். ஒரு க்ரூப்பா 7-8 பேர் ஒன்னா வந்தாங்க. அதில் ஒருவர் கூடவா கைப்பிடித்து கூட்டிட்டு வர மறந்திருப்பாங்க?
அந்த பெண்னை தூக்கும்போது அவள் பாதம் உள்ள எழும்பு காலில் தொங்கிக்கொண்டு இருந்தது. குண படுத்துவது ரொம்ப கஷ்டம் போல் இருந்தது அவளுடைய நிலை. உடனே மருத்துவமனைக்கு தூக்கிட்டு ஓடுனாங்க. என் கேள்வி: இதை குண படுத்த முடியவில்லையென்றால், இந்த ஒரு சம்பவத்தால் வாழ்க்கை முழுக்க ஊனமாக திரிய வேண்டுமா இந்த பெண் பிள்ளை?
பி.கு: இம்சை அங்கிளின் ஜில்லுனு ஒரு Tag என்ற சீரியஸ் பதிவுக்காக...
Saturday, December 01, 2007
மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்
உரிமைப்போராட்டம், மலேசியாவில் கலவரம் என்று எங்குப்பார்த்தாலும் (தமிழ்மணத்தில் கூட) அதிருகிறது மலேசியா. இதைபப்ற்றி பலரும் பல வகையாக அலசி ஆராய்ந்துவிட்டார்கள். தினசரி நாளிதழ்களிலும், தொலைதொடர்பு சாதனங்களிலும் கிழித்து நாராய் தொங்க விட்டுட்டார்கள்.. ஒவ்வொன்றையும் படிக்கும்போதும் நான் நேரில் கண்ட காட்சிகளில் சிலவற்றவை மாறுப்பட்ட போதிலும் இதற்கென்று தனியாக ஒரு பதிவெழுதவேண்டும் என்று நினைக்கவில்லை.
இன்று TBCD அண்ணாவின் பதிவையும் கோவி அவர்களின் பதிவையும் படித்த போது, அண்டை நாட்டுக்காரர் அவர் கண்ணோட்டத்தில் எழுதிவிட்டார்.. இங்கே வந்து சில மாதங்கள் குடியேறிய TBCDயும் அவர் கண்ணோட்டத்தில் என்னென்ன தெரிந்ததோ அதைப்பற்றியும் எழுதிவிட்டார். இனி, ஒரு மலேசியராக என் கண்ணோட்டத்தில் சில விஷயங்களை பற்றி இங்கே சொல்ல நினைக்கிறேன். என்னுடைய இந்த பதிவு யாரையும் சாராமல் நடுநிலைவாதியாக எழுதுகிறேன்.
1874-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நிலமாய் அவர்களின் ஆட்சியின் உட்படுத்திக்கொண்ட பொழுது அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைக்காக இந்தியர்களும் சீனர்களும் ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர் என்று அனைவரும் அறிந்ததே. அப்பொழுதே மலாய், சீன, இந்தியர் ஒன்றுப்பட்டால் போராட்டம் ஆரம்பித்து அவர்களை நாட்டை விட்டு துரத்த இயலும் என்று முன்கூட்டியே உணர்ந்து மூன்று இனத்தவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர். எப்படி?
இந்தியர்களை தோட்டப்புறங்களிலும், சீனர்களை ஈயக்குள அருகினுலும், மலாய்காரர்களை கிராமப்புறங்களிலும் தங்கும்படி பார்த்துக்கொண்டனர். மற்ற இனத்தவரிடம் தொடர்பில்லாததால் அவர்கள் இருக்கும் இடமே உலகம் என்று கிணற்று தவளையாகவே இருந்ததும் உண்மைதான்!
இரண்டாம் உலகப்போருக்கு பிறகுதான் சுதந்திரத்தின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் உண்ர்ந்தனர். டாத்துக் ஓன் ஜபார் மாலாயாவில் 1947-இல் பார்ட்டி கெசாத்துவான் மெலாயு என்ற கட்சியை ஆரம்பித்து மலாய் இனத்தவர்களை ஒன்று படுத்தினார். பின்னால் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் மற்றும் து ஹுஸ்ஸேன் ஓன் போன்ற தலைவர்கள் சுதந்திர தீயை அதிகப்படுத்தி ஆகஸ்ட் 31 1957-இல் மலாயாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர்.
இங்கு அவர்களின் சுத்ந்திர வெற்றியின் மிக முக்கிய ஆயுதம் ஒற்றுமை. மூவினத்தவருடைய பிறந்த ஒற்றுமையே மிக குறுகிய காலத்துலேயே சுதந்திரம் பெற வழி வகுத்தது..
ஆனால் இப்போது?
யாரின் மூலமாக சுதந்திரம் கிட்டியதோ.. அவர்களின் மூலமாகவே சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கியது.
1970-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் பொருளாதார நிலை மிகவும் வருத்தப்படும் நிலையில் இருந்தது. ஆய்வுகளில் மலேசிய பொருளாதாரத்தில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் ஆதிக்கம் தலைத்தோங்கி நிற்பது தெரிந்தது. மலாய்க்காரர்கள் இன்னமும் கிராமப்புறங்களில் சொந்த தொழில்களில் செய்து வறுமை கோட்டின் கீழேதான் இருந்தார்கள். பொருளாதாரத்தை வளர்க்க நினைத்த தலைவர்கள் முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும் என நினைத்துதான் பல உரிமைகளை பூமிபுத்ராகாரர்களுக்கு வழங்க தொடங்கினர். ஆனால், அது மற்ற இனத்தவர்களை பாதிக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள்.. அல்லது நினைக்க மறுத்துவிட்டார்களா?
New Economic Policy (NEP) தான் இந்த திட்டங்கள் செயல்படுத்த ஆரம்பித்த பாலிஸி. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக அமலப்படுத்தப்பட்டபோது பொருளாதார வளர்ச்சியும் கூடவே வளர்ந்தது. மனிதர்களுக்கு எப்போது போதும் எனும் மனம் வந்திருக்கு? வளர்ச்சி அதிகமாக்க வேண்டும் எனத்தானே நினைப்பாங்க? அதேதான் அடுத்து நடந்தது.
நாலாவது பிரதமராக பதவியேற்ற துன் டாக்டர் மஹாதிர் முகமது 1981-இல் ஆட்சிக்கு வந்தார். அவர் திறமைசாலி. நாட்டை முன்னுக்கு கொண்டு வரணும். அனைத்துலக அளவில் மலேசியா பிரசித்து பெற வேண்டும். பல சாதனைகளை மலேசியா செய்ய வேண்டும் என பல திட்டங்களை வகுத்தார். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்ய முடியாத சூழ்நிலை. அதனால் பல திட்டங்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் போட்டார். அதில் நலல் வெற்றியும் கண்டார்.
இவரால் மலேசியா பல படிகளை தாண்டி மேலே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு தலைவன் தவறு செய்தாலும், அதையும் தாண்டி பல நன்மைகள் நாட்டு மக்களுக்காக செய்தால் கண்டிப்பாக அந்த தலைவனை மக்கள் போற்றுவார்கள். அதற்க்கு உதாரணம் இவரேதான். 20 வருடங்களுக்கும் மேலாகவே இந்த மண்ணில் பிரதமராக இருந்தவர் இவர்.
நாடும் உயர்ந்தது. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள்.. எல்லாரும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள். இருந்தும் மலாய்காரர்களின் உரிமைகள் அதிகம். அரசாங்கத்தின் சலுகைகள் அவர்களுக்கு அளவுக்கு மீறியே கிடைத்தது உண்மை. இந்த சலுகைகளை வெட்டவும் முடியாது மஹாதீரினால். அவர் அப்போது அந்த உரிமையின் மேல் கை வைத்திருந்தால், அவர் எப்போதோ பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார். எல்லா நாட்டிலும் இதுதானே நடக்கிறது!!!!
ஆனால், அப்படி இவர் தூக்கப்பட்டிருந்தால் மலேசியாவால் இந்தளவு சாதிக்க முடிந்திருக்காது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல திட்டங்களின் பிள்ளையார் சுழி போட்டதும் அவரேதான். இவருக்கு பிறகு வந்தவருக்கு மஹாதிர் அளவுக்கு திறமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிரதமரால் இந்த பிரச்சனையை கவனிக்க முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நம் இனத்தவரின் தலைவர் இருக்கார் அல்லவா? அவர்தானே நம் நலன்களை பராமரிக்க வேண்டும்? நமக்கு ஏதாவது பிரச்சனையென்றால் ஓடி வந்திருக்க வேண்டும்?
மஹாதீராவது 21 வருடங்கள்தான் ஆட்சியில் இருந்தார். ஆனாலும் நம் இந்திய சமூதாயத்தின் தலைவர், மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா) தலைவர் பொதுத்துறை அமைச்சராகவும் தலைவராகவும் 28 வருடக்காலமாக இருக்கிறாரே! அவர் என்ன செய்தார்? இப்படி மாற்றங்கள் நடக்கும்போதே ஏதாவது செய்திருக்க வேண்டும். சரி, அப்போதுதான் முடியவில்லை..
இந்திய மக்களின் நலனில்தான் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார்? சரி, நல்லது செய்ய வேனாம்யா.. கெட்டதாவது செய்யாமல் இருக்கலாமே?
அரசாங்கம் ஒன்னும் செய்யவில்லை என்று சொல்வது அபத்தம். பல உதவிகளை நம் சமூதாயத்துக்கு செய்தது. மற்ற தலைவர்களை விட மஹாதீர் காலத்தில் அவர் நிறையவே செய்திருக்கிறார். 10 மில்லியன் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 9 லட்சம் ரிங்கிட் எம்.ஏ.எஸ் பங்குகள், 18 லட்சம் ரிங்கிட் எம்.ஐ.எஸ்.சி பங்குகள், 37 லட்சம் ரிங்கிட் டிவி 3 பங்குகள், 55 லட்சம் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 1 கோடி 50 லட்சம் ரிங்கிட் எம்.ஆர்.சி.பி பங்குகள் என்று பல வெவ்வேறு காலக்கட்டத்தில் இந்தியர்களுக்காக அரசாங்கம் கொடுத்த பணங்கள் எங்கே போனது? அதை முறையாக கண்காணித்து செயல்பட்டிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணிருக்கலாம்.
சரி, அரசாங்கம் கொடுத்த பணமும் போய்விட்டது. மக்கள் சேமிப்பாக மஇகா ஹோல்டிங்ஸ் ஆரம்பித்த சேமிப்பு திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் வாயக்கட்டி வயித்தக்கட்டி சம்பாரித்த பணத்தை போட்டாங்களே? முதலுக்கே மோசம் என்பதுபோல போட்ட பணமும் எங்கே என்று தெரியவில்லை.. கிடைக்க வேண்டிய வட்டி பணமும் கிடைக்க வில்லை. இப்படி அரசாங்கம் கொடுத்தப் பணமும் மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணமும் கட்சிகளும் தலைவர்களுமே முழுங்கியதில் பாமர மக்களுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை..
கடந்த வாரம் நடந்த போராட்டத்துக்கும் இதுவே காரணம்.. இவர்கள் தங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்று போராடுகிறர்களே! இதுக்கு உண்மையில் யார் காரணம்? மக்களா? தலைவர்களா? இது ஒரு உரிமை போராட்டம்தான்! ஏன்? இந்திய மக்களின் பிரநிதியிடம் இதே மனுவை கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? அவர்களுக்கு அவர்கள் வேலைகளை செய்யவே நேரம் இலலாத போது இந்த மனுவை கவனிக்கவா நேரம் இருக்க போகுது? கிடைக்கிற எல்லா நேரமும் தன் சொந்த அலுவல்களையும் மற்ற கட்சிகளுடன் சண்டைகளும் போடுவதே முழு நேர வேலையாக கொண்டவர்களுக்கு இதை கவனிக்க நேரம் இராது.
சரி, இப்போது இந்த போராட்டத்தை நடத்தியவர்களை பார்ப்போம். இவர்கள் HINDRAF (Hindhu Rights Action Force) என்று ஆரம்பித்திருக்கிறார்கள். HINDRAF எனும் பெயரில் இயங்குவதை விட INDRAF (Indian Rights Action Force) என பெயரில் இயங்கியிருந்துக்கலாம். இது ஒரு இனத்தவரின் போராட்டமாக இல்லாமல், ஒரு மதத்தினரின் போராட்டமாகவே ஆக்கபட்டுள்ளது.
இவர்களின் போராட்டம்தான் என்ன?
1- Discrimination of Indians
2- இந்தியர்களின் வறுமையை ஒழிப்பது
3- தோட்டப்புறத்து இந்தியர்களின் நலனைப் பேணுவது
4- கோவில்கள் இடிப்படுவதை தடுப்பது
5- தமிழ் பள்ளிகளின் நலன்களை பேணுவது
..... இன்றும் நிறைய..
அடுக்கிக்கொண்டே போகலாம். இது எல்லா, மலேசிய இந்தியர்களுக்கும் பொருந்தும். ஆனால், ஏன் இந்துக்களை மட்டும் ஒன்றுக்கூட்டி இந்த போராட்டத்தை நடத்த வேண்டும். கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஒற்றுமையையும் இது குலைக்க நேரிடும். எந்த ஒரு போராட்டத்துக்கும் முக்கியமான ஒன்று ஒற்றுமை. எந்த மதமும், இனமும் நம்மை விட தாழ்ந்தவர் இல்லை என்ற ஒரு எண்ணம் நமக்கு முதலில் வர வேண்டும். எல்லாரையும் சமமாக மதிக்க வேண்டிய பக்குவம் நமக்கு வர வேண்டும்.
பிறகு, என்ன பண்ண போகிறோம்? ஒரு செயலுக்கு பிறகு என்ன நடக்கும்? அதை எப்படி எதிர்க்கொள்வது? என்பதைப்பற்றியும் பல வழிகளையும் யூகித்து செயல்படுவதே சிறந்தது. அது மற்றவர்களை பாதிக்காத வாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.
பேரணியில் எட்டாயிரக்கணக்கான இந்துக்கள் கலந்துக்கொண்டனர். இதில் முதல் தவறு கண்டிப்பாக அரசாங்கத்தை சான்றது. மனு கொடுப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பதும் அதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கோறியபோது கொடுத்திருந்தால் எல்லாம் சுபமாக நடந்திருக்கும். பேரணியை அனுமதிக்காததுனால் இந்த குழுவிற்கு அரசாங்கத்தின் மேல் மேலும் கோபங்கள் அனுமதித்தது.
சட்டவிரோதமென்று தெரிந்தும் மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டது நம் இந்துக்களின் தவறு. கஷ்டங்கள் யாருக்கு? அடியும், ஜெயிலும், ராசாயண தண்ணீரினால் மூச்சடைப்பும், வாந்தியும், இன்னும் பல கஷ்டங்களும் நமக்கே! சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கோர்ட் கேஸ் என்று அழைபவர்கள் யார்?
அழகாய் இருந்த பூமியில் கலவரம் என்று அனைத்துலக மேடையில் நம் மலேசிய மானம்தான் கப்பலேறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால் புதிதாக ஆரம்பிக்கபோகிற பிரச்சனை என்ன தெரியுமா? வெளிநாட்டவர் நம் நாட்டில் முதலீடு செய்ய பயப்படுவர். தன் பங்குகளை திரும்ப பெற்றுக்கொள்வர். நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். Inflation ஏற்ப்படும். Inflation ஏற்ப்பட்டால் மக்களாகிய நம்மைத்தான் அது பாதிக்கும். 1997-இல் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடி திரும்ப உதிக்கும்.
இப்படி வரப்போகும் பாதிப்புக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு ஒரே வழி. நம் இனத்தலைவர்கள் இறங்கி வந்து இந்த கோறிக்கைகளை கேட்டு தெளிவு படுத்த வேண்டும். அரசாங்கம் ஒரு ஹாட்லைன் (Hotline) ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், இது நம் இந்திய தலைவர்களிடமே கொடுக்கப்படுவதை கேட்டதும் மனதில் ஒரு அச்சம். திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறி விடுமோ! எவ்வளவு நாள் இது சரியாக பேணப்படும்?
இந்த விவகாரம் பல நாடுகளுக்கு தெரிய வந்தபோது, உதவ முன் வந்தது தமிழ்நாடு. உண்மையில் அந்த உதவி தேவையில்லைதான். உள்நாட்டு பிரச்சனை சுபமாக தீர்த்துவைக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. இதில் மற்ற நாடுகள் தலையிடுவது லேசாக புகைந்துக்கொண்டிருப்பதை தீக்காடாக மாற்றக்கூடும்.
தமிழ்நாட்டின் உதவும் மனப்பான்மை போற்றக்கூடியதே! ஆனால், அந்த உதவி தேவைபடாது என்று நல்ல படியாக சொல்லியிருக்கலாம் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசீஸ். "Nothing to do with TamilNadu" என்று முகத்தில் அடித்த மாதிரி பேசியது அவரின் தவறு. இரு நாட்டினருக்கும் நல்ல புரிந்துணர்வை இவரின் வார்த்தைகள் புண்பட செய்திருக்கும்.
ஆனால் TBCD சொல்லியபடி:
"இந்த தடைகளையும் மீறி இந்த தலைமுறையினர் சிலர் வளர்ந்திருக்கிறார்கள் என்றால், அது அவர்களின், தனிப்பட்ட கடும் உழைப்பு, முனைப்பு. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்."
என்ற வரிகள் முற்றிலும் உண்மை. சம்பாதிப்பதுக்கும், சுகமாக வாழ்வதுக்கும் மலேசியா ஒரு சிறந்த நாடு. இங்கே வாழ முடியவில்லை என்று சொன்னால் எந்த நாட்டிலும் வாழ முடியாது..
இதை உணர்ந்தால் எல்லார் வாழ்விலும் ஒளிமயமான எதிர்க்காலத்தை காணலாம்.
Posted by MyFriend at 9:57 PM 35 comments
Wednesday, November 07, 2007
குமரனுடன் சில நிமிடங்கள்...
ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..
போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தபோது அந்த குரல் என் பக்கத்தில் ஒளித்தது.
இதில் என்ன அப்படி ஆச்சர்யம்.. திகைப்புன்னு நீங்க கேட்கலாம் (கேட்காட்டினாலும் நாங்க சொல்லுவோம்ல.. ) வேலைக்காக நான் தினமும் மலேசியாவின் தலைநகரம் (சுந்தர் சி நடிச்ச படமில்லைங்க) குவாலா லும்புருக்கு பயணம் செய்வேன். எனது பிரயாணத்தில் தினமும் பல நூறு பேரை சந்திக்கிறேன். அதில் பலர் இந்தியர்கள் அல்லது மலேசிய தமிழர்கள் ஆவர்.
இதில் பாதி பேருக்கு தமிழே தெரியாது. மீதி உள்ளவர்களுக்கு தமிழ் தெரிந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுவாங்க. எல்லாம் ஸ்டைலும் வெட்கமும்தான் காரணம். நம் தாய் மொழியில் பேச எதற்க்கு வெட்கம் என்று நானே சிலரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்.
நானே தமிழில் புலவி என்றெல்லாம் சொல்ல வரலைங்க. எனக்கு இருக்கும் தமிழ் அறிவும் கொஞ்சம் கொஞ்சம்தான். நான் தமிழ் பேசும்போதே என்னையும் அறியாமல் மலாயும் ஆங்கிலமும் கலந்து வரும். முடிந்தவரை அப்படி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சரி, சொல்ல வந்த விஷயம் வேற.. இப்போ வேற எதையோ பேசிட்டு இருக்கேன் பாருங்க..
கே.எல் பட்டணத்தில் இப்படி தமிழில் பேசி நான் கேட்பது ரொம்ப அபூர்வம்தான். அதுவும் சுத்த தமிழில் அழகாய் ஒரு சின்ன பையனின் குரலில் கேட்டபோது ஒரு வித பூரிப்பும் மகிழ்ச்சியும் கூடி வந்தது. அந்த சந்தோஷம் மிக விரைவிலேயே அழிந்தது.
அந்த குரலை கேட்டு நான் திரும்பியபோது ஒரு 12-13 வயது தமிழ்ப்பையன் கையில் ஒரு சின்ன மூட்டையுடன் என்னைப்பார்த்து நின்றிருந்தான். அரைக்கால் சிலுவாருடன் ஆங்காங்கே கிழிந்த இடத்தில் ஒட்டுப்பட்ட சட்டை அணிந்திருந்தான். பழைய உடை என்றாலும் அது சுத்தமாக இருப்பதை பார்த்ததுமே அவன் மேல் ஒரு மரியாதை வந்தது. போட்டிருப்பது புதியதா பழையதா என்பதை பார்ப்பதைவிட அதை எப்படி பாதுக்காக்கிறார்கள் என்பதுதானே சிறந்த் விஷயம்?
"என்ன தம்பி?" நான் வாயை திறந்தேன். வார்த்தையிலேயே பரிவும் சேர்ந்து தம்பி என்ற பாசமும் ஒட்டிக்கொண்டது.
"அக்கா, நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்க்கா. வீட்டுல ரொம்ப கஷ்டம். நான் படிக்கணும். அதுக்கு பணமில்லை" என்றூ சொல்லிக்கொண்டே தன் மூட்டையில் கை விட்டான்..
இவன் பிச்சை எடுக்கும் எண்ணம் கொண்டவன் இல்லை என்பது தெளிவாக புரிந்தது எனக்கு. மனதில் தன்னம்பிக்கையும் நிறைய இருப்பதும் ஓரளவு அவன் முகத்தில் என்னால் கண்டறிய முடிந்தது. அந்த மூட்டையிலிருந்து ஒரு பொருளை எடுத்து காட்டினான்.
"அக்கா, இது நானே செதுக்கியது. Candle Stand. பாருங்க. பிடிச்சிருந்தா வாங்குங்க. RM10தான். என் படிப்புக்கு உதவியா இருக்கும்" என என் கிட்டே நீட்டினான்.
அதை நான் வாங்கிப்பார்த்தேன். சொந்தமாக செய்த வேலைப்பாடு தெரிந்தது. அந்த பையன் உண்மையிலேயே டேலண்டட். ரொம்ப அழகாய் செதுக்கப்படிருந்தது. ஆனால், அது எனக்கு பயன்படாது என்று தோன்றியது.
"தம்பி, எனக்கிது தேவைப்படாதுப்பா. பரவாயில்லை.. இந்த 10 வெள்ளியை வச்சுக்கோ. அக்காவுடைய கிஃப்ட்டா இருக்கட்டும்."
"வேணாம்க்கா." என்று கொஞ்சம் தயங்கினான்.
நான் வற்ப்புறுத்தி அவனின் சட்டை பாக்கேட்டில் திணித்தேன்.
அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,
"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"
அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
"தம்பி உன் பேர் என்னப்பா? என்ன படிக்கிறே?"
"அக்கா, என் பேரு குமரன். ஆறாம் வகுப்பு படிக்கிறேன்."
"படிச்சு பெரிய ஆள் ஆனதும் என்னவா ஆகப்போற?"
"நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.
"வீட்டுல எத்தனை பேரு? அம்ம அப்பா என்ன பண்றாங்க?"
"எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. இப்போதான் 7 வயசு. அப்பா இருக்கிற வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்டாரு. அம்மாதான் ஆங்க்கங்கே வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து என்னை படிக்க வச்சாங்க. இப்போ அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. வேலைக்கு போய் 1 வாரம் ஆச்சு. அதான் இப்போ நானும் வேலைக்கு போறேன்க்கா" அந்த சிறூவன் சொல்லும்போதே கண்ணில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.
"அக்கா. இன்னைக்கு நிறைய பேர் இந்த ஏரியாவுக்கு வந்திருக்காங்க. எல்லாரும் தீபாவளி ஷாப்பிங் வந்திருக்காங்க. அவங்க கிட்டேயும் நான் என் பொருளை விற்கணும்க்கா. நான் கிளம்புரேண்க்கா. ரொம்ப நன்றி" என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய மூட்டையை கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடந்து போவதையும், அங்கு ஷாப்பிங் செய்துக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசுவதையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் அவனிடம் பரிவுடன் பேசுவதும் சிலர் அவனை விரட்டுவதுமாய் இருந்தாலும் மான்ம் தளராமல் அடுத்தவர்களை சந்தித்தான் குமரன்.
"அண்ணே, அவன் சாதிப்பான் ஒரு நாள்.." என்று என் பக்கத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு புத்த்கங்கள் வாங்கிவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.
வழியில் ஒரு அம்மா ஓரத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. கையில் குமரன் காட்டிய அந்த மெழுகுவர்த்தி சிலை வத்திருந்தார். உடம்பு சரியில்லாமல் இருப்பது அவர் முகம் காட்டிக்கொடுத்தது. நான் என் நடையை தொடர்ந்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென்று திரும்பி பார்த்தேன். குமரன் அந்த அம்மாவை எழுந்திரிக்க உதவி செய்து ரெண்டு பேரும் ஒன்றாய் நடந்து போனார்கள். அவர்தான் குமரன் சொல்லிய அவர் நோய்வாய்ப்பட்ட அம்மாவாக இருக்குமோ என்று தோணியது.
திரும்பி அந்த சாலை முழுவதும் பார்த்தேன். பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை குதூகலமாக சந்தோஷத்துடன் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் சந்தோஷமாய் புத்தாடையுடன், நல்ல உணவுடன் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடபோகிறோம். ஆனால், இப்படியும் சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனரே! அவர்களுக்கு இந்த மாதிரி தீபாவளி, பொங்கல் என்ற விழாக்கள் எப்படி இருக்குமோ! atleast ஒரு வேளை உணவாவது வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடும்படி அமையுமா?
நண்பர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....
Posted by MyFriend at 10:02 AM 67 comments
Labels: கதை, கொண்டாட்டம், சமூகம்
Monday, November 05, 2007
தேர்தல்: அவசரம் தேவையா?
ரம்ஜான் மாதத்திலிருந்தே அதிகம் பேசப்படும் மூன்று தலைப்புகள்: சிறப்பாக கொண்டாடப்படும் ஹரி ராயா, சாலை விபத்து மற்றும் தேர்தல் எப்போது?. முதல் இரண்டு தலைப்புகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வந்தாலும், மூன்றாவது தலைப்பு இன்னும் அதிகமாக சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
நிறைய பேர் தேர்தல் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று கணித்திருக்கிறார்கள். சிலர் நவம்பர் ஆரம்பத்தில் என்றும் சிலர் ஏப்ரல் 2008-க்குள் என கணிக்கத்தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த கணிப்புக்கு காரணம், தேர்தல் ஏப்ரல் 2008-க்கு பிறகு நடந்தால் அன்வார் இப்ராஹிம் போட்டியில் கலந்துக்கொள்ள முடியுமே!
தேர்தல் சீக்கிரமாய் நடக்க இது ஒரு காரணம் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்த எனக்கு இப்போது பல வேறு காரணங்களும் இதுக்கு காரணமாய் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது என்பது என் கருத்து.
அடுத்த தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு 21 மார்ச் 2009 வரை காலக்கெடு இருக்கின்றது. தேற்தல் என்பது 5 வருடத்துக்கு ஒரு முறை நடக்கும். அரசாங்கத்துக்கு அந்த 5 வருடமும் பவர் இருந்தாலும் 36 மாதங்களுக்கு பிறகு எப்போது வேண்டும்னாலும் பார்லிமெண்டை கலைக்கலாம். மக்களும் எப்போது அடுத்த தேர்தல் வரப்போகிறது என்று ஆரவம் காப்பார்கள். ஏனென்றால், வயதான மக்கள் பிரநிதி அடுத்த தேர்தலில் தேர்வு பெறவில்லையென்றாலும் தோற்றுப்போனாலும் அவருக்கு பென்சேன் (pencen) கிடைக்கும்.
பார்லிமெண்ட் கலைக்கப்படும் தேதியை அதிக ஆர்வத்துடன் காத்திருப்பவர்கள் கண்டிப்பாக எதிர் கட்சிகள்தான். அவர்களே பல கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இவர்களைத் தவிர்த்து அரசியல் கண்காணிப்பாளர்களும் பல வகை கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இந்த தடவையின் பார்லிமெண்ட் கலைப்பும் வெகு விரைவில் தேர்தலும் நடத்த பல காரணங்களை அடுக்கலாம்.
முதலாவதாக, அன்வார் இப்ராஹிம் தேர்தலில் கலந்துக்கொள்ள முடியாமல் இருக்க தடுக்க. காரணம் அவருடைய அளிக்கப்பட்ட அரசியல் தடா ஆர்டர் ஏப்ரல் 2008-உடன் முடிவுக்கு வருகிறது.
இரண்டாவது, பொருட்களின் விலையேற்றத்தினாலும், லஞ்சத்தினாலும், தப்பாக உபயோகிக்கப்பட்ட பவர்ன்னாலும் அரசாங்கத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத சில பிரச்சனைகள். மூன்றாவது, கடந்த பட்ஜெட் (budget) அறிவிப்பில் அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வு கொடுத்ததில் மக்கள் கண்டிப்பாக அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை. நான்காவது, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ரிங்கிட் மதிப்பெண் அதிகரித்ததும் மக்களின் மனதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது பெட்ரோல் எண்ணை விலையேற்றம் ஒரு முக்கிய காரணம். தேர்தல் நடக்காத வரை பெட்ரோலின் விலையை அனைத்துலக விலைக்கு ஏற்றாற்ப்போல் ஏற்றமுடியாது. இது மக்களுக்கு அதிருப்தி கொண்டுவருமே!
இந்த காரணங்களினால் தேர்தல் அறிவிப்பு கூடிய சீக்கிரமாய் வெளியாகும் என எதிப்பார்க்கப்பட்டும் எதிர்க்கட்சி கணித்தபடி நவம்பரில் தேர்தல் நடக்காததும் சில குழப்பங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்து கணிக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி - மார்ச்) நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என்னைப் பொருத்த வரையில் தேர்தலுக்கு அவசரப்படுத்துவது தேவையில்லாத ஒன்று. அடுத்த தேர்தலின் அவசரத்துக்கு மூலக்காரணம் அன்வார்தான் என்றால், தேர்தலை அவசரப்படுத்துவது சரியா? அன்வாரின் அரசியல் மறுப்பிரவேசத்தில் பலருக்கு இருக்கும் பயம் ஏனென்று எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த வருடம் பங்காலான் பாசிர், கிளாந்தானிலும் ஈஜோக், சிலாங்கூரிலும் நடந்த தேர்தலுக்கு அந்த மக்கள் பிரநிதிக்காக பிரசாரம் செய்தது அன்வார்தனே? கிளாந்தான் மாநிலத்தையே கைக்குள் போட்டு ஆளும் PAS கட்சிக்கூட அந்த தேர்தலில் ஆபார தோல்வியையே சந்தித்தது என்பதுதானே மறைக்கமுடியாத உண்மை!
பாரிசான் நேஷனல் (ஆளும் கட்சி) தங்களுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்திருக்கிறோம் என நினைத்தால் இப்படி தனி ஒரு நபருக்காக பயப்படத் தேவையில்லையே! 1999-ஆவது வருடத்தில் எதிர்க்கட்சிகள் அன்வாரின் இமேஜை பயன் படுத்தி ஓட்டு வாங்கினார்கள் என்பது நாமெல்லாம் அறிவோம். ஆனால் காலம் இப்போது நிறைய மாறியிருக்கிறது. ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்த அன்வாரிடமே பல மாறுதல்கள் இருக்கிறதே!
கெ-அடிலான் கட்சி என்ற பெயரையே மக்கள் கெ-அடிலான் கட்சி என்ற பெயர் மாற்றம் செய்ததே ஒரு வியக்கத்தக்க செயல் ஆச்சே! ஆதலால்; அடுத்த தேர்தலில் போட்டியிட போறேனா இல்லையா என்பதை அன்வாரே முடிவு பண்ணட்டுமே! டெமோக்ராஸியில் வாழும் நாம் யாரையும் நாம் நினைத்தபடி ஆட்டி வைக்காமல், அவர்களுக்கு எது தேவையோ அதை செய்யட்டுமே!
ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!
தேர்தல் ஆணைய குழுவும் இருக்கின்ற இந்த நேரங்களை பயன்படுத்தி தேவையான ஆரய்ச்சிகளை செய்து எது தேவை எது தேவையில்லை என்று முடிவு செய்து ஒரு நல்ல நியாயமான தேர்தலை வழங்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில் எதிர்கட்சிகள் அரசாங்கத்துக்கு ஒரு போட்டியாகவே கருத முடியாது. என் கண்ணோட்டத்தில் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்று சேரவில்லையே. அவர்களுக்குள்ளேயே பல கலப்புகள் நிகழ்ந்த படிதானே இருக்கின்றது.
ஆதலால், இந்த காலக்கட்டத்தை ஆளும் கட்சி சரியாக பயன்படுத்தி மக்க்ளுக்கு தன் சேவையை தொடர்வதுதான் சிறந்தது. மக்கள் பிரநிதிகள் தன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து முடிக்க விடுங்கள். இதுவே அடுத்த தேர்தலில் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க மக்கள் யோசிக்கும் காலமாக அமையும்.
Posted by MyFriend at 8:29 PM 25 comments
Tuesday, October 02, 2007
நூரினின் மரணம்.. யாருடைய தவறு?
எட்டு வயதே நிரம்பிய நூரின் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. அழகானவள்; இரண்டாவது வகுப்பு படிக்கும் அவள் படிப்பிலும் சுட்டி. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை வேளையில் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரவு சந்தைக்கு போயிட்டு வர்றேன் அம்மா என்று போனவள் திரும்ப வீடு திரும்பவே இல்லை. பதறிப்போன பெற்றோர்கள் பக்கத்திலுள்ள எல்லா இடத்திலும் தேடிவிட்டு காவல் நிலையத்திலும் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.
ஒரு மாதம் ஆகியும் ஒரு தகவலும் இல்லை. ஆனாலும், தங்கள் தேடும் முயற்சியை கைவிடாமல் நாடு முழுதும் தேடினார்கள். இணையம், ஈமெயிலில் கூட தன் மகளை காணவில்லை என்று புகைப்படத்துடன் அனுப்பினார்கள். பட்டி தொட்டிகளிலும் அவளைப்பற்றியே தகவல்கள் இருந்ததால், அவளை யாராவது எங்கே பார்த்திருந்தாலும் அவள் சுலபமாக கண்டுபிடிக்கும் படியாக எல்லாரும் அவளைப்பற்றியே கவலைப்பட்டு தேடிக்கொண்டிருந்தார்கள்.
பின்னர் செப்டம்பர் மாதம் ஒரு நாளில் பெட்டாலிங் ஜெயா கடை வீதி பகுதியில் ஒரு கடையின் முன்னால் ஒரு கனமான ஸ்போர்ட்ஸ் பேக் இருப்பதை அந்த கடை உரிமையாளர் திறந்து பார்த்த பொழுது ஒரு பெரிய அதிர்ச்சி! பெட்டிக்குள்ளே ஒரு சிறுமியின் பிணம். உடனே காவல் நிலையத்துக்கு தகவல் சொன்னார்.
நூரினின் பெற்றோர்கள் அடையாளம் காண அழைக்கப்பட்டனர். எல்லாரும் அந்த உயிரற்ற சிறுமி நூரினாய் இருக்க கூடாதென்று வேண்டிக்கொண்டிருந்தனர். "இவள் என் மகள் இல்ல. என் மகளுக்கு உள்ள ஒவ்வொரு அடையாளமும் நான் அறிவேன்" என்று அவள் தந்தை உறுதியாக சொல்ல டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை பாசிட்டிவ்வாக அமைய, காவல்துறை நூரினின் காணவில்லை கேஸை மூட முட்ப்பட்டனர். ஆனால், நூரின் குடும்பத்தினர் மறுப்பு சொல்ல இரண்டாவது டி.என்.ஏ பரிசோதனை ஏற்ப்பாடு பண்ணப்பட்டது. நூரினின் சகோதரிகளின் ரத்தத்தையும் எடுத்து பரிசோதித்து அவள் நூரினேதான் என்று மருத்துவ வட்டாரம் கூறியது.பல இன்னல்களுக்கு பிறகு அவளை நல்ல படியாக அடக்கமும் செய்தாயிற்று!
பலரும் அந்த சிறுமிக்காக கண் கலன்கினர். என்னையும் சேர்த்து! ஆனால், இந்த சிறுமியின் மரணம் என்பது யார் செய்த தவறு? யாரின் கவனக்குறைவு?
எட்டு வயது சிறுமி அவள் தனியே வெளியே போனது குற்றமா? இதுதான் குற்றம் என்று பார்த்தால் எந்த சிறுவர்களும் காலையில் 6-7 மணிக்கு எழுந்து தனியே பள்ளிக்கு நடந்து செல்ல முடியுமா?
பெற்றோர்களின் கவனக்குறைவா? தன்னோட மூன்று பிள்ளைகளின் பாதுக்காப்பை கவனிக்க தவறிட்டார் என்று இவர்களை கைக்காட்டுவது சரியா?
அந்த சிறுமியை ஒரு வெள்ளை வேனில் கடத்துவதை பார்த்த பொதுமக்கள் ஒன்னும் செய்யாமலிருந்தாங்களே! அவர்களின் சமுதாய அக்கறைதான் என்ன?
மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தபோது சரியான/ தீவிரமான நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையின் குற்றமா?
அவளை கண்டுபிடித்து 2 வாரங்கள் ஆகிறதே. இன்னும் சந்தேகப்பேரில் பிடித்து வைத்திருக்கிற அந்த நால்வரும்தான் குற்றம் புரிந்தவர்களா? டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு இவர்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டுவிட்டனரே?
இது வரைதான் காவல்துறையின் திறமையா?
சரி, மினிஸ்டர் என்ன சொல்றார் என்று பார்த்தால், அவரின் கருத்து என்ன தெரியுமா? "பெற்றோர் அவர்களின் மகளை சரியாக கவனிக்காததால்தான் மகள் கடத்தப்பட்டாள். அதனால் இவர்கள் மேல் ஒரு புகார் பதிவு அரசு தரப்பினர் செய்ய வேண்டும்" என்றூ சொல்கிறார்.
அப்படி என்றால் அரசாங்கம் மட்டும் பொது மக்களுக்கு முழு பாதுக்காப்பு வழங்கியுள்ளதா என்று கேட்டால் அதுக்கு அரசாங்கம் பேந்த பேந்த முளிக்க முடியுமே தவிர வேறெதுவும் சொல்ல இயலாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வங்ஸா மாஜு LRT பக்கத்தில் ஒரு இளம் மலாய் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாளே! அது அந்த ஏரியாதானே! அப்போதிலிருந்தே அந்த இடத்தில் இரண்டு காவலாளிகளை நியமித்தார்களே! ஏன் இப்போது இல்லை?
இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், தவறு செய்தவர்கள் என்றும் அவர்களின் தப்பை ஒற்றுக்கொண்டதில்லை. அடுத்தவ்ரின் மேல் கைக்காட்டி தப்பித்துக்கொண்டேதான் இருக்கின்றனர். க்ரம் செய்தவர் நிம்மதியாக வெளியில் நடமாடுகின்றனர்..... என்ன உலகமடா சாமி!!!!!
Posted by MyFriend at 5:37 PM 14 comments


