"பெண் புத்தி பின் புத்தி.."
"பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா?"
இப்படியெல்லாம் கேட்டு அடுப்பறையில் அடங்கிய பெண்கள் எனும் காலம் மாறி ஆண்களுக்கு நிகராக ஒவ்வொரு துறையிலும் சாதித்து காட்டுகிறார்கள்.
நேரு, காந்திக்கு நிகரா இந்திரா காந்தி அரசியலில் சாதனை படைத்தார்..
அண்ட்ரி அகாஸ்ஸியை (Andre Agassi) விட பிரமாதமாய் டென்னிஸ் விளையாடினார் ஸ்டெஃபி க்ராஃப் (Steffi Graph)..
கமர்ஷியல் உலகத்தை அப்பாற்ப்பட்ட உலகமான ஆன்மீகத்திலும் சமூக சேவைகளிலும் இவர்களது பணி பிந்தங்கவில்லை. அன்னை தெரசா, சாரதா தேவியைபோல் இன்னமும் ஒருவாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள்..
ஆனால், இதைதான் விரும்புகிறதா இந்த உலகம்? சாதிக்க துடிக்கும் எத்தனை பேருக்கு இந்த உலகம் முட்டுக் கட்டையாக இருக்கிறது? புன்னகை தேசம் படத்தில் ஒரு வசனம்.
"நாம் அந்த அலைகளை கடற்கரைலிருந்து பார்க்கிறோம். ஆனால், இந்த இளைஞர்கள் (பெண்கள்) அதில் குதித்து நீந்துகிறார்கள். அவர்கள் ஏறும் ஏணியை நாம் கீழே இருந்து கெட்டியா பிடித்தாலே, அந்த நம்பிக்கையில் அவர்கள் உச்சத்தை தொடுவார்கள். ஏன் நாம் அந்த ஏணியை ஆட்டி விட வேண்டும்?" : இது இளைஞர்களுக்கு மட்டும் பொருந்தும் ஒரு வசனங்கள் அல்ல. பெண்களுக்கும் இது தகும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் யாராவது ஒருவர் ஆதரவு கொடுத்தால், இவர்கள் கண்டிப்பாக சாதிப்பார்கள். இதனால், ஆதரவு இல்லையென்றால் இவர்கள் சாதிக்க மாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியும் சிலர் சாதித்திருப்பார்கள். ஆனால் ஆதரவு இருந்தால், இவர்கள் அந்த சாதனையை வெகு சீக்கிரமாகவே செய்துவிடுவார்கள்.
இப்படி உலகமெங்கும் சாதித்த பலரை நாம் அறிந்திருப்போம். இன்றைய நாளில் நான் ஒரு பெண்மணியை இங்கே அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இவர் பெயர் வனஜா.

இவர் 1971-ஆம் ஆண்டில் கூலிமில் பிறந்தவர். படிப்பிலும் விளையாட்டிலும் சிறு வயதிலிருந்தே அதிக ஆர்வம் காட்டியவர். பெண்ணுக்கும் ஆணுக்கும் வித்தியாசம் என்ன என்று கேட்டவர். சின்ன வயதிலேயே தன் அண்ணன்களுடனும் அண்ணனின் நண்பர்களுடனும் அவர் ஊரில் பந்து விளையாடியவர். அந்த சின்னஞ்சிறு வயதிலேயே ஆண்கள் எதை செய்தாலும், அவை தன்னாலும் செய்யமுடியும் என்று முயற்சி செய்தவர். பலர் "நீ பொண்ணு. அடக்க ஒடுக்கமாய் இரு!"ன்னு தடுத்தனர். அவர் குடும்பமே தடுத்தும் இருகின்றனர். ஆனால், நாளடைவில் இவரது ஆர்வத்தை பார்த்து இவர் குடும்பம் அவருக்கு முழு ஆதரவும் தந்தது.
எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றார். இவரது கனவு உலகம் சுற்ற வேண்டும் என்பதே! இவர் விமானியாக வேண்டும் கனவு கண்டார். அப்பொழுது இருந்த சூழ்நிலையில், அவரது குடும்பம் இவரது படிப்பிற்க்காக அதிக செலவு செய்ய முடியாததால், பொறியியல் துறையில் தன் மேல்கல்வியை தொடர்ந்தார். மலாயா பழ்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியியலாளராய் சேர்ந்தார்.
ஆனாலும், அவர் எப்போதும் போல விளையாட்டிலும், மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தினார். பல பயிற்சிகளை மேற்க்கொண்டார்.
2003-ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் ரஷ்யா விண்வெளி ப்ராஜெக்ட் 2007 (Russian Space Project 2007)-இல் ஒரு மலேசியரை விண்வெளிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. மலேசியா இனிமேல் ஒரு விண்வெளி ஆராய்ச்சி கழகம் உருவாக்கி, விண்வெளிக்கு போகுவதற்கு இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். ஒருவராவது இதில் கலந்துக் கொண்டால், அது மலேசியாவுக்கு ஒரு பலமாக அமையுமென முடிவெடுத்து மலேசியர்களுக்கு அறிவித்தது.
கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 11 275. ஒவ்வொரு தேர்வுக்கு பிறகும் இந்த எண்ணிக்கை குறுக குறுக.. 62 பேர் ஆகியது. அதில் இரண்டே பெண்கள். ஒருவர் வனஜா. இன்னொருவர் ஒரு மலாய்க்கார பெண்மணி.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல தேர்வுகளுக்கு பிறகு 8 பேரே தேர்வு செய்யப்பட்டனர். இதில் வனஜா ஒருவரே பெண். விமானியாகி ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்று கனவு காண்டவர், இப்போது அதையும் தாண்டி இன்னும் மேலே பறக்க வேண்டும் என்ற வெறி. அதுவே 10 000 பேரையும் தாண்டி இந்த 8 பேரில் ஒருவராய் வர முடிந்தது.
மற்றவர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி இது வரையிலும் வந்த பிறகுதான் அனைவரின் கண்களும் இவர் மேல் பட்டது.அந்த பதினாறு பேரில் ஒரே தமிழராய் இருந்தார். அது நம் சமூகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாய் எல்லாரும் அவரை பாராட்டினர். பிறகுதான் அவர் அந்த நிலமைக்கு வர காரணங்களும் அவர் பட்ட கஷ்டங்களும் தெரிய வந்தது.
ஒரு விண்வெளி ஆராய்சியாளராய் ஆவது சுலபமல்ல. அதுவும் முதல் மலேசிய விண்வெளியாளராய் ஆவதென்றால் பல நூறு இன்னல்களை தாங்கவேண்டும்.. அவர் கடந்த பல தடைகளில் சில: 
அந்த 18 பேருக்கும் கடுமையான பயிற்சிகள் (Survival Training) லூமூட்டில் வழங்கப்பட்டன. இது தொடர்ந்து 35 மணி நேரம் நடந்தது. மீதி 7 ஆண்கள். ஆனதால், இவர் தான் ஒரு பெண் என்றும், அதற்கு தனியாக சில சிறப்பு வசதிகள் வேண்டும் என்றும் அவர் கேட்கவில்லை. விண்வெளியில் எல்லாருமே சமம்தான். இதுவே செய்ய முடியவில்லையென்றால் எங்கு போய் என்ன செய்யமுடியும் என்று மனதுக்குள் நினைத்து, ஆண்கள் என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாவற்றையும் தானும் செய்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
முதல் நான்கு மணி நேரம் (விடியற்காலையில்) குழு விவாதம் நடைப்பெற்றது. கூடவே தூக்கமின்மான்மையை தாங்கும் சக்தி இவர்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்ற ஒரு சோதனையும் செய்தார்கள். பிறகு இவர்களை ஒரு வேகமாய் செல்லும் கப்பல் (speed boat)-இல் நடு கடலுக்கு கொண்டு சென்றனர். கப்பல் வேகமாய் சென்றுக் கொண்டிருக்கும்போது இவர்களை கடலில் குதிக்கச் சொன்னனர். கப்பல் வேகமாய் சென்றுக்கொண்டிருக்கும்போது கடல் அலைகள் இரண்டு பக்கமும் பிளந்து கொண்டு போகும். அப்போது நாம் கடலில் குதிப்பது ஒரு ஆபத்தான தருணம். இவரும் மற்றவர்களைப்போல் (சிலர் குதிக்க பயப்பட்டனர் என்று இங்கே சொல்லியே ஆகவேண்டும்) குதித்து கடலில் மிதந்து, கடலில் கவிழ்ந்து கிடக்கும் படகை நேராய் நிமிர்த்தி, அதில் ஏறி கடற்கரையை அடைய வேண்டும். பிறகு தன் உடைகளை மாற்றி (மரத்துக்கு பின்னால், இவர் ஒருவரே அங்கே பெண். இவர் மட்டும் அறையில் சென்று மாற்றிக்கொண்டு வந்தாரானால் நேரம் விரயமாகும் என்பதால்), காடு கண்கானித்து (Jungle Tracking) சென்று (திசைமானியும் வரைப்படம் துணையுடன் மட்டும்) மாலை 6 மணிக்கு ஓரிடத்தில் முகாமிட்டனர். ஒரு 20 நிமிட ஓய்வுக்கு பிறகு, இவர்களை ஒரு வண்டியில் ஏற்றி ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அங்கே இருந்து ஒரு 30 நிமிடங்கள் நடந்தார்கள். அது ஒரு செம்பனைத் தோட்டம். அப்போது மணி இரவு 11.
செம்பனைத்தோட்டத்தில் பாம்புகள் நிறையவே இருக்கும். அதுவும் சில செம்பனைத் தோட்டங்கள் காடுகளுக்கு பக்கத்தில் இருக்கும். அதில் பாம்புகளைத் தவிர்த்து மற்ற பயங்கர காட்டு விளங்குகளும் அதிகம் இருக்கும். அங்கே சாலை விளக்குகள் இருக்காது. ஒரே கும்மிருட்டு. பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. இவரை அந்த கரடு முரடான இடத்தில் படுக்கச்சொன்னார்கள். சில நிமிடங்களில் இவர் யாரோ குறட்டை விடுவது போல குரல் கேட்டது. அப்போதுதான் பக்கத்தில் யாரோ படுத்திருக்கிறார்கள் என்று அவாரல் உணரவே முடிந்தது. யாரோ அவர்களை சுற்றி சுற்றி நடப்பது அவரால் அறிய முடிந்தது.
அந்த இரவு குளிரில் அவர் நடுங்க ஆரம்பித்த போது இவர் கையை ஒருவர் பிடித்து இழுத்து ஒருவர் முன் கொண்டு சென்று விட்டார். ஒரு உருவம் வெள்ளையில் போர்த்தியபடி அங்கே உட்கார்ந்திருந்தது. அவர் இவர் முகத்தில் புனித நீரை தெளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நபர் இவர் கையை பிடித்து கூட்டிக்கிட்டு போய் ஒரு கயிறில் இவர் கையை வைத்தார். அந்த கயிறை பிடித்து சொந்தமாக செல்ல சொல்லி அவர் கட்டளையிட்டார்.
அந்த கயிறே அப்போழுது அவருடைய வாழ்க்கை.. அந்த இருட்டில் இருந்த ஒரே வெள்ளை புருள் அந்த கயிறு மட்டுமே! அதை தவிர்த்து வேறெதுவும் அவர் கண்களுக்கு தெரியவே இல்லை. நடந்தார்.. நடந்தார்.. நடந்துக்கொண்டே இருந்தார். அங்கே ஒரு உருவம் படுக்கவைக்கப்படிருந்தது. அந்த உருவம் தலை முதல் கால் வரை முழுவதுமாக ஒரு வெள்ளை துணியில் (மலாயில் இதை காயின் காப்பான் (Kain Kapan) என்று சொல்வார்கள்) சுற்றப்பட்டிருந்தது. இஸ்லாமியர்கள் இறந்தால், அவர்களின் உடலை இப்படித்தான் கட்டுவார்கள். இவர் அதன் பக்கத்தில் போனார். அந்த பிணத்தின் மேல் ஒரு காகிதமும் ஒரு பேனாவும் இருந்தது. அதில் அவர் பெயரை எழுத சொல்லி இருந்தது.
சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தார். அவர் கண்களில் பட்ட பொருள்கள் அந்த கயிறும், அந்த பிணமும் மட்டும்தான். ஒரு கையில் அந்த கயிறை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் அவர் பெயரை எழுதினார். அவர் தனது இரண்டாவது "A" எழுதும்போது அவர் தடுமாறி அந்த எழுத்தும் கிறுக்கலைப்போல் ஆனது. ஒரு பிணத்துடன் மட்டுமே அவர் இருப்பதால் ஒரு பயம்தான் காரணம். பிறகு அதே கயிறை பிடித்து நடக்க ஆரம்பித்தார்.
திடீரென்று அவரது கால் மூழ்க ஆரம்பித்தது. முட்டிவரை மூழ்கிவிட்டது. அது ஒரு சதுப்பு நிலம். அந்த கயிறு ஒவ்வொரு தடைகள் இருக்குமிடமும் ஒரு சுறுக்கமிடப்பட்டிருந்தது. அங்கேதான் இவர் பாறை மேலிருந்து விழுந்தார்; இரண்டு முறை அவர் காலணிகளை தொலைத்தார்; அவர் கைகளை அந்த சேற்றில் விட்டு தடவி தேடி கண்டுபிடித்து அணிந்தார். இங்கெ இவருக்கு கிடைத்தவை: கீறல்கள், உமையடிகள், தழும்புகள், ரத்தம் உறிஞ்சிய அட்டைகள். (இவையணைத்தும் மறுநாள் விடிந்ததும்தான் அவரால் பார்க்கமுடிந்தது.)
அந்த சேற்றை தாண்டி சில நேரத்துக்கு பிறகு அந்த கயிறு முடிவடையும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அது ஒரு பள்ளம். நீரோடும் சத்தம் அவரால் கேட்க முடிந்தது. அது ஒரு ஆறு என உணர்ந்தார். அதில் குதித்து தலை முதல் கால் வரை முக்கி எழுந்தார். அந்த இருட்டில் இரு குரல் கேட்டது. அவரது பெயரையும் எண்ணையும் கேட்டனர். இவர் சொன்னதுக்கு பிறகு, இவரை ஒருவர் கைகொடுத்து அந்த ஆறிலிருந்து வெளியேற்றினார். இன்னொரு அரை மணிநேரம் அதே சேற்றில் உட்கார்ந்திருந்தார். (அவர் நண்பர்கள் முடித்து வர காத்திருந்தார்).
எல்லாரும் முடித்த பிரகு, இவர்கள் படகு கப்பலில் ஏறி கப்பல்படை கப்பலுக்கு சென்று, அங்கிருந்து அவர்கள் அறைக்கு திரும்பினர்.
இவையணைத்தும் நம்மால் கேட்கத்தான் முடிந்தது. ஆனால், செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இதை தவிர்த்து எத்தனையோ சோதனைகள் இவர் தாண்டினார். எட்டு பேரிலிருந்து 4 பேரை தேர்வு செய்தனர். இவர் அந்த நாளில் ஒருவர். இவர்கள் நால்வரும் ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கே பல பயிற்சிகளை மேற்க்கொண்டனர். அப்போதும், அந்த நால்வரில் இவர்தான் முதன்மையாக இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், ரஷ்ய மொழியை வெகு எளிதாக கற்றுக் கொண்டார் என்றும் தகவல் தெரிந்தது. ஆனால், சில சோதனைக்குப் பிறகு, இவருக்கு பூஜ்யம் புவியீர்ப்பு விசை தேர்வில் இவர் கஷ்டப்பட்டதாலும், இன்னொருவருக்கு மருத்துவ சோதனையில் சில கோளாறு இருப்பதனாலும் நீக்கப் பட்டனர்.
இப்பொழுது மீதி இருவர் இன்னும் ரஷ்யாவில் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். மலேசிய விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷேய்க் முசாப்பார் ஷுகோர், 35. இவர் ஒரு மருத்துவர். பேக்-உப் (Back-up) விண்வெளி வீரராக பாயிஸ் காலிட், 26, ராணுவ பல் மருத்துவர்.
வனஜா அவர்கள் மலேசிய விண்வெளி கழகத்தில் ஆராய்சியாளராய் வேலை செய்கிறார். மலேசியாவில் விண்வெளி அறிவியலை பற்றி கண்காட்சிகளை நடத்துகிறார். தன்னைப் போல் மற்றவர்களும் முன்னேற வேண்டும்; தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இவரைப்போல் எத்தனையோ சாதனை பெண்கள் இருந்தாலும் இன்று இவரைப் பற்றியே பேச வேண்டும் என உள் மனதில் சொன்னதால் எழுதிய ஒரு கட்டுரை. இவரின் வீரம், விவேகம் மற்ற பெண்களும் கடைப்பிடிப்பதால் அவர்கள் வாழ்விலும் ஏதாவது சாதிக்கலாம். இவரது சாதனை மென்மேலும் உயர வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இதை எழுதும்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. வனஜாவும் நம்மைப்போல் ப்ளாக் எழுதுகிறார். அவருடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்ள எழுதுகிறார். அவைகளை படிக்க இங்கே (http://angkasawancandidate.blogspot.com/) சொடுக்கவும்.
பெண்கள் தினத்தை முன்னிட்டு மதி கந்தசாமி அவர்கள் 1 வாரத்துக்கு முன்பே பெண் பதிவர்களை அன்புடன் அழைத்து ஒரு பதிவு எழுதச் சொன்னார்.
இது என்னுடைய படைப்பு. அதே போல், இன்று மற்ற பெண் பதிவர்களின் வலைகளிலும் இதை விட அருமையான படைப்புகள் உங்களுக்கு விருந்தாக அமையவிருக்கின்றன.
/******************************
இதுவும் படித்து பாருங்க:
மலேசியா பெண்கள் - துர்கா
*******************************/



